வணிக வீதி

ஜிஎஸ்டி: சீர்திருத்தம் எப்போது?

செய்திப்பிரிவு

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும், அதைப்போலத்தான் நரேந்திர மோடியின் அரசும் ஒவ்வொரு நாளையும் பொழுதையும் கழித்துக் கொண்டிருக்கிறது எந்தவித முன்னேற்றமும் இல்லாமல். முதலீடுகளை ஈர்க்க சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்ற அரசின் உத்திரவாதம் எல்லாம் கரைந்து போய்க்கொண்டே இருக்கிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி நிச்சயம் அமலாகும் என்ற உத்தரவாதம் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேறவில்லை. இதற்காக சிறப்பு கூட்டத்தொடர் ஏதும் அமைக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. அதனால் இந்த மசோதா குளிர்கால கூட்டத் தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அப்போதாவது நிறைவேறுமா என்பது சந்தேகமே. அப்படியே நிறைவேறினாலும் ஏப்ரல் 1-ல் சாத்தியமாகுமா?

இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த மாதம் திருத்தப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கான அவசர சட்டத்தைப் புதுப்பிக்கப் போவ தில்லை என அரசு கைவிட்டுவிட்டது. அப்படியெனில் நிலம் கையகப்படுத்தும் மசோதா அரசின் முடிவால் புதைகுழிக்கே போய்விட்டது என்றுதானே அர்த்தம்.

தொழில்துறையை ஊக்குவிப்பதற்காக 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டதுதான் நிலம் கையகப்படுத்தல் தொடர்பான அவசர சட்டம்.

அதேபோல நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை அமல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் சரக்கு மற்றும் சேவை வரி. இரண்டு மசோதாக்களும் அடிப்படையில் வெவ்வேறானவை என்றாலும், தொழில்துறை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை.

அரசின் இந்த செயல்பாடுகளை பார்க்கும் போது முக்கியமான சீர்திருத்தங்கள் நிறைவேற்றம் செய்யப்படும் என்ற நம்பிக்கை குறைந்துக்கொண்டே வருகிறது.

பொதுவாக ஒரு அரசு பதவியேற்று தங்களை நிலைப்படுத்திக் கொள்ள அளிக்கப்படும் கால அவகாசம் ஒன்றரை ஆண்டுகள், அதாவது 18 மாதங்கள். அந்த வகையில் மோடி அரசு பதவியேற்று 16 மாதங்களாகிவிட்டன. ஆனால் இன்னமும் எத்தகைய முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு அதன் மூலம் தொழில் துறை வளர்ச்சியடைந்தால் அது பலருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும். அடுத்த நான்கு ஆண்டுகளில் இதன் பலனை (அடுத்த பொதுத் தேர்தலின்போது) மோடி அரசு அனுபவிக்கலாம். அப்படி இல்லையென்றால் அதன் எதிர்வினையை இந்த அரசு சந்திக்க வேண்டியிருக்கும்.

இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றத்தில் என்ன தவறு உள்ளது என்பதை ஆராயும் நோக்கமோ அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியோ தேவையற்றது. இது நிறைவேறாமல் போனால் அதற்கான அரசியல் காரணம் ஒருபோதும் வெளிவராது. ஆனால் அது செயல்படாமல் போனதற்கான பழி முழுவதும் இந்த அரசின் மீதே விழும்.

இந்த மசோதா நிறைவேறாமல் போனால் அது இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

குளிர்கால கூட்டத் தொடரை முன் கூட்டியே கூட்டி ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றப் போவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். சரி அப்போதாவது நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

என்ன செய்வது நம்பிக்கைதானே வாழ்க்கை!

SCROLL FOR NEXT