தென்கொரிய நிறுவனமான கியா அடுத்தடுத்து இந்திய கார் பிரியர்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. கியா செல்டோஸ் பரவலாக அனைவரையும் கவர்ந்து விற்பனையிலும் வெற்றி பெற்றது. அதையடுத்து கியா கார்னிவல் அறிமுகம் செய்து சந்தை யைக் கலக்கியது. தற்போது மற்றொரு எஸ்யுவியை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய காத்திருக்கிறது. அதன் பெயர் `கியா சொரன்டோ'.
கார்னிவல் தயாரிக்கப்படும் 3-ம் தலைமுறை என்3 பிளாட்பாரத்தில் தயாரிக்கப்பட்ட இந்த சொரன்டோ எஸ்யூவியின் வெளிப்புறத் தோற்றம் செல்டோஸுடன் பெருமளவு பொருந்து கிறது. அதாவது டைகர்நோஸ் கிரில், முழு எல்இடி ஹெட்லேம்ப், ஸ்போர்ட்டியான பம்பர்கள், காரை சுற்றிலும் சில்வர் லைனிங் ஃபினிஷிங் என அசத்துகிறது.
இதில் 10.25 அங்குல தொடுதிரை, டாப் வேரியன்ட்களில் 12.3 அங்குலதிரைகொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூ மென்ட் கன்சோல் வழங்கப்படுகிறது. மேலும், போஸ் நிறுவனத்தின் 12-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், மல்டி-கொலிஷன் பிரேக் சிஸ்டம், லெதர் இருக்கைகள் எனப் பல அம்சங்கள் உள்ளன.
இதில் 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 198 பிஎச்பி பவரையும் 440என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்தியாவில் ஹைபிரிட் ஆப்ஷனும் இதில் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஹைபிரிட் வேரியன்ட்டில் 1.6 லி.4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 59 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டாரும் 1.5 கிலோவாட் ஹவர் பேட்டரியும் பொருத்தப்பட்டிருக்கும்.
மிட்சைஸ் 7 இருக்கை கொண்ட எஸ்யுவியாக இது பொசிஷன் செய்யப்படுவதால் டொயோடா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டோவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, டாடா கிராவிடாஸ் ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும்.