வணிக வீதி

பிரச்சினை ஒன்று பாதிப்பு பலப்பல...

செய்திப்பிரிவு

நிதிச்சந்தையில் ஒரு சரிவு எவ்வளவு பெரிய பாதிப்பை உருவாக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் அம்டெக் ஆட்டோ. கடந்த வார பங்குச்சந்தையின் பேசு பொருள் இந்த நிறுவனம்தான்.

ஒரு நீண்ட நெடிய பிரச்சினையை அதன் வேரில் இருந்து தொடங்குவோம்.

டெல்லியை சேர்ந்த அம்டெக் ஆட்டோ நிறுவனம் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களைத் தயாரித்து விற்பனை செய்கிறது. கடந்த 2010-ம் ஆண்டு இந்த நிறுவனம் கடன் பத்திரங்கள் மூலம் 800 கோடி ரூபாய்க்கு நிதி திரட்டியது. இதற்கான வட்டி 10.25 சதவீதம்.

இப்படி திரட்டிய நிதியை வரும் செப்டம்பர் 20-ம் தேதி முதலீட்டாளர்களுக்கு திருப்பி கொடுக்கவேண்டும். ஆனால் இதைத் திருப்பி அளிப்பதற்கு போதிய நிதி நிறுவனத்திடம் இல்லை என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் பரவியது.

2014-ம் ஆண்டு ஜூன் காலாண்டில் 223 கோடி ரூபாயை நிகர லாபமாக சம்பாதித்த இந்த நிறுவனம், கடந்த ஜூன் காலாண்டில் 157 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்தது. தவிர இந்தக் குழுமத்துக்கு சுமார் 17,600 கோடி ரூபாய் கடன் இருக்கிறது.

வெளிநாட்டு நிறுவனங்களைத் தொடர்ந்து கையகப்படுத்தி வந்ததும் நிறுவனத்தின் கடன் சுமை அதிகரிக்க ஒரு காரணம் ஆகும். கடந்த மே மாதம் 19-வது நிறுவனத்தை கையகப்படுத்தியது. பல நாடுகளில் இந்த நிறுவனத்துக்கு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

ஒரு பக்கம் நஷ்டம், மற்றொரு பக்கம் அதிகக் கடன் சுமை ஆகிய காரணங்களால் இந்த நிறுவனத்துக்கான தர மதிப்பீட்டை `கேர்’ நிறுவனம் குறைத்துக்கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் தர மதிப்பீட்டை நிறுத்தி வைத்தது. இந்த கட்டத்தில்தான் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.

கடந்த ஒரு மாதத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு கடுமையாக சரிந்துவிட்டது. ஆகஸ்ட் 3-ம் தேதி 170 ரூபாய் அளவில் வர்த்தகமான இந்த பங்கு செப்டம்பர் 4-ம் தேதி 25.60 ரூபாய் அளவுக்கு சரிந்துவிட்டது.

அம்டெக் நிறுவனத்தின் பங்குதாரர் களுக்கு நஷ்டம் ஏற்பட்டது ஒருபுறம் இருக்க, அமெரிக்க மியூச்சுவல் பண்ட் நிறுவனமான ஜேபி மார்கன் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் கடும் சிக்கலில் மாட்டியது.

அம்டெக் ஆட்டோ நிறுவனத்தின் கடன் பத்திரங்களில் ஜேபி மார்கன் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருக்கிறது. அம்டெக் நிறுவனத்தின் கடன் சுமை செய்தியைக் கேள்விப்பட்ட சிறு முதலீட்டாளர்கள் ஜேபி மார்கன் மியூச்சுவல் பண்டில் இருக்கும் ஐந்து கடன் சார்ந்த திட்டங்களில் இருந்து தங்களது முதலீட்டை எடுக்க தொடங்கினார்கள். இதனால் முதலீட்டாளர்கள் பணத்தை எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய நிலைமை ஜேபி மார்கனுக்கு ஏற்பட்டது.

ஜேபி மார்கன் டிரஷரி பண்டில் கடந்த ஒரு மாத காலத்தில் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு வெளியேறி இருக்கிறது. இந்த பண்டில் இருக்கும் மொத்த தொகையில் 5.87 சதவீதம் மட்டுமே அம்டெக் ஆட்டோ கடன் பத்திரத்தில் இருந்தாலும், அதை விட பல மடங்கு தொகையை அச்சம் காரணமாக வெளியே எடுத்துவிட்டார்கள் முதலீட்டாளர்கள்.

ஏற்கெனவே பல வெளிநாட்டு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வருகின்றன. இந்த நிறுவனம் வெளியேறுவதற்கு சமயம் பார்த்து வந்த நிலைமையில் இந்த பிரச்சினை நெருக்கடியை அதிகரித்தது.

தவிர, அம்டெக் கடன் பத்திரத்தில் இந்தியாவின் முக்கிய வங்கிகள் மற்றும் பென்ஷன் பண்ட்கள் முதலீடு செய்திருக்கின்றன. அவர்களை பொறுத்தவரை இந்த தொகை சிறியது. பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றாலும் ஒரு சிறிய தவறு புற்றுநோய் போல எவ்வளவு பாதிப்பை உண்டாக்கி விட்டது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நிறுவனத்தின் புரமோட்டர்கள் 75 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறார்கள். இதனால் இந்த பங்கு 54 சதவீதம் உயர்ந்து முடிந்தது. ஆனாலும் இது உடனடியாக முடிகிற பிரச்சினை போல தெரிவில்லை.

இத்தனையும் படித்த பிறகு இனி பங்குச்சந்தையே வேண்டாம், தனியார் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு வரத் தோன்றும். அப்படிதோன்றும் பட்சத்தில் அதுவும் தவறுதான். இதற்கான ஒரே பதில் மொத்த முதலீட்டையும் ஒரே பங்கில், ஒரு வகையான சொத்தில்(மொத்தத்தையும் பங்குச்சந்தை என்றோ, தங்கம் என்றோ) முதலீடு செய்ய வேண்டாம் என்பதுதான்.

SCROLL FOR NEXT