சுப. மீனாட்சிசுந்தரம்
somasmen@gmail.com
நேரம் காட்டும் ஒரு பயன்பாட்டு பொருளை ஃபேஷன் ஆபரணமாக மாற்றியதில் டைட்டன் நிறுவனத்துக்கு மிகப்பெரும் பங்கு இருக்கிறது. கடந்த 35 ஆண்டுகளில் டைட்டன் கைக்கடிகார சந்தையில் ஏற்படுத்திய மாற்றங்கள் அதன் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் வித்திட்டது என்றால் மிகையாகாது. 1970களின் மத்தியில் டாடா நிறுவனம் கைக்கடி காரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ஆரம்பிக்க திட்டமிட்ட போது அப்போதிருந்த சட்டதிட்டங்கள், விதிமுறைகள் இடம் கொடுக்கவில்லை.
கடிகாரங்களைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலைக்குரிய LETTER OF INTENT என்ற விருப்பக்கடிதமும், உரிமமும் அச்சமயத்தில் TIDCO தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வசம் இருந்தது. 1986 ஆம் ஆண்டில், டாட்டா இண்டஸ்ட்ரீஸ் தமிழ்நாடு இரண்டையும் இணைத்து சுருக்கமாக டைட்டன் TITAN என்ற பிராண்டை உருவாக்கியது. மேலும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த EBAUCHES என்ற நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் அதிதொழில்நுட்பத்துடன் ஓசூரில் உற்பத்தியைத் தொடங்கியது.
ஜப்பானைச் சேர்ந்த சிட்டிசன் தொழில்நுட்பத்தில் உருவான HMT கடிகாரங்களும் சீக்கோ தொழில்நுட்பத்துடன் உருவான ஆல்வின் கடிகாரங்களும் இந்தியச் சந்தையில் பிரபலமாக இருந்தாலும், அவற்றை போட்டியாகக் கருதாமல் வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்டு வந்த கடிகாரங்களை முதன்மை போட்டியாளராக டைட்டன் கருதியது. அந்தப் போட்டியில் தனக்கென சந்தையை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தது.
அப்போதெல்லாம் ஒருவர் அதிகபட்சம் வாழ்நாளில் ஒன்று அல்லது இரண்டு கைக்கடிகாரங்கள் மட்டுமே வாங்கியிருப்பார்கள். அந்த நிலையை மாற்றி மீண்டும் மீண்டும் வாங்கத் தூண்டும் வகையிலும், விழாக்காலங்களில் பரிசளிப்பதற்கும் ,அன்பை வெளிக்காட்டும் வகையிலும் டைட்டன் கடிகாரங்களின் விளம்பரங்கள் அமைந்தன. மொஸார்ட்டின் 25 வது சிம்பொனியை தனது விளம்பரங்களுக்கு பயன்படுத்தியது அந்த காலகட்டத்தில் யாரும் கேள்விப்படாத ஒன்று. இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ்மேனன், ஐஸ்வர்யா ராய், இயக்குனர் பால்கி போன்றவர்களும் டைட்டனின் விளம்பரங்களில் பங்கெடுத்துள்ளனர். டைட்டனின் இதுபோன்ற வியாபார உத்திகள் இந்த புத்தகத்தில் இருக்கின்றன!
தொடர்ச்சியாக தனிஷ்க் என்ற நகை விற்பனை தொழிலில் இறங்கியது டைட்டனின் அதிரடியான முடிவு என்றே கூறலாம். நகை வியாபாரம் என்பது சாதாரண குடும்ப தொழிலாகவும், நகைகள் கைகளால் செய்யப்பட்டும் வந்த நிலையில் இதை தொழிற்சாலை மூலமாக தயாரிப்பதும், கார்ப்பரேட் நிறுவனத்தின் மூலம் விற்பது என்பதும் சற்று சிக்கலானது. தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க டைட்டான் காரட்மீட்டர் என்ற இயந்திரத்தை இறக்குமதி செய்து தனது ஒவ்வொரு கடைகளிலும் அவற்றை நிறுவியது. தங்கள் கடைகளுக்கு நகை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் தங்களிடமுள்ள கேரட் குறைந்த தங்க நகைகளை 22 கேரட் நகைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம் என்கிற 19க்கு22- திட்டத்தை அறிமுகப்படுத்தி மிகப்பெரும் வெற்றியை கண்டது.
டைமெக்ஸ் நிறுவனத்துடனான கூட்டு முயற்சி தோல்வி அடைந்திருந்தாலும் ஸ்வாட்ச் மற்றும் ஃபாஸ்ட் ட்ராக் பிராண்டுகள் இளைஞர்களைக் கவரும் வண்ணம் வடிவமைத்து அதன் ஷோரூம்கள் இளமையும் புதுமையும் கொப்பளிக்கும் வகையில் அமைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்தது. இந்த பிராண்டின் நீட்சியாக ஹேண்ட் பேக்குகள், பேக் பேக்குகள், லெதர்பெல்ட், வாலெட், போன்றவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு சந்தையில் பெரும் வெற்றியைப் பெற்றன. கண் மருத்துவர்களின் பரிந்துரைப்படி கண்ணாடிகளை தயாரித்து வழங்கும் வழக்கமான கடைகளுக்கு மாற்றாக, டைட்டான் ஐ பிளஸ் ஷோரூம்களை அமைத்து , OPTOMETRIST என்ற விழிப்பார்வை தேர்வாய்வாளர் தகுதி பெற்ற ஊழியர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வியாபாரமும் சக்கை போடு போடுகிறது.
இந்த வெற்றிகளைத் தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக அளவில் பயன்படுத்தாத நறுமணத் திரவியங்கள் சந்தையில் "ஸ்கின்" என்ற வாசனை திரவியத்தையும் "டானீரா" என்கிற சேலை வரிசைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுப்பதும், புதிய தயாரிப்புகளையும் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது டைட்டனின் வெற்றிக்கு காரணம் ஆகும்.
டாடா குடும்பத்தில் இருந்து புறப்பட்ட டைட்டன் நிறுவனம் இந்தியர்கள் மத்தியில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிராண்டாக உருவானதன் காரணத்தை தெள்ளத் தெளிவாக இந்து பிசினஸ் லைன் பத்திரிகையாளரான திரு வினய் காமத் சுவைபட தந்திருக்கிறார் மேலாண்மை, படித்து வரும் மாணவர்களுக்கும், நிறுவனங்களிலும், தொழில் துறைகளிலும் நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள புத்தகமாக இருப்பது இதன் சிறப்பு.