முகம்மது ரியாஸ்
riyas.ma@hindutamil.co.in
‘கரோனா பரவல் இன்னும் மோசமாக தீவிரமடையும். இயல்புலைக்கு நாம் திரும்பாமலே போகலாம்’ என்ற ரீதியில் கடந்த வாரத்தில் உலக சுகாதார அமைப்பு ஒரு குண்டைத் தூக்கிப்போட்டது. பல சிரமங்களுக்கிடையே நான்கு மாதங்களை நெருங்கிவிட்டோம். ஆகஸ்ட்டோ, செப்டம்பரோ எப்படியும் ஊரடங்கை தளர்த்திதான் ஆக வேண்டும். கல்லூரிகள், அலுவலகங்கள் திறக்கப்படுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எல்லாம் திறக்கலாம் சரி.
எப்படி வருவது? சென்னைப் பேருந்து நெரிசல் கண் முன் வந்துபோகிறது. வெடித்துவிடும் அளவுக்கு கூட்டம் நிரம்பி வழியும் பேருந்துகள், மின்சாரத் தொடர் வண்டிகள் இனி எப்படி இருக்கும்? கரோனா பரவலைத் தடுப்பதில் முக்கியமானது சமூக இடைவெளிதான். இந்தியப் பேருந்துகளில் சமூக இடைவெளிக்கு எங்கு போவது? இந்தச் சூழலில் வாகன விற்பனை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று நாம் எண்ணலாம். ஆனால் துறை சார்ந்தவர்களின் பார்வை வேறு மாதிரி இருக்கிறது. இந்த காரோனா காலகட்டம் வாகனத் துறைக்கு பெரிய சோதனை நிறைந்த காலகட்டமாக மாறியுள்ளது. இந்திய வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடங்களாகவே கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுவந்தன. தற்போது அது உச்சம் தொட்டுள்ளது.
2020 ஏப்ரல் முதல் விற்பனையாகும் வாகனங்கள் பிஎஸ் 6 விதியில் இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு இருந்ததால் பெருவாரியான வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் சென்ற ஆண்டே பிஎஸ் 6 தயாரிப்புக்கு மாறத் தொடங்கின. அதற்கென முதலீடுகளை மேற்கொண்டன. ஆனால் எதிர்பார்த்த அளவில் விற்பனை நிகழவில்லை. இதனால் சென்ற ஆண்டு செய்திகளில் அதிகம் இடம்பிடித்ததே வாகனத் துறையில் ஏற்பட்ட வேலையிழப்புதான்.
சென்ற ஆண்டு வாகன விற்பனை குறைந்தபோதும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களிடையே ஒரு நம்பிக்கை இருந்தது. 2020 ஏப்ரலில் அனைத்து வாகனங்களும் முழுமையாக பிஎஸ் 6-க்கு வந்துவிடும். எனவே மக்கள் தயக்கமின்றி வாங்கத் தொடங்கி விடுவார்கள் என்று. ஆனால் கரோனா வந்து அத்தனையையும் முடக்கிவிட்டது. கடந்து நான்கு மாதங்களாக அனைத்து தொழிற்ச் செயல்பாடுகளும் படுத்துவிட்டன. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் கார்கள் விற்பனை 78 சதவீதமும் இரு சக்கர வாகன விற்பனை 74 சதவீதமும் சரிந்தது.
தற்போது வாகன உற்பத்தியை நிறுவனங்கள் தொடங்கி இருந்தாலும் தொடர்ந்து உற்பத்தி செய்வதில் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. உலகளாவிய வர்த்தகம் தடைபட்டுள்ளதால் உதிரிபாகங்கள் இறக்குமதி பாதித்துள்ளது. தொழிலாளர்கள் வேலைக்கு வருவது நின்றுள்ளதால் உற்பத்தி மேற்கொள்வதும் சிரமமாக மாறி இருக்கிறது. தற்போதைய நிலையில் வாகனத் துறையில் புதிய முதலீடுகளுக்கு வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர். அதேசமயம் ஊரடங்கிற்குப் பிறகான பொதுப் போக்கு வரத்தில் நிச்சயம் மாற்றம் வரும். நோய்த் தொற்றைத் தடுக்க பலரும் சொந்த வாகனங்களை பயன்படுத்த விரும்புவர். அதன்பொருட்டு, எப்படியாகவேனும் புதிய
வாகனத்தை வாங்க முயற்சி செய்யக்கூடும்.
இருந்தபோதிலும், இந்த ஊரடங்கினால் பல தொழிகள் முடங்கியுள்ளதால் மக்களுக்கு வருவாய் இல்லை. வேலையிழப்பும் அதிகம். அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதிலே யேகடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இச்சூழலில் புதிய வாகனங்கள் வாங்குவது எந்த அளவுக்கு சாத்தியமாக இருக்கும் என்ற சந்தேகத்தையும் வாகனத் துறையினர் முன்வைக்கின்றனர். அந்த வகையில் வாகனத் துறை தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி சரியாக இன்னும் நான்கு ஆண்டுகளாவது ஆகும் என்கின்றனர். பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கும் ஆட்டோமொபைல் துறையின் சக்கரம் பழுதில்லாமல் சுழன்றால்தான் முன்பு போலவே இந்தியா வளர்ச்சியை நோக்கி நகரும்.
சென்ற ஆண்டு செய்திகளில் அதிகம் இடம்பிடித்ததே வாகனத் துறையில் ஏற்பட்ட வேலையிழப்புதான்