வணிக வீதி

ஊரடங்குக்குப் பின் என்ன செய்ய போகிறோம்?    

செய்திப்பிரிவு

பேராசிரியர் எல். வெங்கடாசலம்
venkatmids@gmail.com

கரோனா வைரஸ் நமது பொருளாதாரத்தையும் மனித வாழ்க்கையையும் கணிசமாகப் புரட்டிப் போட்டு விட்டது. எண்ணற்ற எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்திய போதிலும், கரோனா நமக்கு சில நல்ல பாடங்களையும் தந்திருக்கிறது. இழந்த பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தப் பாடங்கள் பெருவாரியாக உதவுமா என்பது சந்தேகமே. இருப்பினும், மனித வாழ்க்கையில் ஒரு சில புதிய மாற்றங்களை கொண்டுவந்திருக்கிற இந்த கரோனா ஒரு 'இயற்கையின் தூண்டுதல்' என்றே எடுத்துக்கொள்ளலாம்.

கரோனாவினால் ஏற்பட்ட ஒரு உலகளாவிய மாற்றம், சுற்றுச் சூழலில் ஏற்பட்ட உன்னதமான மாற்றமே. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளால் நகரங்களில் காற்று மாசு அறவே இல்லை. நீர் மாசினால் பாழ்பட்டுக் கிடந்த அனைத்து நீர்நிலைகளும் தூய்மையாகிவிட்டன. மக்களின் பல ஆயிரம் கோடி வரிப்பணத்தை செலவு செய்தும்கூட பல ஆண்டுகளாகத் தூய்மையாகாத கங்கை நீரே இன்று குடிக்கும் தன்மைக்கு மாறிவிட்டது! சுற்றுலாவினால் பாதிக்கப்படும் வங்காள விரிகுடாவின் கரையில் காணப்படும் அரியவகை ஆமைகள் இன்று எந்தவித பாதிப்பும் இன்றி பல்கிப் பெருகிவருவதாக செய்தி வந்துள்ளது.

உலக வெப்பமயமாதலுக்கு காரணமான அனைத்து விதமான கேடு விளைவிக்கும் வாயுக்களுக்கும் ஒரு தற்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் நாம் வெளியேற்றும் திடக் கழிவின் அளவும் குறிப்பிட்ட அளவுக்குக் குறைந்துள்ளது. வாகனங்கள் ஏற்படுத்தும் ஒலி மற்றும் ஒளி மாசு இல்லை; லட்சக்கணக்கான விபத்துகள் இல்லை. இவை அனைத்தும் மனித நலனை மேம்படுத்துவதில் சத்தமே இல்லாமல் ஒரு சாதனை செய்துவருகின்றன. சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் இறப்பு மற்றும் உடல் நலம் பாதிக்கப்படுவதனால் ஏற்படும் பல லட்சம் கோடி இழப்புகளை கரோனா தடுத்து நிறுத்தியுள்ளது.

ஆனால், வரும் நாட்களில் ஊரடங்கைத் திரும்பப் பெரும்பொழுது பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும். மீண்டும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தலைதூக்கும் மற்றும் அது சார்ந்த பொருளாதார இழப்புகளும் சேர்ந்தே அதிகரிக்கும். ஆனால், கரோனா காலத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், சுற்றுச்சூழலை பாதிக்காமல் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளை மேற்கொள்வதன்மூலம் மனித நலனை தற்போதுள்ளதை விட குறைந்தது இரண்டு மடங்கு மேம்படுத்த முடியும் என்பதுதான்.

இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை செவ்வனே செயல்படுத்துவதன் மூலமும், மேலும் சுற்றுச்சூழலை பாதிக்காத தனி மனித நுகர்வு மற்றும் உற்பத்தி சார்ந்த நடவடிக்கைகளைக் கையாள்வதன் மூலமும் இது சாத்தியமே. ஆனால், அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா இல்லையா என்பதுதான் கேள்வி. ஊரடங்கு காலத்தில் அடக்கி வைத்திருந்த நுகர்வை பல மடங்காகக் கட்டவிழ்க்க காத்திருக்காமல், கொஞ்சமேனும் இயற்கையை தற்போதுள்ள சூழலில் பாதுகாத்துக்கொண்டோமானால் நமக்கு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்.

கரோனோ வைரஸ் உலகளாவிய சந்தைப் பொருளாதாரம் மற்றும் உலகமயமாக்கலை தற்சமயம் செயலிழக்கச் செய்துள்ளது! சமூக நலனை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் பங்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகப்படுத்திவிட்டது. அதேசமயம், மற்றவர்களுக்கு உதவுவதில் சமூகத்தின் பங்கு என்ன என்பதையும் வெளி உலகத்திற்குப் பறைசாற்றியுள்ளது. பொருளியலின் தந்தை ஆடம் ஸ்மித் 260 வருடங்களுக்கு முன் தனது Theory of Moral Sentiments என்ற புத்தகத்தில் முன்னிலைப்படுத்திய மக்களிடம் உள்ள அடிப்படைப் பண்புகளான ஈகை, கருணை மற்றும் பிறர் நலன் பேணுதல் இந்தக் கடுமையான கால கட்டத்தில் தழைத்தோங்கி நிற்கின்றன.

பில் கேட்ஸ், அம்பானி போன்ற பெரும் பணக்காரர்கள் மட்டுமின்றி, தனக்கு வழங்கப்பட்ட ரொட்டியை பசியால் வாடும் தெருவோர நாய்களுக்கு அன்போடு அளித்திட்ட ஒரு பிச்சைக்காரருக்கும் இந்த ஈகை மற்றும் கருணை குணம் தொக்கி நிற்பதைப் பார்க்க முடிகிறது. எவ்வளவோ தனிமனிதர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மற்றவர்களின் பசி போக்க அயராது பாடுபட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இதனால், பசியின்மை மற்றும் வறுமையை மக்களின் சமூக அக்கறையின் மூலமும் சிறப்பாக வெல்ல முடியும் என்பதை உணர்த்தியுள்ளது. ஆகவே, வரும் காலங்களில் சந்தை மற்றும் அரசாங்கம் தவிர, சமூகத்தில் உள்ள மக்களிடம் உள்ள பிறர் நலம் பேணும் தன்மையை சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலமும் ஏழைகளின் துயரங்களை துடைத்தெறிய முடியும் என்பது புலப்படுகிறது. இதை எவ்வாறு தொடர்ந்து செயல்படுத்த போகிறோம் என்பதை நாம் இத்தருணத்தில் மிகத் தீவிரமாக சிந்திக்க வேண்டும். கரோனா வைரஸ் மூலம் நமக்கு தெளிவாக தெரியவருவது என்னவெனில், நமது நாட்டில் இன்னும் கணிசமான அளவு மக்கள் போதிய சேமிப்பு இன்றி கஷ்டப்படுகின்றனர்.

சேமிப்பு இல்லாமலிருப்பதற்கு பொதுவான காரணம் வருவாய் குறைவாக இருப்பது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் சமீபத்திய எங்களது கள ஆய்வுப்படி, ஒரு குறிப்பிட்ட அளவு ஏழை மக்கள் வருவாய் இருந்தும் சேமிக்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பதில்லை என்பதைக் கண்டறிந்தோம். இவர்கள் வருவாயின் பெரும்பகுதியை சேமிப்பதற்குப் பதிலாக செலவு செய்துவிடுகின்றனர். இதற்குக் காரணம், எதிர்காலம் நிகழ்காலத்தைப் போலவோ அல்லது நிகழ்காலத்தைவிட சிறப்பாகவோ இருக்கும் என்ற ‘மிகைப்படுத்தல் எண்ணம்’!

கள ஆய்வின்போது கடலில் மீன் பிடிக்கும் தொழிலாளியிடம் ஏன் நீங்கள் நல்ல வருவாய் ஈட்டியும் சேமிப்பதில்லை என்ற கேள்விக்கு பலத்த சிரிப்புடன் அவர் தந்த பதில்: 'இந்தக் கடல் வற்றிவிடும் என்றா நினைக்கிறீர்கள்'? மேலும் சிலர், இப்போதைக்கு செலவு செய்யலாம் பிரச்சினை வந்தால் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்கிறார்கள். மேலும், சேமிக்கக் கூடிய வருவாயை மது போன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய நுகர்வுக்காகச் செலவிடுவதையும் காண முடிகிறது!

எதிர்கால நிச்சயமற்ற தன்மையை குறைத்து மதிப்பிடுவது மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. கரோனா நமக்கு சொல்லும் பாடம் என்னவெனில், எதிர்காலம் நிச்சயமற்றது. அதை சமாளிக்க அனாவசிய செலவுகளைத் தவிர்த்து சேமிக்கும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதே. Behavioral economics சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அனாவசிய செலவுகளைச் சேமிப்பாக மாற்ற மக்களை எவ்வாறு தூண்டலாம் என்பதற்கான வழி முறைகளைக் கண்டறிய வேண்டும்!

இந்த ஊரடங்கு நேரத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் துயரங்கள் நம்மை மிகவும் பாதித்த ஒன்று! கரோனா தாக்கத்தின்போது, வெளிநாடு வாழ் இந்தியர்களை மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து இந்தியாவிற்குக் கொண்டு வந்ததாகவும், ஆனால் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அவரவர் ஊர்களுக்கு செல்வதற்கு போதிய வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவெனில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் எவ்வளவு பேரை எந்த நாட்டிலிருந்து அழைத்துவர வேண்டும் என்பதும், எவ்வளவு பேரை கரோனா தனிமை மையங்களில் வைத்து மருத்துவம் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதும், அதற்காக விமானங்கள் மற்றும் மருத்துவ வசதி போன்றவற்றை முறையாக திட்டமிடுதலுக்கான அனைத்து தகவல்களும் அரசுக்கு துல்லியமாகவும் குறித்த நேரத்திலும் கிடைத்தபடியால், அரசு துரித நடவடிக்கை எடுக்க முடிந்தது.

ஆனால், புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றிய அவ்வாறான தகவல்கள் இல்லாததனால், நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. வரும் காலங்களில், புலம் பெயரும் தொழிலாளர்கள் பற்றி ஒவ்வொரு மாநில அரசுகளும் சரியான தகவல்களைத் திரட்டி அதை அவ்வப்போது புதுப்பிப்பதன் மூலம் அவர்களின் நலனை மேம்படுத்த சிறப்பான கொள்கைகளை வகுக்க முடியும் என்பது தெளிவு. நீண்ட காலத்தில், புலம் பெயர்தலையே கணிசமாகக் குறைக்க சில அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். புலம் பெயர்தலுக்கு முக்கிய காரணம், கிராமப் புறங்களில் போதிய வேலை வாய்ப்பு இல்லாமையே. மேலும், நகர்மயமாதல் ஒரு சில இடங்களிலேயே குவிவதாலும் இப்பிரச்சினை உருவாகிறது.

வடமாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் நகர்மயமாதல் ஒரே இடத்தில் குவியாமல் பரவலாக்கப்பட்டுள்ளதால், புலம் பெயர் தொழிலாளர்களுக்கான பிரச்சினை வடமாநிலங்களில் ஏற்பட்டதுபோல் இங்கு இல்லை என்று சொல்லலாம். எனவே, வரும் காலங்களில் பரவலாக்கப்பட்ட நகரமயமாதல் சுற்று வட்டாரங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரித்து புலம் பெயர்தலைக் கட்டுப்படுத்தச் செய்யும். மேலும், கிராமபுறங்களில் உற்பத்தி செய்யப்படும் வேளாண்விலை பொருட்களை சந்தைப் படுத்தவும், விவசாய உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் நேரடியாக ஒன்றிணைத்து இடைத்தரகர்களின் தாக்கத்தை குறைக்கவும் உதவும்.

மக்கள் சுகாதாரத்தைப் பேணிக்காப்பதன் அவசியத்தை கரோனோ உணர்த்தியுள்ளது. கைகளைக் கழுவுதல் மற்றும் வீடுகளிலும் தனி நபர் இடை வெளியைக் கடைப்பிடித்தல் போன்றவை அறிவுறுத்தப்படுகின்றன. இருப்பினும், மக்களின் ஒரு பகுதியினருக்கு குடிப்பதற்கே தண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளதைக் கண்டோம். மும்பை தாராவி போன்ற பல சிறிய, சுகாதாரமற்ற வீடுகளில் வசிக்கும் மக்கள் தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது என்பது இயலாத காரியம் . குடிநீர், மருத்துவ வசதி மற்றும் வீட்டு வசதி போன்றவற்றில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது கரோனா நமக்கு உணர்த்தும் மற்றொரு பாடமாகும்!

இனி வரும் காலங்களில், முகக்கவசம் அணிவது, தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது, தனி மனித மற்றும் சமூக சுகாதாரத்தைப் பேணிக்காப்பது, துரித உணவுகளைத் தவிர்த்து ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது, மது அருந்துதல் மற்றும் புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நாம் கரோனா மட்டுமின்றி பலவிதமான மற்ற தொற்று நோய்களிலிருந்து மனித குலத்தைக் காக்க முடியும் என்பதையும் கரோனா நமக்கு பாடமாகத் தந்துள்ளது!

SCROLL FOR NEXT