உலகமே விரல் நுனியில் சுருங்கிவிட்டது. உலகின் எந்த மூலையில் எத்தகைய நிகழ்வையும் ஸ்மார்ட்போனில் அறிந்து கொள்ளவும் முடியும்.
தொழில்நுட்ப மாற்றத்தை ஆட்டோ மொபைல் துறையினரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் ஆட்டோமொபைல் துறையில் முன்னோடியாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளத்தின் மூலமே தனது புதிய காரை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம்.
பிரிட்டனின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது புதிய மாடலான டான் காரை இணையதளம் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஒரே நாளில் கடந்த வாரம் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. செய்தியாளர்களின் சந்தேகங்களையும் இணையதளம் மூலமே தீர்த்து வைத்தார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டார்ஸ்டென் முல்லர் ஓட்வோஸ்.
இணையத்தின் மூலம் இளைஞர்களின் இதயத்தைத் தொட்ட இந்த கார் அவர்களை ஈர்க்கும் வகையில் மேற்கூரை திறந்து மூடும் வகையில் சொகுசு காராக வந்துள்ளது. பொதுவாக இதுபோன்ற கார்கள் அனைத்துமே இருவர் பயணிக்கும் வகையில்தான் இதுவரை வெளிவந்துள்ளது. ஆனால் முதல் முறையாக நான்கு பேர் பயணிக்கும் வகையில் இந்தக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது ரோல்ஸ் ராய்ஸ். முன்னிருக்கை பயணிகள் மட்டுமின்றி பின்னிருக்கையில் அமர்ந் திருப்போருக்கும் போதிய அளவுக்கு காலை நீட்டும் வகையில் இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரிய தோற்றம், கம்பீரம் அழகியல் வாய்ந்த வெளிப்புற வடி வமைப்புகள் வழியாக பார்ப்பவர் களை சுண்டியிழுக்கும் தன்மையைக் கொண்டுள்ளதாக வந்துள்ளது டான்.
ஒரு தடகள வீரரைப் போல ரோல்ஸ் ராய்ஸ் டான், கம்பீரமாகவும், துடிப்பாகவும் மற்றும் ஓடத் தயாராகவும் திகழும் வகையிலான தோற்றத்தைக் கொண்டுள்ளது.
திறந்து மூடும் வகையிலான மேற்கூரை, கடும் மழை பெய்தால் கூட ஒரு துளி உள்ளே வராத வகையில் சிறப்பான கூரையைக் கொண்டுள்ளது.
இதில் பிஸ்போக் ஆடியோ சிஸ்டம் உள்ளது. மேற்கூரை திறந்திருந்தாலும் வெளிப்புற இரைச்சல் சத்தத்துக்கேற்ப தானே டியூன் செய்து கார் பயணி களுக்கு இனிய இசையை அளிக்கும் தன்மை கொண்டது பிஸ்போக் ஆடியோ. இதில் 16 பிரத்யேக ஸ்பீக் கர்கள் உள்ளன.
அதிவேகத்துக்கு உறுதுணையாக 6.6 லிட்டர் வி 12 பவர் டிரெய்ன் இன்ஜின். இது 563 பிஹெச்பி அல்லது 420 கிலோவாட் இருப்பதால் 5,250 ஆர்பிஎம் மற்றும் 780 நியூட்டன் மீட்டர் வேகத்தை எட்ட முடியும். இதில் உள்ள ரன் பிளாட் டயர்கள் காற்று இறங்கினாலும் குறைந்தபட்சம் 160 கி.மீ. தூரம் வரை ஓடக் கூடியது. அப்போது கூட 80 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்பதுதான் இதன் சிறப்பம்சமாகும்.
ஸ்மார்ட்போனை இயக்குவதைப் போல இதை எளிதாக இயக்க முடியும். ஒரு முறை தொடுவதன் மூலம் இதை செயல்படுத்தலாம்.
குரல் ஆணைகளின் மூலம் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட பாதையின் முகவரியைக் கூறினால் அது உடனே அந்த இடத்திற்குச் செல்வதற்கான சாத்தி யமான வழிகளைக் காட்டுகிறது.
திறந்த காராக இருந்தாலும் அசம்பாவித சமயத்தில் ஒரு கூடாரம் போன்ற அமைப்பு காரை மூடி உயிரைக் காக்கும். இந்த ரோல் ஓவர் பாதுகாப்பு காரைச் சுற்றி முன்புற கண்ணாடி வரை மூடிவிடும். இதில் ஜிபிஎஸ் வசதி உள்ளதால் சாலைகளின் வழிகளை எளிதில் கண்டுபிடிக்கலாம்.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள முகப்பு விளக்கு தொழில்நுட்பம் பயணத்தை பத்திரமானதாக்குகிறது.
இவ்வளவு வசதிகள், சவுகரி யங்கள் உள்ள கார் நிச்சயம் கோடீஸ் வரர்களுக்குத்தான் சாத்தியம் என்ற உங்களது யூகம் சரியானதே. ஆம் இதன் விலை ரூ. 4 கோடி.