ஃபேஸ்புக் - ஜியோ நிறுவனங்களுக்கிடையே சமீபத்தில் நடந்த ஒப்பந்தம் உலக அளவில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. சொல்லப்போனால் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்க தொடங்கியிருக்கிறது எனலாம். இந்தியாவில் தற்போது டெலிகாம் துறையின் ஜாம்பவனாக இருக்கிறது ஜியோ. ஃபேஸ்புக் உலகம் முழுவதும் முன்னணி சமூக வலைதள நிறுவனமாக இருக்கிறது. இந்த இரண்டு பெரு நிறுவனங்களும் ஒன்றாக இணைவது என்பது சாதாரணமாகக் கடந்துபோகக் கூடிய விஷயமல்ல.
இந்தியாவில் மக்களின் அன்றாட பயன்பாடு சார்ந்த நுகர்வு இந்திய ஜிடிபியில் 60 சதவீதம் பங்கு வகிக்கிறது. இது 2030-ல் 6 டிரில்லியன் டாலராக உயரும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஆன்லைன் வர்த்தகம் சூடுபிடித்துள்ளது. இந்தச் சூழலில் எதிர்கால ஆன்லைன் சந்தையைக் குறிவைத்து இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் நீட்சியாகத்தான், இவ்வருடத் தொடக்கத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ் இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 கோடி டாலர் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தார். இந்தியாவிலுள்ள 1 கோடி சிறு, குறு வணிகர்களை இணையவழி வர்த்தகத்தில் இணைக்கும் வகையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
தற்போது ரிலையன்ஸ் ஜியோவின் 9.99 சதவீதப் பங்குகளை ரூ.43,574 கோடிக்கு (5.7 பில்லியன் டாலர்) ஃபேஸ்புக் வாங்கியிருக்கிறது. இந்த தொழில் ஒப்பந்தம் இந்திய ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் மற்றுமொரு சவாலாக உருவெடுத்திருக்கிறது. விஷயம் என்னவென்றால், தற்போதைய ஒப்பந்தத்தின் வழியே ஜியோ நிறுவனம் ‘ஜியோமார்ட்’ என்ற இணையவழியிலான சில்லறை வர்த்தகத் திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, பலசரக்கு கடைகளை ஒருங்கிணைத்து அன்றாடத் தேவைகளுக்கானப் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கே விநியோகம் செய்ய உள்ளது. இங்குதான் ஃபேஸ்புக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ஜியோவுக்கு உதவுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின்கீழ் உள்ள வாட்ஸ்அப்பின் வழியாக இந்த சில்லறை வர்த்தகத்தை மேற்கொள்ள இருக்கிறது ஜியோ. இந்தியாவில் 40 கோடி வாட்ஸ்அப் பயனாளிகள் உள்ளனர். ஃபேஸ்புக் உடனான ஒப்பந்தத்தின் மூலம் இந்த 40 கோடி பேரையும் ‘ஜியோமார்ட்’ எளிதில் அணுக முடியும்.
இன்றைய இணைய யுகத்தில் தகவல்கள்தான் ஆகப்பெரும் சொத்தாக மாறியிருக்கிறது. அந்த வகையில் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களிடம் இல்லாத அளவில் ஃபேஸ்புக் நிறுவனத் திடம் அதிக அளவில் தகவல்கள் உள்ளன. குறிப்பாக ஒவ்வொரு தனிநபரின் விருப்பம், டேஸ்ட், எதிர்பார்ப்பு உள்ளிட்ட வகையிலான தகவல்கள் கூட ஃபேஸ்புக்கிடம் உள்ளது. இவை ‘ஜியோமார்ட்’ வர்த்தக திட்டத்தை பெரிய அளவில் எடுத்துச் செல்வதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
சரி, இதனால் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு என்ன பலன்? இணையப் பயன்பாட்டில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட 56 கோடி இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். 2023-ல் இந்த எண்ணிக்கை 66 கோடியாக உயரும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் 34 கோடி வாடிக்கையாளர்களைக்கொண்டு கைபேசி இணையச் சேவையில் முதன்மையான இடத்தில் இருக்கும் ஜியோவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதன் வழியே அதன் வாடிக்கையாளர்கள் தொடர்பான தகவல்கள் ஃபேஸ்புக்குக்கு கிடைக்கும்.
ஏற்கெனவே ஜியோவின் வருகைக்குப் பிறகு இந்தியாவில் செயல்பட்டு வந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இந் நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் மூலம் இணைய சில்லறை வர்த்தகத்திலும் அத்தகையதொரு பிரள யத்தை வெடிக்க செய்ய கிளம்பியிருக்கிறது ஜியோ. பொறுத்திருந்து பார்க்கலாம்.