வணிக வீதி

மதிப்பைக் குறைப்பதால் மாறுதல் வருமா?

வாசு கார்த்தி

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா இப்போது அடிக்கடி சர்வதேச செய்திகளில் அடிபடுகிறது. சில வாரங்களுக்கு முன்பு சீனாவின் பங்குச்சந்தை கடுமையாக சரிந்த போது பெரிதாகப் பேசப்பட்டது. இப்போது சீனாவின் நாணயமான யுவானின் மதிப்பை குறைத்ததன் காரணமாக மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

கடந்த வாரத்தில் இரண்டு முறை சீனா தன்னுடைய நாணயத்தின் மதிப்பை குறைத்தது. இந்த நாட்களில் யுவானின் மதிப்பு சுமார் 3.5 சதவீதம் அளவுக்கு சரிந்தது.

ஏன் சரிய வைக்க வேண்டும்?

நாணயத்தின் மதிப்பை ஏன் செயற்கையாக சரிய வைக்க வேண்டும் என்ற கேள்விக்கு பல நியாயமான காரணங்கள் சீனாவுக்கு இருக்கிறது. சீனா ஏற்றுமதியை பெரிதும் நம்பி இருக்கும் நாடு. ஆனால் ஜூலை மாத ஏற்றுமதி 8.1 சதவீதம் அளவுக்கு சரிந்தது. சர்வதேச மந்த நிலையால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டாலும் உள்நாட்டில் தேவை குறைவு காரணமாகவும் பொருளாதாரம் சரியத் தொடங்கியது.

இந்தச் சரிவைத் தடுக்க கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து நான்கு முறை வட்டி குறைப்பு செய்யப்பட்டது. ஆனாலும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லை. எப்படியாவது பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் திரும்ப வைக்க வேண்டுமென்றால், பலமான நாணய மதிப்பு தடுக்கிறது. எனவே அதை சரிசெய்ய நாணயத்தின் மதிப்பைக் குறைத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் அங்கு வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பினால் உலகின் முக்கியமான கரன்ஸிகளின் மதிப்பு தொடர்ந்து சரிந்தன. ஆனால் சீனாவின் கரன்ஸி கிட்டத்தட்ட நிலையாகவே இருந்தது. யுவானின் மதிப்பைக் குறைப்பதினால் ஏற்றுமதியாளர்கள் பயனடைவார்கள். தவிர மதிப்பு குறையும் போது உள்நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு முதலீடுகள் செல்லாது என்பது உள்ளிட்ட காரணங்களால் யுவானின் மதிப்பு குறைக்கப்பட்டது.

பலன் என்ன?

ஏற்றுமதியை மட்டும் அதிகப்படுத் துவது சீனாவின் நோக்கம் அல்ல. குறைப்புக்காகச் சொல்லப்படும் பல காரணங்களில் இதுவும் ஒன்று. உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொருட் களை ஏற்றுமதி செய்தாக வேண்டும். அப்போதுதான் மீண்டும் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். வேலை வாய்ப்பினை உருவாக்க முடியும். அங்குள்ள தொழிற்சாலையை முழு உற்பத்தி திறனில் இயங்க வைக்க முடியும்.

தவிர, பொருட்கள் மட்டுமல்லாமல் சேகரித்து வைத்திருக்கும் இயற்கை வளங்களையும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருக்கிறது. தற்போது யுவானின் மதிப்பு குறைந்துவிட்டதால் இரும்புத் தாது, ஸ்டீல், ரப்பர் மற்றும் நிலக்கரி உள்ளிட்ட பல இயற்கை வளங்கள் சர்வதேச சந்தை விலையை விட குறைவாக கிடைக்கும். அதனையும் ஏற்றுமதி செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று அதற்கு தேவையான இயற்கை வளங்களை வாங்கி குவித்தார்கள். ஆனால் பொருளாதார மந்த நிலைமை காரணமாக அவற்றுக்கான தேவை குறைந்திருப்பதால் அவற்றை விற்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

மதிப்பை குறைக்க முடியுமா?

கரன்ஸிகளின் மதிப்பானது சந்தை நிலவரத்தை பொறுத்துதான் என்றாலும், சீனா managed floating exchange rate விகிதத்தை பின்பற்றுகிறது. அதாவது. தினசரி காலை 9.15 மணிக்கு சீனாவின் மத்திய வங்கி கரன்ஸி விகிதத்தை நிர்ணயம் செய்யும். 15 நிமிடத்துக்கு பிறகு வர்த்தகம் தொடரும். நிர்ணயம் செய்யப்பட்ட மதிப்பில் இருந்து 2 சதவீதம் மேலே உயரலாம் அல்லது சரிந்து வர்த்தகம் நடக்க அனுமதிக்கப்படும்.

முன்பெல்லாம் சீன மத்திய வங்கி நினைத்ததை விலையாக நிர்ணயம் செய்யும். ஆனால் இப்போது சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முடிவு செய்கிறது. முந்தைய நாள் வர்த்தகத்தை பொறுத்து கரன்ஸி மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது.

சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முடிவு செய்வதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. தற்போது சர்வதேச ரிசர்வ் கரன்ஸிகளாக டாலர், யூரோ, பவுண்ட், யென் ஆகியவை மட்டுமே இருக்கிறது. அந்த பட்டியலில் யுவானைச் சேர்க்க சீனா நீண்ட நாட்களாக முயற்சி செய்துவருகிறது. இந்த பட்டியலில் யுவான் இணையும் போது யுவான் சர்வதேச கரன்ஸியாக மாறும். பொருட்களை வாங்க விற்க டாலர்களை பயன்படுத்த தேவையில் லாமல் தங்கள் நாட்டின் கரன்ஸியையே மக்கள் பயன்படுத்த முடியும்.

அந்த பட்டியலை நிர்ணயம் செய்வது சர்வதேச செலாவணி மையம்(ஐஎம்எப்). சந்தை நிலவரத்துக்கு ஏற்ப கரன்ஸியின் வர்த்தகம் இருந்தால் மட்டுமே அந்த பட்டியலில் சேர்க்க முடியும் என்று ஐஎம்எப் பல காலமாக கூறிக்கொண்டிருக்கிறது. அதற்கான முதல் படியாக இந்த கரன்ஸி மதிப்பு குறைப்பு இருக்கலாம் என்று கரன்ஸி வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

பாதிப்பு என்ன?

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி ஏறுவது போல யுவான் மதிப்பு குறைவு பல நாடுகளை பாதித்திருக்கிறது. யுவான் மதிப்பு சரிந்தவுடன் டாலர் மதிப்பு உயர்ந்தது. இதனால் டாலருக்கு நிகரான உலகின் முக்கியமான கரன்ஸிகளான இந்திய ரூபாய், நியூசிலாந்து, தாய்வான், தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளின் கரன்ஸிகள் சரிந்தன.

ஏற்கெனவே அமெரிக்காவில் பண வீக்கம் குறைவாக இருக்கிறது. இப்போது வெளிச்சூழ்நிலைகள் காரணமாக டாலர் பலமடைந்து வருகிறது.

இப்போது வட்டி விகிதத்தை உயர்த்தினால், பணவீக்கம் உயர்வ தற்கான வாய்ப்பு குறையும். அதனால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித உயர்வை மேலும் சில காலத் துக்கு தள்ளிப்போடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. மற்ற நாடுகளில் மட்டுமல் லாமல் உள்நாட்டிலும் இறக்குமதியை நம்பி இருக்கும் சீன நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. கரன்ஸி மதிப்பு குறைந்த பிறகு சீனா தேசிய விமான நிறுவனத்தின் பங்குகள் 9 சதவீதம் சரிந்தன.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ரூபாயின் மதிப்பு கடந்த இரு வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2013-ம் ஆண்டு நிலவரத்துக்கு ரூபாய் சரிந்துவிட்டது. ஆட்டோமொபைல், ஸ்டீல், டயர் நிறுவனங்கள் பாதிக்கப் படலாம் என்பதால் இந்த துறை நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. அமெரிக்கா எப்போது வட்டி விகிதத்தை உயர்த்தும், சீனா எப்போது சர்வதேச கரன்ஸியாக மாறுவதற்கு அடுத்த என்ன செய்யும் என்ற இரண்டு முக்கியமான கேள்விகளுக்கான பதில்களை எதிர் பார்த்து சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் காத்திருக்கிறார்கள்.

Karthikeyan.v@thehindutamil.co.in

SCROLL FOR NEXT