எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com
வருங்காலம் கேள்விக்குறி. குடும்பத்தில் வசதிகள் குறைவு. உதவவும் யாருமில்லை. ஈலான் மனதில் கவலை, குழப்பம். அல்லாடும் உள்ளம் நங்கூரம் தேடியது. எல்லோரையும் போல, அவனும் தத்துவத்தில் அடைக்கலம் தேடினான். டக்ளஸ் ஆடம்ஸ் (Douglas Adams) என்னும் ஆங்கில எழுத்தாளரின் The Hitchhiker's Guide to the Galaxy என்னும் புத்தகம் அப்போது மிகப் பிரபலம். ‘‘விண்வெளியில் இருக்கும் பால்வழி மண்டலத்தில் நடைப்பயணம் செய்வோருக்கான வழிகாட்டி” என்று அர்த்தம்.
அயல் கிரகத்திலிருந்து வரும் தீய சக்திகளால் உலகம் அழிக்கப்படுகிறது. விண்வெளிக்குத் தப்பியோடும் ஒரு மனிதரின் அனுபவத்தைச் சொல்லும் நகைச்சுவை கலந்த அறிவியல் கற்பனை நூல். 1978–ல் பி.பி.சி. ரேடியோ ஒலிபரப்பு நாடகமாக வந்தது. ரசிகர்களின் அமோக வரவேற்பு. 1981–ல், தொலைக்காட்சி ஒளிபரப்பு; 1984–ல் வீடியோ கேம்; 1985–ல் புத்தகம். அனைத்து ஊடக வடிவங்களிலும் சூப்பர் டூப்பர் சக்ஸஸ்.
டக்ளஸ் ஆடம்ஸ், தன் படைப்பில் ஒரு கேள்வியை எழுப்பினார், ``வாழ்க்கைக்கும், பிரபஞ்சத்துக்கும் நிஜமான அர்த்தம் என்ன?” அவர் தந்த பதில், ``42.” ஆமாம், 42 என்னும் எண். யாருக்கும் இது புரியவில்லை. டக்ளஸிடம் விளக்கம் கேட்டார்கள். வெறும் ஜோக் என்று பதில் சொன்னார். யாரும் நம்பவில்லை. ஆழமான அர்த்தம் இருப்பதாக இன்றும் தேடி வருகிறார்கள். இந்தக் கேள்வி ஈலான் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ``நான் யார், நான் ஏன் பிறந்தேன், வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும்” என்று உள்மனத் தேடல்கள். வருங்காலம் பற்றித் தீவிரமாகச் சிந்தித்தான்.
பென்சில்வேனியா பல்கலைக் கழக மாணவர்களை, அதிலும், ஈலானைப் போன்ற அதிபுத்திசாலிகளை, பிரம்மாண்ட கம்பெனிகள் வரிசையில் நின்று வேலை தரக் காத்திருந்தார்கள். ஆனால், டக்ளஸின் புத்தகம் ஏற்படுத்திய தாக்கம் - லட்சக் கணக்காக வாரிக் கொடுத்தாலும், இன்னொருவர்கீழ் வேலை பார்க்க ஈலான் விரும்பவில்லை.
கனடா கல்லூரிப் படிப்பின் போது, கோடை விடுமுறையில், நோவா ஸ்காட்டியா வங்கியில் பெற்ற கசப்பான அனுபவம். தன் ஐடியாக்கள் புறம் தள்ளப்படும், அங்கீகாரமே கிடைக்காது. நரை முளைத்து, உடல் களைத்து, ஓய்வு பெறுவது வரை கார்ப்பரேட் எந்திரத்தின் உதிரிபாகமாகத்தான் இருக்க வேண்டும். ஆகவே, வேண்டாம் வேலை. சொந்த பிசினஸ்தான்.
அவனிடம் முதலீடு செய்யப் பணம் இல்லை என்பது நிஜம். ஆனால், கையில் காசு இருந்தால் மட்டுமே தொழில் தொடங்கமுடியும் என்னும் காலம் உலகம் முழுக்க மலையேறிவிட்டது. வித்தியாசமான பிசினஸ் திட்டம் இருந்தால், பணத்தைக் கொட்டத் துணிகர முதலீட்டாளர்கள் ஏராளம். ஆகவே, இது பிரச்சினையில்லை. பிசினஸ் தொடங்க இன்னொரு தேவை- ரிஸ்க் எடுக்கும் துணிச்சல். அவனிடம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது.
பிசினஸ் நிலையான வருமானம் தருவதல்ல. ஏற்ற இறக்கங்கள் அடிக்கடி வரும். அவற்றைப் புரிந்துகொண்டு ஆதரவு தரும் தோள்கள் தேவை. அதிர்ஷ்டவசமாக அவனுக்குக் குடும்பம் அப்படி இருந்தது. பிசினஸின் நுணுக்கங்கள் தெரிந்த, தியாகங்கள் செய்யத் தயாராக இருந்த அம்மா, அண்ணனைவிட அதிகம் பிசினஸ் உணர்வுகள் கொண்ட தம்பி கிம்பல்.
என்ன பிசினஸ் தொடங்கலாம்? ஈலான் தீவிரமாக ஆலோசித்தான். அவன் முதன் முதலாக லாபம் பார்த்தது ஈஸ்ட்டர் முட்டைகளில். அது சிறுபிள்ளை விளையாட்டு. அடுத்ததாக, 500 டாலர்கள் வருமானம், அவன் கண்டுபிடித்த Blaster என்னும் வீடியோ கேமின் காப்புரிமையை விற்றதில். இந்த வெற்றி அனுபவத்தால், அவன் மூளை காட்டிய முதல் பிசினஸ், வீடியோகேம்ஸ்.
உடனேயே, அவன் மனம் சொன்னது,``நீ இப்போது தென்னாப்பிரிக்காவிலிருந்து ஓடி வந்தவனல்ல, அமெரிக்கக் குடிமகன், சகலகலா வல்லவர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் நிறுவிய பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் பட்டை தீட்டப்பட்ட பட்டதாரி. வீடியோகேம்ஸ் பிசினஸ் தொடங்கினால், கோடிக் கோடியாகச் சம்பாதிப்பாய். ஆனால், வெறும் லாபம் தேடும் பிசினஸ்மேனாக நீ இருக்கக்கூடாது. உன் எடுத்துக்காட்டு மனிதர்களான பெஞ்சமின் ஃப்ராங்கிளின் போல், ஐன்ஸ்டின் போல், மனித வாழ்க்கையை மாற்றும் சாதனைகள் செய்யவேண்டும், வரலாற்றில் அழுத்தமான காலடித் தடங்கள் பதிக்க வேண்டும்.”
சாதாரணமாக எல்லோரும் ரூம் போட்டு யோசிப்பார்கள். ஈலான் சாதாரண ஆளில்லையே? என்ன பிசினஸ் தொடங்கலாம் என்று முடிவெடுக்கப் புதிய வழி. அண்ணனும், தம்பி கிம்பலும் சேர்ந்து ஓல்டு மாடல் பி.எம்.டபிள்யூ கார் வாங்கினார்கள். அமெரிக்காவில் பல மாதங்கள் சுற்றுப் பயணம். எந்தத் துறையில் பிசினஸ் தொடங்க வேண்டும் என்னும் திட்டத்தோடு திரும்புவது குறிக்கோள்.
1989. இணையதள, இன்டர்நெட் வரலாற்றில் மிக முக்கியமான வருடம். டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners Lee) என்னும் இங்கிலாந்து கம்ப்யூட்டர் விஞ்ஞானி, முதல் இணையதளம் உருவாக்கினார். இதே வருடம்தான், யாஹூ நிறுவனமும் தொடங்கியது. அண்ணனும், தம்பியும் இன்டர்நெட் பற்றிய விவரங்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்தார்கள். அசந்துபோனார்கள்.
1969-ல் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையால் இன்டர்நெட் உருவாக்கப்பட்டது, பயன்படுத்தப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1971-ல் அமெரிக்க ராணுவம், தங்களுடைய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல் பரிமாற்றங்களுக்காக அஞ்சல் அனுப்புவதற்கான வழிமுறைகளை உருவாக்கினார்கள்.
இந்தக் காலகட்டத்தில், கம்ப்யூட்டர் வன்பொருளிலும் மாபெரும் முன்னேற்றங்கள். 1976-ல் தனிமனிதன் உபயோகிக்கும் பர்ஸனல் கம்ப்யூட்டர்களை, எல்லோரும் வாங்கும் விலையில் ஆப்பிள் கம்பெனி விற்பனைக்குக் கொண்டு வந்தார்கள். 1981–ல் இந்தத்துறைக்கு வந்த ஐ.பி.எம்.கம்பெனி, பர்ஸனல் கம்ப்யூட்டர்களின் பயன்படுத்தலைப் பரவலாக்கியது. 1985-ல் விண்டோஸ் 1, 1990–இல் விண்டோஸ் 3 என மைக்ரோசாஃப்ட் கம்பெனி அறிமுகம் செய்த ஆப்ரேட்டிங் சிஸ்டம்கள் இதை இன்னும் சுலபமாக்கின.
கம்ப்யூட்டர் பயன்படுத்துவது இத்தனை ஈசியா? வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்கத்தொடங்கினார்கள். விண்டோஸ் 3 கோடிக்கணக்கில் விற்றது. விண்டோஸ் பொருத்திய கம்ப்யூட்டர்களுக்கு அமெரிக்கர்கள் தங்கள் வீடுகளில் நிரந்தர இடம் ஒதுக்கினார்கள்.
கடிதங்கள் டைப் செய்ய வேண்டுமா? கம்ப்யூட்டர் கொண்டு வா! கணக்குகள் போட வேண்டுமா? எடு கம்ப்யூட்டரை! தகவல்களை அழகாக சமர்ப்பிக்க வேண்டுமா? கூப்பிடு கம்ப்யூட்டரை. சகலம் கம்ப்யூட்டர் மயம்!
1991. தொலைத்தொடர்புத் துறையின் மாபெரும் மைல்கல். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அமெரிக்க ராணுவத்தினரின் ஏகபோக உரிமையாக இருந்த இன்டர்நெட்டைப் பொதுமக்களின் உபயோகத்துக்கு அனுமதித்தார். உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் தொடர்பு கொள்ளும் தகவல் பரிமாற்றம் நினைத்துப் பார்த்திருக்கவே முடியாத மின்னல் வேகத்தில், சல்லிசான விலையில்!
1994–க்குள், அதாவது, மூன்றே வருடங்களில், இன்டர்நெட் மூலமாக அனுப்பப்படும் ``தகவல்கள்” 2,300 மடங்கு, அதாவது 2,30,000 சதவிகிதம் வளர்ந்தன. வேறு எந்தத் துறையிலும் கண்டிராத, கேட்டேயிராத ராட்சச வளர்ச்சி! ஜெஃப்பெஸோஸ், 1994–ல் அமேசான்.காம் தொடங்கியதற்கு, இந்த வளர்ச்சிதான் காரணம்.
ஈலானுக்கு வயது 24. முதுகலைப் பட்டதாரி. சீக்கிரமே பிசினஸ் தொடங்கப்போகிறார். ஆகவே,இனிமேல் நமக்கு ஈலான் “அவன்” அல்ல, ‘‘அவர்.”
இன்டர்நெட் தொடர்பான பிசினஸ்தான் என்று அண்ணனும், தம்பியும் முடிவெடுத்தார்கள். ஈ-காமர்ஸ் அவர்களுக்கு விருப்பமில்லை. புதிய பாதை போட வேண்டும். அப்போது, கோடை விடுமுறைப் பயிற்சியில் சந்தித்த ஒரு அனுபவம் ஈலான் நினைவுக்கு வந்தது. அவர்கள் ஈடுபட்டிருக்கும் தொழில்களின் அடிப்படையில் வரிசை பிரித்து, கம்பெனிகளின் விலாசமும், விவரங்களும் கொண்ட கையேடு* வெளியிடும் பதிப்பகத்தின் விற்பனைப் பிரதிநிதி ஒருவர் ராக்கெட் கேம்ஸ் கம்பெனிக்கு வந்தார். தன் சேவைகளை விளக்கினார். அவருக்குப் பேச்சுத்திறமை போதாது. ஆகவே, ராக்கெட் கேம்ஸை அவரால் திருப்திப்படுத்த முடியவில்லை.
* இவற்றை ‘‘மஞ்சள் பக்கங்கள்” (Yellow Pages) என்று அழைப்பார்கள். 1883–ம் ஆண்டு, அமெரிக்காவில் ஒரு அச்சகம், உள்ளூர் டெலிபோன் டைரக்டரி தயாரித்துக்கொண்டிருந்தார்கள். வெள்ளைப் பேப்பர் தீர்ந்துவிட்டது. கைவசம் இருந்த மஞ்சள் நிறக் காகிதம் பயன்படுத்தினார்கள். 1886–ல், ரூபென் டானெல்லி(Reuben Donnelley), தொழில்களின் அடிப்படையில் வரிசை பிரிக்கும் டைரக்டரி உருவாக்கினார். வித்தியாசம் காட்டுவதற்காக அத்தனை பக்கங்களையும் மஞ்சள் நிறக் காகிதத்தில் அச்சிட்டார். பின் இத்தகைய டைரக்டரிகள் தயாரிப்பாளர் எல்லோரும் மஞ்சள் காகிதத்துக்கு மாறிவிட்டார்கள். இத்தகைய டைரக்டரிகளின் பெயரே, Yellow Pages என்று ஆகிவிட்டது.
பிரதிநிதியின் பேச்சை ஈலான் கேட்டார். சிறிய, குறிப்பாக ஸ்டார்ட்-அப் கம்பெனிகளிடம் பணவசதி குறைவு. ஆகவே, குறைந்த செலவில்தங்களை விளம்பரம் செய்துகொள்ள YellowPages அரிய வாய்ப்பு என்று ஈலான் மனதில் ஆழமாகப் பதிந்தது. இப்போது, ஈலான் மனதில் பொறி - Yellow Pages-ஐ இன்டர்நெட்டில் செய்தால்… கிம்பலும் பச்சை விளக்குக் காட்டினார். அவரும் சிலிக்கான் பள்ளத்தாக்குக்கு வந்து அண்ணனோடு சேர்ந்துகொண்டார்.
ஈலான் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் டாக்டர் படிப்புக்கான வகுப்புகளுக்கு இரண்டே நாட்கள்தான் போயிருந்தார். படிப்புக்கு குட் பை. “க்ளோபல் லின்க் இன்ஃபர்மேஷன் நெட்வொர்க்” (Global Link Information Network) என்னும் கம்பெனி தொடங்கினார்கள். வெறும் கையால் முழம் போட்டாலும், நினைப்பு எல்லாம் அகில உலக ஆட்சிதான்!
(புதியதோர் உலகம் செய்வோம்!)