வணிக வீதி

அசாத்திய வேகத்துக்கு ஈடுகொடுக்கும் பிஎம்டபிள்யூ

வெ.சந்திரமோகன்

கடந்த

வாரம் வெளியாகி உலக மெங்கும் வசூலை அள்ளிக்கொண் டிருக்கும் படம் ‘மிஷன் இம்பாஸிபிள்: ரோக் நேஷன்’. மிஷன் இம்பாஸிபிள் திரைப்படங்களின் ஐந்தாவது பாகமான இப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களாலும் கொண்டாடப் படுகிறது.

தொலைக்காட்சி இயக்குநர் புரூஸ் கெல்லர் உருவாக்கிய தொலைக் காட்சித் தொடரை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ‘மிஷன் இம்பாஸிபிள்’ திரைப்படங்கள் டாம் குரூஸின் திரைவாழ்வை உச்சத்துக்குக் கொண்டுசென்றவை. ஐ.எம்.எஃப். (இம்பாஸிபிள் மிஷன்ஸ் ஃபோர்ஸ்) எனும் உளவு அமைப்பைச் சேர்ந்த உளவாளி ஈதன் ஹண்ட் பாத்திரத்தில் இன்று வரை நடித்து வரும் டாம் குரூஸுக்கு வயது வெறும் 53தான்! ‘அன்ட்டச்சபுள்ஸ்’ புகழ் பிரையன் டி பால்மா, ‘ஃபேஸ் ஆஃப்’ புகழ் ஜான் வூ என்று ஐந்து பாகங்களுக்கும் வெவ்வேறு இயக்குநர்கள். ஒவ்வொரு படமும் வெவ்வேறு நிறம் கொண்ட வையாக ரசிகர்களைக் கட்டிப்போடு வதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

இந்தப் புதிய திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்திழுக்க முக்கியக் காரணம் படத்தின் சேஸிங் காட்சிகள். சாலையில் நெருப்புப் பொறியைக் கிளப்பும் சூட்டுடன் சீறிப்பாயும் கார்கள், பைக்குகள் ஹாலிவுட் படங்களில் சகஜம்தான். எனினும், சேஸிங் காட்சிகள் இப்படத்தில் புதுப் பரிமாணத்தை அடைந்திருக்கின்றன என்கிறார்கள் விமர்சகர்கள். ஆபத்தான கார் சேஸிங் காட்சிகளில் டூப் இல்லாமல் டாம் குரூஸே நடித்திருப்பது இப்படத்தின் மற்றுமொரு சிறப்பு. படத்தில் கார், பைக், விமானம் என்று சகல வாகனாதிகளும் அகன்ற திரையின் ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்குப் பறக்கின்றன.

சீறும் வேகம்!

மொராக்கோவில் பிஎம்டபிள்யூ காரை டாம் குரூஸ் புயல்வேகத்தில் ஓட்டிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகிக் கலக்கிக் கொண்டிருக்கின்றன. ஐ.எம்.எஃப். குழுவின் பென்ஜி டன் பாத்திரத்தில் நடித்திருக்கும் சைமன் பெக்தான் டாம் குரூஸ் ஓட்டும் காரில் அவர் அருகில் அமர்ந்து நடித்திருக்கிறார். “இத்தனை வேகத்தில் செல்லும் காரில் இதற்கு முன் நான் பயணித்ததேயில்லை” என்று சிலிர்ப்பு கலந்த திகைப்புடன் சொல்கிறார் சைமன் பெக். மொராக் கோவின் சாலையில் மட்டு மல்லாமல் அகன்ற படிக்கட்டுகளின் வழியாகப் படுவேகத்துடன் இறங்கிவரும் காட்சிகள் அசத்துகின்றன. புன்னகை மாறாமல் காரை ஓட்டி அசத்தியிருக் கிறார் டாம்.

வியன்னாவில் படமாக்கப்பட்ட காட்சிகளிலும் கார் சேஸிங் உண்டு. மிஷன் இம்பாசிபிள் வரிசையில் இரண்டாவது முறையாக பிஎம்டபிள்யூ கார்கள் மற்றும் பைக்குகள் பயன் படுத்தப்பட்டிருக்கின்றன.

பரஸ்பர விளம்பரம்

பொதுவாகவே ஹாலிவுட் படங்களில் உடை, குளிர்பானம், வாகனம் என்று வணிகத் தயாரிப்புகளுக்குப் பெரும் முக்கியத்துவம் தரப்படும். திரைப் படங்களில் தோன்றி ‘நடிக்கும்’ வாகனங்களுக்குச் சந்தையில் நல்ல கிராக்கி ஏற்படுவதும் வழக்கம். படத்தில் காட்டப்படும் தங்கள் தயாரிப்பு வாகனங்களை நட்சத்திர நடிகர் பயன்படுத்த வேண்டும். என்னதான் இடிபட்டாலும், கார் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும்.

விபத்தில் முற்றிலும் நொறுங்கிவிடுவதுபோல் காட்ட வேண்டாம் என்பன போன்ற சில நிபந்த னைகளைச் சம்பந் தப்பட்ட திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுடன் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் முன்வைப் பதும் உண்டு. படம் வெளியாகும் சமயத்தில் திரைப் படத்துடன் சம்பந்தப் பட்ட வாகனத் துக்கும் நல்ல விளம்பரம் கிடைத்து விடும். தங்கள் வாகனத்தின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன் மையை படத்தின் காட்சிகளின் வழியாகவே ரசிகர்களிடம் உணர்த்தி விடுகின்றன தயாரிப்பு நிறுவனங்கள்.

இப்போது இந்தியத் திரைப்படங் களிலும் இந்த விஷயம் வந்துவிட்டது. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் கார்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பயன்படுத்த தங்கள் கார்களைத் தருவதுண்டு. அந்த வகையில் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இணையான கார் சேஸிங் காட்சிகளைக் கொண்ட மிஷன் இம்பாஸிபிள் படங்களில் வாகனங் களுக்குத் தனி அந்தஸ்து உண்டு.

பிரமிக்க வைக்கும் பிஎம்டபுள்யூ

2011-ல் வெளியான ‘மிஷன் இம்பாஸிபிள்: கோஸ்ட் ப்ரோட்டோகால்’ படத்தில் முதன்முறையாக பிஎம்டபிள்யூ கார்கள் பயன்படுத்தப்பட்டன. முக்கியக் காட்சிகள் இந்தியாவில் படமாக்கப்பட்ட இப்படத்தில் மும்பை சாலைகளிலும் தெருக்களிலும் பிஎம்டபிள்யூ. ஐ8 காரில் சீறிச் செல்வார் டாம் குரூஸ். தற்போது வெளியாகியிருக்கும் படத்தில் பிஎம்டபிள்யூ 7, பிஎம்டபிள்யூ எம்3, பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 எக்ஸ் டிரைவ் 40-இ மாடல் கார்களும், பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்.ஆர்., பிஎம்டபிள்யூ மோட்டோராட் எஸ் 1000 ஆர்.ஆர். ஆகிய மாடல் பைக்குகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

“அதி நவீன தொழில்நுட்பத்தில் தயாரான பிஎம்டபிள்யூ கார்கள் மற்றும் பைக்குகளை இப்படத்தில் ஈதன் ஹண்ட்டும் அவரது குழுவினரும் பயன்படுத்தியிருப்பது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது” என்கிறார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவைச் சேர்ந்த இயான் ராபர்ட்ஸன்.

‘மிஷன் இம்பாஸிபிள் 2’ படத்தில் கருப்பு கோட், குளிர்கண்ணாடியை அணிந்தபடி பைக்கில் சீறிப்பாயும் டாம் குரூஸ் தந்த தாக்கத்தில் பல இளைஞர்கள் பைக் ஆக்ஸிலேட்டரை முறுக்கிப் பார்ப்பதுண்டு.

chandramohan.v@thehindutamil.co.in

SCROLL FOR NEXT