நீங்கள் கடந்த ஒரு ஆண்டில் எத்தனை முறை லென்ஸ் கேமரா மூலம் புகைப்படம் எடுத்து கழுவி பிரிண்ட் போட்டீர்கள்? விமான நிலையத்திற்கோ டிராவல் ஏஜெண்டிடமோ நேரில் சென்று பயணச் சீட்டு வாங்கினீர்கள்? சரி லாண்ட் லைனை எத்தனை முறை உபயோகப்படுத்தி இருப்பீர்கள்?
இன்று நாம் நம் அன்றாட வாழ்க் கையில் அதிகம் உபயோகப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிக நேரம் செலவிடும் சேவைகள் எல்லாமே சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவைதான்! இன்டர்நெட் 1990, கூகுள் தேடுதல் 1998, ஸ்கைப் 2003, முகநூல் 2004, வாட்ஸ் அப் 2009-ல் கண்டுபிடிக் கப்பட்டது.
இவை இந்தியாவில் வந்து சரளமாக புழகத்துக்கு வர சில காலம் ஆனது. 20,25 வருடங்களுக்கு முன்பு இதெல்லாம் இல்லாமல் எப்படி வாழ்க்கை ஓடி இருக்கும் எனத் தோன்றுகிறதா?
மாற்றம் ஒன்றுதான் உலகில் மாற்றம் இல்லாதது என்பார்கள்! தொழில்நுட்ப வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. காட்டாற்று வெள்ளமாக வந்து, பழையவற்றை அடித்துச் சென்றுவிடும். HMT-யின் மெக்கானிக் கெடிகாரங்கள் இன்று எங்கே? தந்தி சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது. வங்கியில் இனி டிராவலர்ஸ் செக் வாங்குவோமா? டிராவலர்ஸ் செக் என்றால் என்ன என்றே பலருக்கும் தெரியாதே!
மக்களின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்பங்கள் வருகின்றன. அவை பெரும் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. அதைப் போலவே வாடிக்கையாளர்களின் மனப்போக்கையும். ரசனையையும் பொறுத்து சந்தைப்படுத்துதலும் விற்பனைமுறைகளும் மாறி விடுகின்றன.
கடைக்குச் சென்று மளிகை, காய்கறி வாங்குவதற்கு நேரம் இல்லாததாலோ அல்லது அந்த வேலை பெரிய போர் என நினைப்பதாலோ பலர் மொபைல் மூலமும் இன்டர்நெட் மூலமே அவற்றை ஆர்டர் செய்து வீட்டிலேயே பெறும் முறை வெகு வேகமாகப் பரவி வருகிறது.
உதாரணமாக Grofers எனும் இ-காமர்ஸ் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களோடு அழகுசாதனப் பொருட்கள், பழங்கள், பிரட் கேக் ஏன் புதிதாக பூக்களைக் கூட வீட்டில் வந்து கொடுக்கிறார்களாம். 7 லட்சம் பேர் அவர்களது செயலியை பதவிறக்கம் செய்துள் ளதாகத் தெரிகிறது. இன்று சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, மைசூரு, கொச்சி என சேவை செய்யும் இவர்களைப் போன்றவர்கள் மதுரை, திருச்சி, சேலம் ஈரோடு என வர அதிக நாட்களாகுமா என்ன?
இந்த சேவைகளை விரிவாக்கிக்கொண்டே போகிறார்கள் Delyver நிறுவனம் கறி, மீனுடன் ஐஸ்கிரீம் கூடக் கொண்டு வந்து கொடுப்பார்களாம். இவர்கள் டிரை கிளீனிங்கிற்கும் டைஅப் வைத்துக்கொண்டு உதவுகிறார்களாம்!
வாடிக்கையாளர் தேவைதான் விற்பனை என்பதன் அடிவேர்! அதைக் காலத்திற்கேற்றவாறு புரிந்து கொண்டால் வானமே எல்லை!! காலத்திற்கேற்ப நடந்து கொள்வது செல்வத்தைத் தம்மைவிட்டு நீங்காமல் பிணைத்து வைக்கும் கயிறு என்கிறது குறள்!
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு -குறள் 482
somaiah.veerappan@gmail.com