வணிக வீதி

அலிபாபாவுக்கு என்னவாயிற்று?

செய்திப்பிரிவு

அலிபாபா இந்தப் பெயர் இ-காமர்ஸ் துறையினர் மட்டுமல்ல சாதாரண வாடிக் கையாளர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம். சீனாவைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஜாக் மா-வால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம். இ-காமர்ஸ் துறையில் இன்று சர்வதேச அளவில் பிரபலமாக திகழ்கிறது.

ஓராண்டுக்கு முன்பு இந்நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிட்டது. அப்போது வேறெந்த நிறுவனத்துக்கும் இல்லாத அளவுக்கு இந்த நிறுவன பங்குகளை வாங்கிக் குவித்தனர். 2,500 கோடி டாலர் அளவுக்கு ஐபிஓ மூலம் இந்நிறுவனம் திரட்டியது. இதெல்லாம் ஓராண்டுக்கு முந்தைய கதை. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது.

கடந்த ஆண்டு இந்நிறுவனம் ஐபிஓ வெளியிட்ட போது ஒரு பங்கின் விலை 68 டாலராக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் முதல் நாளில் இப்பங்கு விலை 92.70 டாலருக்கு வர்த்தகமானது. அடுத்த மூன்று மாதங்களில் இப்பங்குகளின் விலை 27 சதவீத அளவுக்கு உயர்ந்தது. நவம்பர் மாதம் ஒரு பங்கின் விலை அதிகபட்சமாக 119.15 டாலராக இருந்தது.

கடந்த வாரம் இந்நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு ஓராண்டானது. பங்கின் விலையோ நிர்ணயிக்கப்பட்ட ஐபிஓ விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு சரிந்தது. 64.35 டாலராக இருந்தது. உச்சபட்ச விலையைக் காட்டிலும் இந்நிறுவனப் பங்கு விலை 45 சதவீதம் சரிந்துவிட்டது.

பொது நிறுவனமாக இந்நிறுவனம் மாற்றப்பட்ட பிறகு கடந்த ஆண்டு நவம்பரில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. ஆனால் அலிபாபா நிறுவனத்தின் வளர்ச்சி மிகைப்படுத்தப்பட்டு விட்டதாக சந்தை நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர்.

ஆனால் மற்றவர்களோ அமெரிக்காவில் `சைபர் மன்டே’ வர்த்தகத்தை அலிபாபாவின் `சிங்கிள் டே’ வர்த்தகம் மிஞ்சிவிட்டதாக அலிபாபா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் `சிங்கிள் டே’ விற்பனையில் அதிக அளவுக்கு பொருள்களை விற்பனை செய்து சாதனை படைத்த நான்கு நாள்களில் இந்நிறுவனப்பங்கு விலை 4 சதவீதம் இறங்கி விட்டது. பங்குச் சந்தையில் நுழைந்ததிலிருந்து இந்நிறுவனம் சந்தித்த மிகப் பெரிய சரிவு இதுதான். இதுமட்டுமல்ல கடந்த வாரம் 25 பங்கு தரகு நிறுவனங்கள் அலிபாபா பங்கு விலைகளை கடுமையாக குறைத்து கணித்தன.

வரும் நிதி ஆண்டில் அலிபாபா நிறுவன வர்த்தகம் அதிகமாக இருந் தாலும் அந்நிறுவன பங்கு விலை குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. மார்கன் ஸ்டான்லி, மெக்காரி ஆய்வு மற்றும் டாயிஷ் வங்கி ஆகிய அனைத்துமே சீன பொருளாதாரத்தால் அலிபாபா பங்கு விலைகள் சரியும் என கணித்துள்ளன.

அலிபாபா நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை உத்தி மற்றும் அந்நிறுவனம் சீனாவில் தலைமையகத்தைக் கொண்டிருந்தாலும் அது கேமேன் தீவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தணிக்கை அறிக்கையில் அமெரிக்க நிறுவனம் என்றோ அல்லது சீனாதான் தலைமையகம் என்றோ குறிப்பிடப்படவில்லை. இதுவும் முதலீட்டாளர்கள் மத்தியில் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரு நாள் வர்த்தகத்தில் அலிபாபா நிறுவனம் 27.80 கோடி பொருள்களை டெலிவரி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த அளவானது அமேசான் நிறுவனம் புரியும் வர்த்தகத்தை விட 7.5 மடங்கு அதிகம்.

அலிபாபா நிறுவனம் ஆண்டுக்கு 806 கோடி பார்சல்களை டெலிவரி செய்ததாகக் கூறுகிறது. அலிபாபா நிறுவனத்தின் முழு நேர பணியாளர் எண்ணிக்கை 35 ஆயிரம். அமேசானில் 1.5 லட்சம் பணியாளர்களும், யுபிஎஸ் நிறுவனத்தில் 4.35 லட்சம் பணியாளர்களும் உள்ளனர்.

மற்ற நிறுவனங்களை விட அதிக பொருள்களை டெலிவரி செய் துள்ளதாகக் கூறும் அலிபாபாவுக்கு குறைந்த ஊழியர்களால் எப்படி சாத்தியமாகும் என்று சந்தை வல்லுநர்கள் கேட்கின்றனர். அமேசா னில் ஊழியர்கள் மட்டுமின்றி ரோபோ எனும் எந்திர மனிதனும் டெலிவரியில் ஈடுபடுத்தப்படுகிறான்.

சீன பொருளாதாரம் காரணமாக அலிபாபா பங்குகள் சரிந்தது என்றால் அது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். ஆனால் தகவல்கள், செயல்பாடுகள் தவறாக இருந்தால்...

SCROLL FOR NEXT