சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர்,
ப்ரகலா வெல்த் மேனேஜ்மெண்ட் பி.லிட்.
CP@prakala.com
இதுவரை உலகம் வேளாண் புரட்சி, தொழிற் புரட்சி எனப் பல புரட்சிகளைக் கண்டிருக்கிறது. இன்று அடுத்த கட்ட பாய்ச்சலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. எல்லா நெருக்கடியிலும் பல வாய்ப்புகளும் உருவாகும். தற்போது கரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியில் அப்படியொரு மகத்தான வாய்ப்பு தொழில்துறைக்கு கிடைத்திருக்கிறது. அதுதான் டிஜிட்டல் புரட்சி. இன்னொரு வகையில் கூற வேண்டுமானால் கற்காலம், உலோகக் காலங்களுக்குப் பிறகு, நாம் தற்பொழுது தகவல் தொழில் நுட்பக் காலத்தில் (Information Age) உள்ளோம்.
தொழிற்புரட்சி இங்கிலாந்தில் தொடங்கி, ஐரோப்பா முழுவதும் பரவியது. பிறகு பல நாடுகளுக்கும் பரவியது. இப்பொழுது டிஜிட்டல் புரட்சி அமெரிக்காவில் தொடங்கி பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், எங்கு புரட்சி ஆரம்பிக்கிறதோ அந்நாட்டு நிறுவனங்கள் அப்புரட்சியில் முன்னணியில் உள்ளன. அதனால் அதன் எல்லா பொருளாதார லாபத்தையும் அந்நாட்டு நிறுவனங்களே பெறுகின்றன. டிஜிட்டல் சந்தையில் இந்தியா பெரிய நாடாக இருந்தும் நாம் இன்னும் நுகரும் நாடாகவே இருக்கிறோமே தவிர, வருவாய் ஈட்டும் நாடாக இல்லை.
இந்த தகவல் தொழில்நுட்ப புரட்சி யுகத்தில் பல கூறுகள் உள்ளன. உதாரணத்துக்கு ஹார்டுவேர், சாஃப்ட்வேர், ஐ.டி. சர்வீசஸ், செமிகண்டக்டர், இண்டெர்நெட், டேட்டா கம்யூனிகேஷன், சர்வீஸ் புரொவைடர் என்று பல உள்துறைகள் உள்ளன. அதேபோல் இதை ஒரு டெக்னாலஜி தீம் அடிப்படையில் பார்த்தோமேயானால், புதிதாக வளர்ந்து வரும் ஏரியாக்களாவன: ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நுட்பம்(AI – Artificial Intelligence), கிளவுட் கம்ப்யூட்டிங், டிரைவர் தேவைப்படாத கார் அதாவது அட்டானமஸ் கார்ஸ் (Autonomous Cars), 5ஜி, எலக்ட்ரானிக் பேமண்ட்ஸ், ஓ.டி.டி (Over the Top Streaming) போன்ற பல தொழில்நுட்பங்கள் இப்பொழுது பெரிய அலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. மேலே குறிப்பிட்ட பல உள்துறைகளில் இந்தியா ஐ.டி சர்வீசஸில் ஓரளவு கால் பதித்துள்ளது என்று கூறலாம். அதேபோல் வளர்ந்துவரும் டெக்னாலஜிகளில் எலக்ட்ரானிக்ஸ் பேமண்ட்ஸில் ஓரளவு கால் பதித்துள்ளோம் என்று கூறலாம். மீதமுள்ள பல உள்துறைகளிலும், வளர்ந்துவரும் டெக்னாலஜிகளிலும் நாம் கால் பதிக்கவில்லை என்று கூறினால் மிகையாகாது.
வேளாண்மை மட்டுமே செய்துவந்த காலத்தில் ஒரு நாட்டின் மக்கள் தொகைதான் அதன் பொருளாதாரமாக இருந்தது. அப்பொழுது இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஜி.டி.பி உலகளவில் முன்னிலை வகித்தது. அதன்பின் தொழிற்புரட்சிக் காலத்தில் உற்பத்தித்திறன்தான் முன்னிலை வகுத்தது. இது இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளை வளரச் செய்தது. தற்போது உருவாகியுள்ள இந்தத் தகவல் தொழில்நுட்ப புரட்சியில், ஒரு நாட்டின் டிஜிட்டல் பவர்தான் அந்நாட்டின் பொருளாதாரமாக உள்ளது; மேலும் அந்நாட்டை உலகளவில் முன்னிலையில் நிறுத்துகிறது. நம்நாடு ஒரு வல்லமைபெற்ற நாடாக மாற இந்த டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தும் நாடுகளில் ஒன்றாக நாம் மாற வேண்டியிருக்கிறது. இதுவரை இந்த டிஜிட்டல் புரட்சியை நுகரும் நாடாகத்தான் நாம் உள்ளோம். இந்நிலை மாற வேண்டும். இன்றைய உலகில் டேட்டாதான் பவர்.
சீன அரசின் மறைமுக ஆதரவு
ஃபேங் (FAANG – Facebook, Amazon, Apple, Netflix, Google) பங்குகள் அமெரிக்காவில் பிரசித்தம். இந்த 5 நிறுவனங்களின் சந்தை மதிப்பு இன்றைய அளவில் 5 டிரில்லியன் டாலர்களுக்கும் (சுமார் ரூ 3.75 லட்சம் கோடிக்கும்) மேல். இத்துடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை சேர்த்தோமேயானால் 6.5 டிரில்லியன் டாலர்களுக்கும் (ரூ 4.87 லட்சம் கோடிக்கும்) மேல் சென்றுவிடும். அதே சமயத்தில் இந்தியாவில் தேசீய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ 1.10 லட்சம் கோடிக்கும் சற்றே அதிகம். இந்த மதிப்பின் மூலம் டிஜிட்டலின் பவர் உங்களுக்கு புரிந்திருக்கும்.
இந்தியா உலகளவில் அதிகமான என்ஜினியர்களை உருவாக்குகிறது – அதிலும் குறிப்பாக கம்ப்யூட்டர் என்ஜினியர்களை உருவாக்குகிறது. நமது என்ஜினியர்கள்தான் உலகம் முழுவதும் பல நாடுகளின் தகவல் தொழிநுட்ப சந்தையை உருவாக்குகிறார்கள்/ நிர்வகிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு சவால் நிறைந்த தொழில் வாய்ப்புகளும் பணி வாய்ப்புகளும் உள்நாட்டில் இல்லை. உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக டெக்னாலஜி நிறுவனங்கள் பெரிய அளவில் சீனாவில்தான் வளர்ந்துள்ளன. டென்சென்ட் (Tencent), அலிபாபா (Alibaba), பைடு (Baidu), வாவே (Huawei), ஷாவ்மி (Xiaomi), லெனோவோ (Lenovo), இஸட்.டி.இ (ZTE) எனப் பல நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களோடு போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துள்ளன. இதற்கு ஒரு முக்கியக் காரணம் சீன அரசாங்கத்தின் மறைமுக ஆதரவு என்று கூறினால் மிகையாகாது. எனவேதான் சீனா தொழிற்புரட்சிக்கு அடுத்தபடியாக, தகவல் தொழில்நுட்ப புரட்சியிலும் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.
தகவல் தொழிநுட்பத்தில்...
இந்தியா தொழிற்புரட்சியில் ஓரளவுக்கு சிறப்பாக செயலாற்றியது என்று கூறலாம். பல பொதுத் துறை நிறுவனங்கள் திறக்கப்பட்டன. தனியார் துறையும் ஓரளவு நன்றாகவே வளர்ந்தது. இன்றும் நமது அரசாங்கம் உற்பத்தித் துறையை வளர்க்க பல முயற்சிகள் செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இடைப்பட்ட காலத்தில் மலிவான சீன இறக்குமதியை நம்பி நாம் இருந்துவிட்டதால், உற்பத்தித் துறையில் உலகளவில் பெயர் சொல்லும் அளவிற்கு இந்தியா வளரமுடியாமல் போய்விட்டது. அதேபோல் இதுவரையிலும் தகவல் தொழிநுட்பத்திலும் நம் இந்திய நிறுவனங்கள் பெரிய அளவில் கால் பதிக்கவில்லை என்றே கூற வேண்டும்.
இந்நிலை மாற வேண்டும். தகவல் தொழில்நுட்பத்தில் நாம் முன்னேறுவதற்கு, அரசாங்கமும் நிறுவனங்களும் மனது வைத்தால், முடியும் என்பதற்கு சில உதாரணங்களை நம்மால் காண முடிகிறது. ரூபே (RuPay) கார்டு நமது மத்திய ரிசர்வ் வங்கியினால் உருவாக்கம் செய்யப்பட்டு, என்.பி.சி.ஐ-யினால் (NPCI – National Payments Corporation of India) அமல்படுத்தப்பட்டது. இது விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளுக்குப் போட்டியாக மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது.
இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 50 கோடிகளுக்கும் மேலான கார்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாதத்திற்கு 26 கோடிக்கும் மேலான வரவு செலவுகள் நடக்கின்றன. இது இந்தியாவுக்கு ஒரு பெரிய வெற்றி என்றே கூற வேண்டும். பீம் (BHIM – Bharat Interface for Money) App-ம் என்.பி.சி.ஐ-யினால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். பணப் பரிவர்த்தனைக்கு இன்று நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் உபயோகிக்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு பெரிய வெற்றிக் கதை ஆகும். இதுபோல் பல புதிய பண பரிவர்த்தனை முறைகளை என்.பி.சி.ஐ வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி, செயல்படுத்தியும் வருகிறது.
ஃபண்ட் மேனேஜ்மெண்ட் கமிட்டி
தனியார் துறையில் பைஜுஸ் (Byju’s), ஓலா (Ola), பிளிப்கார்ட் (Flipkart), ஜொமேட்டோ (Zomato), ரெட்பஸ் (RedBus), ஓயோ (Oyo), பாலிசிபஜார் (Policy Bazaar), பிக்பாஸ்கட் (BigBasket), பே.டி.எம் (Paytm), பில்டெஸ்க் (BillDesk) போன்ற பல நிறுவனங்கள் வெற்றி அடைந்தாலும் நம் நாடு டிஜிட்டலில் சக்தி மிகுந்த நாடாக வருவதற்கு இந்நிறுவனங்கள் மட்டும் போதாது. இன்னும் இதுபோல் பல நூறு நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
அதோடு மட்டுமல்லாமல் கம்ப்யூட்டர் ஹார்டுவேரில் நம்நாட்டு தயாரிப்பு மிக மிகக் குறைவே. மேலும் கூகுள் போன்ற ஸர்ச் என்ஜின் எனப்படும் தேடு பொறி, செல்ஃபோன் தயாரிப்புகள், சோஷியல் மீடியா நிறுவனங்கள் போன்றவற்றிலும் நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம். நம் நாட்டு மக்கள் உபயோகப்படுத்துவதற்கு அல்லது கூகுளுடன் ஒரு சிறிய அளவிலாவது போட்டி போடுவதற்கு பரவலாக பொதுமக்களுக்கு இ-மெயில் சேவை வழங்கக் கூடிய நிறுவனங்கள்கூட இங்கு இல்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.
இந்த இடைவெளியை சரிசெய்வதற்கு அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் ரூபே அல்லது பீம் ஆப்பிற்கு ஏற்பட்ட வெற்றியைப் போல் பல வெற்றிகளை அடைய முடியும். அரசாங்கம் இதற்காக Sovereign Wealth Fund அமைப்பை உருவாக்கலாம். அதை புரஃபொஷனல் ஃபண்ட் மேனேஜ் மெண்ட் கமிட்டியை அமைத்து நிர்வகிக்கலாம். அதிலிருந்து டெக்னாலஜி ஸ்டார்ட்-அப்-களுக்கு ஃபண்டிங் செய்யலாம்.
முதலீட்டை அதிகரிக்க வேண்டும்
ரிசர்வ் பேங்க் போன்ற கட்டுப்பாட்டு வாரியங்கள், பேமெண்ட் சிஸ்டத்தில் ஆர்.பி.ஐ உருவாக்கம் செய்த ரூபே கார்டு போல, தங்களது துறைகளில் ஒருங்கிணைந்த டெக்னாலஜி தொழில்களை உருவாக்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து கைகோர்த்து இமெயில், ஸர்ச் சேவைகளை கொண்டுவரலாம். செமிகண்டக்டர், செல்போன் தயாரிப்பு போன்றவற்றில் ஈடுபட வேண்டும். தற்பொழுது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சூம்-ற்கு (zoom) இணையாக வீடியோ மீட் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மேலும் 5ஜி சேவைகளை அடுத்த ஆண்டிலிருந்து அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. அதுபோல, இகாமர்ஸிலும் ஈடுபட்டுள்ளது.
ரிலையன்ஸைப் போல பல முன்னணி தனியார் நிறுவனங்கள், டெக்னாலஜி துறைக்கு தங்களின் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். அதுபோல் சிறு தொழில் செய்பவர்களும் தங்களின் தொழிலில், முடிந்தவரை டெக்னாலஜியை உபயோகித்து சேவைகளைப் பெருக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது தொழில்களின் லாபங்களும் பெருகும். இளைஞர்கள், புதிதாக தொழில் செய்ய முனைவோர் ஆகிய அனைவரும் டெக்னாலஜி சார்ந்த தொழில்களில் ஈடுபட வேண்டும்.
அரசாங்கம் ஆராய்ச்சிக்காக ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கும் மானியங்களை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக டெக்னாலஜி துறைக்கு சதவிகிதத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும். அத்தோடு மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உயர்கல்வி நிறுவனங்களுடன் கைகோர்த்து டெக்னாலஜி துறை ஆராய்ச்சியில் தங்களது செயல்பாட்டை அதிகரிக்க வேண்டியது, நம் இந்தியா முன்னேறுவதற்கு அவசியமாகிறது. இவை அனைத்தும் ஒருசேர நிகழும் பொழுதுதான், டிஜிட்டல் யுகத்தில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா எழுச்சியடையும். இது விரைவில் நிகழும் என நம்புவோமாக!