வணிக வீதி

போர்ட்ஃபோலியோவில் கட்டாயம் இருக்க வேண்டிய ஃபண்டு

செய்திப்பிரிவு

பி.ரமணன், சிஇஓ,
வெல்த் கிரியேட்டர்ஸ்

முதலீட்டாளர்கள் போர்ட் ஃபோலியோவில் இருக்க வேண்டிய ஃபண்டாக பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டு உள்ளது. இந்த ஃபண்டு சந்தை நகர்வுகளுக்கு ஏற்ப முதலீடுகளை நிர்வகிக்கிறது. இந்த ஃபண்டில் பங்கு சார்ந்த முதலீட்டை 30% முதல் 80% என்ற அளவில் சந்தை நகர்வுகளுக்கு ஏற்ப திட்டமிடுகிறது. பிஇ விகிதம் அல்லது பிபி விகிதம் அடிப்படையில் பங்கு சார்ந்த முதலீட்டு சதவீதம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த வகை ஃபண்டுகள் செபி அமைப்பினால் எடுக்கப்பட்ட ஃபண்ட் மறுகட்டமைப்பு நடவடிக்கைப் பிறகு அறிமுகப்படுத்தப்படுகின்றன.

தற்போது கரோனா வைரஸ் தாக்கத்தினால் பங்குச் சந்தையில் அதிகபட்ச ஏற்ற இறக்கங்களைப் பார்க்க முடிகிறது. இதனால் சந்தைக் குறியீடுகள் அதிகபட்ச இழப்பைச் சந்தித்தன. சென்செக்ஸ் நிஃப்டி இரண்டும் 20 சதவீதம் வரை சரிந்து கரடியின் பிடியில் சிக்கின. இதுபோன்ற பெரும் சரிவு எப்போதாவது நடக்கும் என்பதால் இந்தச் சமயத்தில் சிறு முதலீட்டாளர்கள் பதற்றமடைவது இயல்புதான். 2008 சந்தை சரிவின் போதும் முதலீட்டாளர்கள் பதற்றமானாலும் சந்தை இறக்கத்தை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

அதேபோல் நீண்டகால ஆதாயத்தை அடைய தற்போது சரியான நேரம். இதுபோன்ற மோசமான சந்தை சூழல்கள்தான் நீண்டகாலத்தில் அதிக ஆதாயத்தைக் கொடுப்பதற்கான வாய்ப்புகளையும் கொடுக்கின்றன. ஒரு முதலீட்டாளராக உங்களுக்கு மிகக்குறைந்த விலையில் பங்குகளை வாங்கி அதிக விலையில் விற்பதற்கான வாய்ப்பு இப்போது வாய்த்திருக்கிறது. ஆனால் பெரும்பாலானோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதற்குப் பதிலாக சந்தை இறக்கத்தைப் பார்ந்து பயந்து பின்வாங்குகிறார்கள். பெரும்பான்மை முதலீட்டாளர்களிடம் உள்ள இந்த பிரச்சினைக்குத் தீர்வாக, பல ஃபண்டு நிறுவனங்கள் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.

இந்த பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளின் முக்கிய அம்சம் என்னவெனில் சுழற்சி முறையிலான முதலீட்டு உத்திகளைக் கொண்டதாக இது இருப்பதுதான். பங்கு மற்றும் கடன் சார்ந்த முதலீடுகளை அவற்றின் செயல்பாடுகளுக்கு ஏற்ப இந்த ஃபண்டுகள் நிர்வகிக்கின்றன. அதாவது பங்குகளின் மதிப்பு வாங்குவதற்கு சிறப்பாக இருக்கும்போது பங்கு முதலீட்டுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கும். மீதத்தை கடன் திட்டங்களில் முதலீடும் செய்யும். அதேபோல் பங்குகளின் மதிப்பு அதிகரிக்கும்போது கடன் திட்டங்களில் முதலீட்டை அதிகரித்து பங்கு முதலீட்டை குறைத்துக்கொள்ளும். இதனால் முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தைப் பெற முடியும்.

இந்த வகையான மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் உள்ள மற்று மொரு சாதகமான அம்சம் முதலீட்டாளரின் அஸெட் அலோகேஷன் தேவைகளை சிறப்பாக நிர்வகிப்பது. ஒருவருடைய நிதி தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முக்கியமாக செய்ய வேண்டியது அஸெட் அலோகேஷன். ஆனாலும் பெரும்பாலான முதலீட்டாளர்கள் அஸெட் அலோகேஷன் முறையில் முதலீடு செய்யும் அளவுக்கு நிதி ஆதாரம் அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கான அஸெட் அலோகேஷன் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகள் உள்ளன. இவை சந்தை நகர்வுகளுக்கு ஏற்ப முதலீடுகளைத் திட்டமிடுகின்றன. இதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு சந்தை அபாயத்தைக் கடந்த வருமானம் கிடைக்க வழி செய்கிறது.

SCROLL FOR NEXT