எனக்குத் தெரிந்த ஒருவர் ஜப்பானிய மொழியில் தேர்ச்சி பெற்றவர். பெங்களுரூவில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியில் இருந்தார். அவரது பெயரை மாற்றி நாம் வான்மீகி எனக் கொள்வோம். உலகளவில் பல நாடுகளில் கிளைகள் உள்ள அந்நிறுவனம் தனது பெங்களூரு கிளை மூலம் ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு மாதந்திர ஊதியம் கொடுத்து வந்தது.
உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் ஆங்கிலப் பயன்பாடு குறைவு. அலுவலகப் பணிகள் எல்லாம் அவர்களது மொழியில்தான். வான்மீகி பணிபுரியும் அந்த அலுவலகத்தில் வேறு யாருக்கும் ஜப்பானிய மொழி தெரியாது. ஜப்பானிலிருந்து மின்னஞ்சல் வந்தாலும், பதில் அனுப்புவதாக இருந்தாலும் அவர் மூலம் மொழிபெயர்க்கப்பட்டுப் பின்னர்தான் அதற்கான வேலை நடக்கும்.
இதனால் வான்மீகிக்குச் சிறுகச் சிறுகக் கர்வம் வர ஆரம்பித்தது. தான் விடுமுறையில் சென்றால் ஜப்பான் குறித்த எல்லா வேலைகளும் நின்றுவிடுவதைப் பார்த்தார். எனவே கூடச் சம்பளம் கேட்டார். நிறுவனம் கொடுக்க வேண்டியதாயிற்று. அவர் அலுவலகத்திற்குத் தாமதமாக வந்தாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. சக ஊழியர்களையும் மேலதிகாரிகளையும் மதிக்காவிட்டாலும் பொறுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. யாரைப் பார்த்தாலும் எரிச்சல்படுவது, சத்தம் போடுவது என நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகமாயிற்று.
பலகாலம் பொறுத்துப் பார்த்த நிர்வாகம் ரகசியமாக வேறு ஒருவரை அந்த வேலைக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்து விட்டது. வான்மீகி தமது வேலையில் திறமைசாலியாகவும், அனுபவம் மிக்கவருமாக இருந்தார். ஆனால் தனது நடவடிக்கைகளால், எல்லோருடைய வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டு விட்டார். எனவே அவரை திடீரென வேலையிலிருந்து நீக்கிய பொழுது யாரும் அவரது ஆதரவுக்கு வரவில்லை.
அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி வான்மீகி போன்ற மனிதர்களைச் சந்திக்கிறோம். அடிப்படையில் திறமைசாலிகளாக இருந்தாலும் தமது சில பழக்கவழக்கங்களால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு விடுகிறார்கள். ஹவுஸிங் டாட்காமின் ராகுல் யாதவின் அதிவேக எழுச்சியையும் திடீர் வீழ்ச்சியையும் பத்திரிகைகளில் பார்த்து இருப்பீர்கள். கூகுள் செய்து படியுங்கள், புரியும்!
திருமண முறிவுகளுக்கும் விவசாயி தற்கொலைகளுக்கும் கூடக் காரணம் தொடர்ந்து நடக்கும் தவறுகள் தானோ?
சாலையில் பயணிக்கும் பொழுது சிலசமயம் மிக அதிகமாக வைக்கோல் ஏற்றிய லாரிகளைப் பார்த்து இருப்பீர்கள். லாரியின் கண்ணாடியைக் கூட மறைக்குமளவுக்கும் நான்கு புறமும் வைக்கோல் நிரம்பி வழிந்தும் ஆடி ஆடிச் செல்லும். இதுபோல மிதமிஞ்சிய பஞ்சுமூட்டைகளைப் பாரமேற்றிய வண்டிகளையும் பார்த்து இருப்பீர்கள். இவைகளைப் பார்த்தால் அந்த லாரி எப்பொழுது கவிழுமோ என்கிற அச்சம் ஏற்படும். வைக்கோலும் பஞ்சும் மிக லேசானவை. ஆனால் அவற்றை மிக அதிகமாக ஏற்றினால் வண்டி கவிழத்தானே செய்யும்!
மயிலிறகை ஏற்றியுள்ள வண்டிகூட, அதை அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முறிந்து கெடும் என்கிறது குறள். எங்குமே ஓவர்லோடு ஆபத்துதானே?
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் - குறள் 475
somaiah.veerappan@gmail.com