வணிக வீதி

ரிசர்வ் வங்கியின் அதிகாரம் குறைக்கப்படுகிறதா?

செய்திப்பிரிவு

இந்திய நிதிச்சட்டத்தின் மறுவரைவு கடந்த வாரம் வெளியானது. இதில் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதற்கான வரைவுகள் உள்ளன. இது பெரும் சலசலப்பினை உருவாக்கி இருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் பணிகளில் முக்கிய மானது பணவீக்கத்தை கட்டுப்படுத் துவது. மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து பணவீக்கத்துக்கான இலக்கினை நிர்ணயம் செய்கின்றன. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் காரணிகளில் பல இருந்தாலும் ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்யும் வட்டி விகிதம் மிகவும் முக்கியமானதாகும். இந்த வட்டி விகிதம்தான் சந்தையில் எவ்வளவு பணம் இருக்க வேண்டும், வங்கியில் எவ்வளவு பணம் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.

இந்த வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் குழுவில் (monetary policy committee) ரிசர்வ் வங்கி கவர்னருக்கு அதிகாரத்தை சட்ட வரைவு குறைத்திருக் கிறது. தற்போதைய நடைமுறையில் தொழில் நுட்ப ஆலோசனை குழு தனது பரிந்துரைகளை வழங்கும். இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் வட்டி விகிதம் குறித்த முடிவுகளை எடுப்பார்.

ஆனால் தொழில்நுட்ப ஆலோசனை குழு, துணை கவர்னர்களின் கருத்துகள் என்ன இருந்தாலும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் எடுக்கும் தனிப்பட்ட முடிவு அறிவிக்கப்படும். அதனால் ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறு நிதிக்கொள்கை இருக்க முடியாது என்பதால் கடன் மற்றும் நிதிக்கொள்கை குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

புதிய பரிந்துரையில் ஏழு நபர் குழு அமைக்கப்படும். இதில் ரிசர்வ் வங்கியின் சார்பில் மூவரும் (ரிசர்வ் வங்கி கவர்னர் உள்பட) மீதமுள்ள நால்வரை மத்திய அரசு நியமிக்கும். தவிர கவர்னருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை.

கவர்னருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்பதை விட மத்திய அரசு நியமிக்கும் நான்கு நபர்கள்தான் இப்போதைய பிரச்சினையே. ஏழு பேர் உள்ள குழுவில் நான்குபேர் மத்திய அரசு நியமிக்கும் போது இயல்பாகவே மத்திய அரசு என்ன நினைக்கிறதோ அதனை எளிதாக நிறைவேற்றிக்கொள்ளும். மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதனை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள எதற்காக ஒரு குழு, எதற்காக ரிசர்வ் வங்கி என்பதே பொருளாதார நிபுணர்களின் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.

ஒரு குழுவாக கூடி வட்டி விகிதத்தை நியமிக்கும் முறை பல நாடுகளிலும் இருந்து வருவதுதான். இந்தியாவிலும் அதுபோன்ற முறை தேவை, ஆனால் இப்போதைய வரைவு சரியில்லை என்றே பலர் நினைக்கிறார்கள்.

அமெரிக்காவில் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் குழுவில் 14 நபர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு ஓட்டு. இதில் ஏழு பேர் அமெரிக்க அதிபர் மற்றும் செனட் ஒப்புதலுடன் நியமிக்கப் படுவார்கள். இங்கும் அரசியல் இருக்கிறது என்று நினைக் கலாம். ஆனால் இவர்களின் பதவிக் காலம் சுமார் 14 ஆண்டுகள். ஒரு அதிபர் அதிகபட்சம் 8 வருடங்கள் மட்டுமே இருக்க முடியும் என்பதால் அரசியல் குறுக்கீடு இருக்க முடியாது. அதேபோல ஐந்து உறுப்பினர்கள் மாகாண மத்திய வங்கியில் இருந்து சுழற்சி அடிப்படையில் உறுப்பினராக இருப்பார்கள். பெடரல் ரிசர்வின் தலை வரும் துணைத்தலைவரும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப் படுவார்கள். இவர்கள் சேர்ந்துதான் வட்டி விகிதம் குறித்த முடிவினை எடுக்கிறார் கள். இதேபோலத்தான் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியில் குழுவாக சேர்ந்து முடிவெடுக்கிறார்கள்.

ஒரு பக்கம் பணவீக்கத்தை கட்டுப் படுத்தும் பொறுப்பை கொடுத்துவிட்டு மறுபக்கம் ரிசர்வ் வங்கியின் மொத்த அதிகாரத்தையும் மத்திய அரசு எடுத்துக் கொள்ள நினைக்கிறது. இது குறித்து மேலும் பல விவாதங்கள் நடத்த வேண்டிய அவசியம் உண்டாகி இருக்கிறது.

பொருளாதாரத்தை பாதிக்கும்: மூடி’ஸ் கருத்து

ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கையை எடுப்பதினால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அரசாங்கம் நியமிக்கும் உறுப்பினர்களால் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் பாதிக்கப்படும். அதன் பிறகு அரசியல்தான் வட்டி விகிதங்களை தீர்மானிக்கும் சூழ்நிலை உருவாகும் என்று மூடிஸ் நிறுவனம் கருத்து தெரிவித்திருக்கிறது.

வட்டி விகித நிர்ணயம் செய்யும் குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கு அதிக அதிகாரம் இருக்க வேண்டும்.

- சி.ரங்கராஜன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்.

SCROLL FOR NEXT