வணிக வீதி

குறள் இனிது: பட்ஜெட் பத்மநாபன்

சோம.வீரப்பன்

1970-களில் நம்நாட்டில் உணவு பற்றாக்குறை இருந்தது உங்களில் பலருக்கு தெரிந் திருக்கும். சாப்பாட்டிற்கே வெளிநாட் டிலிருந்து இறக்குமதியையும் அமெரிக் காவின் உதவித் திட்டமான PL480 முதலியனவற்றையும் எதிர்பார்த்திருந்த சூழ்நிலை. அப்போது நாட்டின் உணவு தானியப்பற்றாக்குறை 2 மில்லியன் டன். உற்பத்தி சுமார் 98 மில்லியன் டன்னாக இருந்தாலும் 5 மில்லியன் டன் தானியங் களை எலிகள்தான் சாப்பிட்டு வந்தன!

இப்போழுது நாம் சுமார் 260 மில்லியன் டன் உற்பத்தி செய்தும், பல மில்லியன் டன் தானியத்தை உணவுப் பாதுகாப்பிற்காகச் சேமித்து வைத்து இருந்தும் அடிக்கடி மழையினாலும், எலிகளாலும் பல லட்சம் டன்கள் வீணாவதைத் தடுக்க முடியவில்லை! உற்பத்தி உயர்ந்தது, விரயம் குறைந்ததா? இது அரசாங்கத்திற்கும், வணிக நிறுவனங்களுக்கும், ஏன் அன்றாட குடும்ப வாழ்விற்குமே பொருந்தும்.

நாமெல்லாம் வரவை வைத்துச் செலவைத் திட்டமிடுவோம். அரசாங்கமோ செலவைத் தீர்மானித்து வரவுக்கு வழி கண்டுபிடிக்கும். அங்கு விரயம் ஆவதோ பெரிய அளவில்! மின்சாரத்தை உற்பத்தி இடத்திலிருந்து உபயோகிப்பாளர் வரை கொண்டு சேர்ப்பதற்கு வழியில் பகிர்மான இழப்பு (transmission loss) மட்டும் சுமார் 20% என்றால் நம்ப முடிகிறதா? (இது தவிர திருட்டு வேறு)! இதைச் சரி செய்தாலே மின் பற்றாக்குறை இருக்காது. சமையல் எரிவாயு மானியத்தை நேரிடையாக வங்கிக்கணக்கிற்கு வருகிற திட்டம் வந்ததல்லவா? இதனால் மட்டும் சுமார் ரூ. 9,000 கோடி சேமிப்பாம்.

லாபம் என்பது வரவிலிருந்து செலவைக் கழிப்பதால் வருவது. எனவே லாபத்தை அதிகரிக்க இரு வழிகள் உண்டு! விலையைக் கூட்டி விற்பனையை கூட்டி என்கிற நீண்ட வழி; அல்லது செலவைக்குறை எனும் எளிய வழி. அமெரிக்காவின் BPO நிறுவனங்கள் இந்தோனேஷியாவிற்கும், இந்தியாவிற்கும் மாற்றக்காரணமும் இதுதானே? டெல்ட்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் நஷ்டத்தை சரிக்கட்ட பல நடவடிக்கைகள் எடுத்தது. அதில் ஒன்று விமானப் பயணிகளுக்கு கொடுக்கப்படும் பர்கரில் ஒரு லெட்டூஸ் (நம்ம ஊர் முட்டைக்கோஸ் போன்றது) இலையை குறைத்தது! இதனால் மட்டும் ஓர் மில்லியன் டாலர் மிச்சமானதாம்.

குடும்பத்தில் பலரும் யோசிப்பது வருமானத்தை உயர்த்துவது எப்படி என்றுதான். இடம் வாங்கலாமா, சீட்டு கட்டலாமா, தங்கம் வாங்கலாமா என்று யோசிப்பதைப் போலவே எந்தெந்தச் செலவினங்களைக் குறைக்கலாம் என்றும் திட்டம் போட்டால் நல்ல பலன் இருக்கும். அதிகத் துணிமணி வாங்குவதும் பெரிய டப்பா ஹெல்த் டிரிங்க் வாங்குவதும் தேவைக்காகவா அல்லது ஆடித் தள்ளுபடிக்காகவா?

பெரிய வீட்டிற்கான வாடகை, பெரிய காருக்கான இஎம்ஐ என்பதெல்லாம் அவசியத்திற்காகவா, ஆடம்பரத்திற்காகவா?, கடந்த மாதச் செலவு கணக்கை ஒரு முறை நீங்களே ஆராயுங்கள். தேவையில்லாதவற்றைத் தவிர்த்து விட்டால் பற்றாக்குறை வராதிருக்கும். கூட்டிக்கழித்துப் பாருங்கள், சரியாக வரும்! வருமானம் சிறியதாக இருந்தாலும், செலவினங்கள் பெருகாமல் இருக்குமானால் கேடு இல்லை என்கிறது குறள்.

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடை -குறள் 478

somaiah.veerappan@gmail.com

SCROLL FOR NEXT