riyas.ma@hindutamil.co.in
கரோனா காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களில் முக்கியமானதாக திருமண நடைமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிப்பிடலாம். இந்தியாவைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது சமூக, கலாச்சார ரீதியாக மிக முக்கியமானதொரு நிகழ்வு. இந்தியர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் செலவுமிக்க நிகழ்வும் அதுதான். சமீப காலங்களாக திருமணம் சார்ந்த செலவினங்கள் பல மடங்கு உயர்ந்தன. முன்பெல்லாம் உணவு, மண்டப செலவு, ஆடைகள், ஆபரணங்கள் போன்றவற்றுக்கான செலவுகள் மட்டுமே.
ஆனால், தற்போது திருமணத்துக்கு முந்தைய புகைப்பட நிகழ்வுகள், அழகு நிபுணர்கள், டெகரேஷன், கச்சேரி என திருமண செலவுகள் புதிதாகச் சேர்ந்துள்ளன. திருமண நிகழ்ச்சியைக் கொண்டாட கடன் வாங்கியாவது செலவு செய்திட தயாராக இருக்கிறார்கள். இதனால் திருமணம் என்பது எந்தளவுக்கு கொண்டாட்ட நிகழ்வோ அதே அளவுக்கு அது அந்த குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படுத்தும் நிகழ்வாகவும் மாறிவிட்டது. இப்படி நாளுக்கு நாள் திருமணங்கள் செலவுமிக்கதாக மாறிக்கொண்டிருந்தச் சூழலில் கரோனா ஊரடங்கு காலம் திருமண நடைமுறைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மார்ச் மாத இறுதிக்குப் பிறகு திருமணத்தை நடத்த திட்டமிட்டவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மண்டபத்தை பதிவு செய்தது முதல் சாப்பாடு, புத்தாடைகள், வாகன ஏற்பாடுகள் என அனைத்துவிதமான ஏற்பாடுகளும் நின்றுபோயின. சிலர் திருமணத்தை பிறகு நடத்திக் கொள்ளலாம் என்று ரத்து செய்தனர். பலர், குறித்த தேதியில் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்தனர். ஆயிரம் பேர் கூடும் திருமணங்கள் பத்து பேருக்கும் குறைவானவர்கள் முன்னிலையில் நடைபெற்றன.
மண்டப செலவு, உணவு செலவு, புகைப்பட செலவு என எதுவும் இல்லை. லட்சங்களில் திட்டமிட்டிருந்த திருமணச் செலவு ஆயிரங்களில் சுருங்கியது. தற்போது ஸ்கைப், வாட்சப் ஆகியவற்றில் கானொலி மூலமாகவே கூட திருமணங்கள் நடைபெறுகின்றன. இனி வரும் காலங்களில் உறவினர்கள் வீடியோ கால்களின் வழியே திருமணத்தில் கலந்துகொள்வது இயல்பான ஒன்றாக மாறிவிடும். வாழ்த்தும் அட்சதையும் வீடியோ கால்களிலேயே முடிந்துவிடும். மொய் வைப்பது கூகுள் பே, பேடிஎம் வழியே நடக்கலாம். கரோனா காலத்தில் திருமணங்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை விரும்ப ஆரம்பித்துள்ளனர்.
காரணம், இந்திய நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கை முறையை தீர்மானிப்பதில் திருமண நிகழ்வு முக்கியப் பங்கு வகிக்கிறது. திருமணம், வீடு வாங்குதல், மருத்துவம் ஆகியவற்றுக்கே இந்திய நடுத்தர குடும்பங்கள் அதிகம் செலவிடுகின்றன. தங்களின் பொருளாதார சக்திக்கு ஏற்ப திருமணங்களைத் திட்டமிடும் சூழல் இங்கு இல்லை. பெரும்பாலும் சொந்தங்களைத் திருப்திப்படுத்தவும், கவுரவத்துக்காகவும் கடன் வாங்கியாவது திருமணங்களை ஜோராக நடத்தவே எல்லோரும் விரும்புகின்றனர். இதனால் பொருளாதார ரீதியாக பின் தங்கி இருப்பவர்களும் தங்கள் சக்திக்கு மீறி திருமணத்துக்கு செலவிடப்பட வேண்டிய நிர்பந்தம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மிகக் குறைவான செலவுகளோடு திட்டமிட்டால் கூட திருமணம் 5 லட்சம் ரூபாயை சாதாரணமாகத் தின்றுவிடுகிறது. திருமணங்களுக்கு வாங்கிய கடனை அடைக்கவே காலமெல்லாம் வேலை செய்யும் அளவுக்குக் கூட சிலர் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இளம் வயதினர் பலர் வேலைக்குச் சேர்ந்த முதல் ஐந்து வருடம் வருமானத்தை திருமணத்துக்கான செலவுகளுக்காகத் திட்டமிட வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். சகோதரிகளுக்குத் திருமணம் செய்வதற்காக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே காலத்தில் திருமணம் செய்யாமல், அதன்பிறகு திருமணம் செய்யவே முடியாமல் தியாகிகளாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.
இந்தச் சூழலில்தான் ஆடம்பர செலவுகள் எதுவுமில்லாமல், கடன் வாங்க வேண்டிய அவசியாம் இல்லாமல் எளிமையாக திருமணங்களை நடத்தலாம் எனச் சாத்தியப்படுத்தியிருக்கிறது இந்த கரோனா காலகட்டம். கரோனா ஏற்படுத்திருக்கும் இந்த மாற்றம் திருமணச் செலவினங்கள் தொடர்பான நமது பார்வையை மாற்றி அமைப்பது பலரின் பொருளாதார சூழலுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.