ரு.பாலசுப்ரமணியன்
rubalu@gmail.com
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று எண்ணிக்கை, பொருளாதார இழப்பு என நாடு தடுமாற்றத்தை சந்தித்துவரும் இந்த வேளையில், மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் கடும் விமர்சனத்தையும், சர்ச்சையையும் கிளப்புகிறது. மக்கள் நலத்திட்டங்கள், நிதிப் பங்கீடு, சட்டத் திருத்தங்கள் என எந்தவொரு முக்கிய நடவடிக்கைகளிலும் மாநில அரசுகளுடனும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடனும் முழுமையாக கலந்தாலோசிக்காமால் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துவருவது மத்திய அரசின் மீதான குற்றச்சாட்டாக இருக்கிறது. இதனால் பல சமயங்களில் அரசின் முடிவுகள் எந்தத் தரப்புக்காக எடுக்கப்பட்டதோஅந்தத் தரப்புக்கே பாதகமாக அமைந்துவிடுகிறது.
அவ்வாறான பாதாக அம்சங்கள் நிறைந்த ஒன்றுதான் வேளாண் விளைபொருள் விற்பனை தொடர்பாக ஜூன் மாதத்தில் மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டங்கள். இதுவரையில் வேளாண் விளைபொருள் விற்பனையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுகளின் கையில் இருந்தது. இந்நிலையில், மாநில அரசுகளின் அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில்,வேளாண் விளைபொருள் விற்பனை மற்றும் ஒப்பந்தம் முறைகள் தொடர்பாக இரண்டு அவசரச் சட்டங்களையும், 1955 ஆண்டு உருவாக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் திருத்தங்களையும் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.
நடைமுறையிலிருந்த சட்டம்
நமது நாட்டிலுள்ள விவசாயிகளில் ஏறத்தாழ 90 சதவீதத்தினர் சிறு, குறு உற்பத்தியாளர்கள். அவர்களால் பெரிய சந்தைப்படுத்துதலை மேற்கொள்ள முடியாது. பெரும்பாலானோர் கடனாளிகளாக உள்ளதால் உற்பத்தி செய்தவற்றை உடனடியாக விற்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர். அவர்களின் இத்தகைய நெருக்கடிச் சூழலை வியாபரிகளும் இடைத்தரகர்களும் பயன்படுத்திக்கொள்கின்றனர். அதாவது விளைபொருளை உடனடியாக விற்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் அப்பொருட்களை வாங்கி வந்தனர். இதனால் விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்காமல் இருந்தது.
இந்த முறைகேடுகளைத் தடுக்கும் விதமாக வேளாண் உற்பத்திப்பொருட்கள் விற்பனைக்குழுச் சட்டங்கள் (Agricultural Produce Marketing Committee Acts) கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அங்கீகரிக்கப்பட்ட சந்தைப் பகுதிகள் அல்லது ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் மண்டிகள் மூலமே விற்க முடியும். அந்த விளை பொருள்களை வாங்கும் வியாபாரிகள் விற்பனைக்குழுவின் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்தச் சட்டங்களால் வேளாண் சந்தைகளில் நிலவி வந்த முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் களையப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்ட, வெளிப்படையான சந்தை உருவாக்கப்பட்டது.
இச்சட்டங்கள் ஒரு சில மாநிலங்களில் திறம்பட நடைமுறைப்படுத்தப்படாமல் பெயரளவில் மட்டுமே இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாக இதுதான் நடைமுறையாக இருந்துவந்தது. இந்நிலையில்தான் இந்த விற்பனைக் குழு சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ‘வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் -2020’, ‘உழவர்கள் விலை மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசரச் சட்டம் -2020’ஆகிய அவசரச் சட்டங்களைமத்திய அரசு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் வாதம்
நடைமுறையில் இருந்த உற்பத்திப்பொருட்கள் விற்பனைக் குழுச் சட்டங்களில் விவசாயிகள் தங்கள் விருப்பம்போல் விற்க பல்வேறு தடைகள் இருக்கின்றன. விற்பனைக் குழுக்களில் நடைபெறும் விளைபொருட்களின் ஏல விற்பனையை வியாபாரிக் குழுக்கள் கட்டுப்படுத்துகின்றன. புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கும் சட்டங்கள், வேளாண் விளைபொருள் விற்பனையில் இருக்கும் தடைகளை நீக்கி, வேளாண் சந்தைகளில் போட்டியை ஏற்படுத்தும். விவசாயிகள் தங்கள் விளைபொருளை நாட்டின் எந்தப் பகுதிகளுக்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம்.வேளாண் வர்த்தகம் விரிவடையும் என்று மத்திய அரசின் தரப்பு வாதிடுகிறது.
அவசியமற்ற அவசரச் சட்டம்
ஆனால் யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது. பெரும் எண்ணிக்கையிலான உழவர்கள் பயிர் சாகுபடிச் செலவுக்கே பணமின்றி, தங்கள் விளைபொருட்களை எந்த வியாரிகளிடம் விற்கப்போகிறாரோ அவர்களிடமிருந்தே கடன் பெற்றுத்தான் சாகுபடியையே தொடங்குகிறார்கள். தங்கள் விளைபொருட்களை சாகுபடிக்கடன் கொடுத்த வியாபாரிகளுக்கே விற்பதாக உறுதியளித்துதான் அந்தக் கடனை பெற முடிகிறது. இத்தகைய சூழ்நிலையில்தான், கடன் சந்தையும் (credit market) விளைபொருள் சந்தையும் (output market)ஒன்றோடொன்று பின்னி, ‘பிணைந்த சந்தைகள்’(interlocking of agrarian markets) உருவாகின்றன.
சொல்லப்போனால் இது சட்டவிரோதமான வர்த்தகம்தான்.இந்நிலையில் புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கும் அவசரச் சட்டங்கள் இத்தகைய சட்டவிரோதமான சந்தைப்படுத்தலை சட்டபூர்வமானதாக ஆக்கிவிடுகிறது. இந்த சூழல் விலை நிர்ணயத்தில் வியாபாரிகளின் கை ஓங்குவதற்கே வழி செய்யும். மட்டுமல்லாமல் சிறு, குறு விவசாயிகளின் ‘சந்தைப்படுத்தும் அளவிலான உபரி உற்பத்தி’(marketable surplus) மிகக்குறைவாக இருப்பதால், அதிக விலை கிடைத்தாலும்கூட தொலைவிலுள்ள சந்தைக்கு தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வது பொருளியல் ரீதியில் சாத்தியமில்லை. எவ்வகையில் பார்த்தாலும் இந்த அவசரச் சட்டங்களால் விவசாயிகளுக்கு எவ்விதப் பலனும் சென்றடையப் போவதில்லை. மாறாக. வியாபாரிகளுக்கே இந்த அவசரச் சட்டங்கள் பயனளிக்கும்.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தம்
1960களில் பசுமைப்புரட்சி ஏற்படுவதற்கு முன்பு வரை நாட்டில் உணவுப் பற்றாக்குறை நிலவியது. அப்போது, அந்தப் பற்றாக்குறையைப் பயன்படுத்தி பதுக்கல்காரர்களும் கள்ளச்சந்தைக்காரர்களும் உணவுப்பண்டங்களைப் பதுக்கி செயற்கையான உணவுப் பஞ்சத்தை உண்டாக்கி நுகர்வோர்களைச் சுரண்டிவிடாமல் தடுப்பதற்காக ‘அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்’ 1955ல் இயற்றப்பட்டது. அதன்படி, உணவுத் தானியங்களையும் பிற உணவுப் பண்டங்களையும் சேமிப்புக் கிடங்குகளில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சேமிப்பது (பதுக்குவது) தடை செய்யப்பட்டது.
தற்போது இந்தச் சட்டத்திலும் மத்திய அரசு திருத்தங்கள் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், தானியங்கள், பயறு வகைகள் ஆகியவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் இனி பெரு நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் எந்தக் கட்டுப்பாடின்றி இந்தப் பொருட்களை சேமித்துக்கொள்ளலாம். இதன் மூலம் சேமிப்புக் கிடங்குகள் உருவாக்குதல், உணவுப் பதனம் செய்தல் போன்ற தொழில்கள் நல்ல ஊக்கம் பெற்று அதன் பலன்கள் உழவர்களுக்குக் கிடைக்கும் என்று அவசரச்சட்டத்தின் ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள்.
சேமிப்புக் கிடங்குகளிலும் உணவுப்பதப்படுத்தலிலும் தனியார் முதலீடு பெருகுவதால் உழவர்களுக்கு என்ன பலன்?அத்தகைய தொழில்களில் முதலீடு செய்பவர்கள் இச்சட்டத் திருத்தத்தின் மூலம் கிடைக்கப்பெறும் அனுகூலத்தை உழவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள் என்பதற்கு எந்த முன்னுதாரணமோ, கோட்பாட்டு ரீதியான முகாந்திரமோ கிடையாது. அவர்கள் சிறு, குறு விவசாயிகளின் பரிதாப நிலையை ஏற்கனவே நன்கு 'புரிந்து' வைத்துள்ளனர். அந்த வகையில் இந்தச் சட்டத் திருத்தத்தை தொழில் முதலீட்டாளர்கள் தங்களுக்குச் சாதகமாகத்தான் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது நிதர்சனம்.
என்ன செய்ய வேண்டும்?
அறுவடை செய்யப்பட்ட பயிரை உடனடியாக விற்றாக வேண்டிய கட்டாயத்திலுள்ள உழவர்களை வியாபாரிகளின் பேர வலிமையிலிருந்து காக்க வேண்டுமானால் பொதுத்துறை முதலீடு அல்லது உழவர் கூட்டுறவுகளின் மூலம் பரந்துபட்ட சேமிப்புக்கிடங்குகளையும், வாய்ப்பிருக்கும் இடங்களில் விளைபொருள் பதனப்படுத்தும் தொழில்களையும் நிறுவ வேண்டும். அத்தகைய சேமிப்புக் கிடங்குகளில் தற்காலிகமாக விளைபொருளைச் சேமித்து வைக்க முன்வரும் சிறு, குறு விவசாயிகளுக்கு சேமிப்புக் கிடங்கு ரசீதின் அடிப்படையில் குறைந்த வட்டியிலான கடன் அளிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதுவே, அவர்களை சந்தை விதிகளின் பிடியிலிருந்தும் வியாபாரிகளின் தலையீடுகளிலிருந்தும் காக்க உதவும்.
இரண்டாவதாக, காய்கறி, பழங்களின் உற்பத்தி சற்றே அதிகரித்தாலும் பெரும் விலைச் சரிவு ஏற்படுவதுடன், பெரும்பகுதி அழுகிக் கெட்டுப்போகும் நிலையும் அடிக்கடி நிகழ்கிறது. மறுபுறமோ கோடிக்கணக்கான கிராமப்புற ஏழைகள் காய்கறி, பழங்கள் போன்றவற்றை வாங்கும் சக்தியற்றவர்களாக, வெறும் தானியங்களையே அதிகமாக உண்டு சரிவிகித உணவின்றி ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கும் நோய்களுக்கும் ஆளாகின்றனர்.
அவர்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் தொழிற்துறை வளர்ச்சியை ஊக்குவித்தாலே வேளாண் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதுடன் ஊட்டச்சத்து மிக்க மனித வளமும் நாட்டுக்குக் கிடைக்கும். அதை விடுத்து உணவுப்படுத்துதல், ஏற்றுமதி என்று மட்டுமே பேசி கொண்டிருப்பதில் என்ன பயன்? தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டங்கள், வேளாண் துறையில் பெரு முதலாளிகள் ஆதிக்கம் செலுத்தவே வழிவகுக்கும்