பஜாஜ் நிறுவனமும் ட்ரயம்ப் நிறுவனமும் 2017-ல் இணைந்து மோட்டார் சைக்கிள் சந்தையில் செயல்பட தீர்மானித்தன. இந்நிலையில் ட்ரயம்ப் பிராண்டில் மோட்டார்சைக்கிள்களை பஜாஜ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தயாரிப்புகள் 2022-ல் சந்தைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விலை ரூ.2 லட்சத்திலிருந்து ஆரம்பமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
200சிசி முதல் 750சிசி வரையிலான திறன்களில் பல்வேறு மாடல்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இவற்றில் பல புதிய பிளாட்ஃபார்ம்களைப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், எல்லாமே ட்ரயம்ப் என்ற பெயரில்தான் வெளியாகும். பஜாஜ் பெயர் எதிலும் இடம்பெறாது எனவும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இந்த மோட்டார் சைக்கிள்கள் ரெட்ரோ குருயிசர் வகைகளாக இருக்கும் எனவும் தெரிகிறது. டிசைன், கட்டமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் பஜாஜ்-ட்ரயம்ப் இரண்டு நிறுவனங்களும் இணைந்தே செயல்பட உள்ளன. அட்டகாசமான தயாரிப்புகளாக அவை வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.