வணிக வீதி

பேமெண்ட் வங்கிகளால் பாதிப்பா?

செய்திப்பிரிவு

சில நாட்களுக்கு முன்பு 11 நிறுவனங்கள் / தனிநபர்கள் பேமெண்ட் வங்கி தொடங்கு வதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது. இந்த வங்கிகளுக்கு இன்னும் 18 மாதங்களில் செயல்படுவதற்கான உரிமம் வழங்கப்படும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பேமெண்ட் வங்கி தொடங்கு வதால், அதிக கிளைகளைக் கொண்டுள்ள பெரிய வங்கிகளுக்கு ஆபத்து என்று எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். பேமெண்ட் வங்கிகள் டெபாசிட்களுக்கு அதிக வட்டி விகிதம் கொடுக்கும் பட்சத்தில் பெரும்பாலான மக்கள் அங்கு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். இது இப்போது செயல்படும் வங்கிகளுக்கு கவலைதரும் விஷயம் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் பேமெண்ட் வங்கிகள், தற்போது இயங்கிவரும் வங்கிகளுக்கு போட்டி அல்ல என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருக்கிறார்.

போட்டியாகக் கருத என்ன காரணம்?

வங்கி அமைப்புகளில் இல்லாதவர்களை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் பேமெண்ட் வங்கிகள். இந்த வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய முடியும். அதுவும் ஒரு லட்ச ரூபாய் வரைதான் டெபாசிட் செய்ய முடியும். இந்த வங்கிகள் கடனோ/கடன் அட்டையோ வழங்க முடியாது. ஆனால் டெபிட் கார்டு வழங்கலாம்.

பேமெண்ட் வங்கிகளுக்கு எல்லை இருந்தாலும், வங்கிகளின் காசா விகிதம் (current and savings account ratio) குறையும் என்று வங்கிகள் கருதுகின்றன. வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தினசரி செலவுகளுக்கு வைத்திருக்கும் தொகையை பேமெண்ட் வங்கிகளுக்கு மாற்றிக்கொள்ளக்கூடும் என்று கருதுகின்றன. பேமெண்ட் வங்கியில் வைத்து தங்களுடைய அன்றாட செலவுகளை மக்கள் செய்வார்கள் என்று பெரிய வங்கிகள் நினைக்கின்றன.

வாடிக்கையாளர்கள்/நிறுவனங்கள் வங்கியில் வைத்திருக்கும் தொகைக்கு குறைந்த வட்டி அல்லது வட்டியே கொடுக்கத் தேவையில்லை. காசா விகிதம் அதிகமாக இருப்பது வங்கிகளுக்கு நல்லது. வங்கித்துறையைக் கவனிக்கும் வல்லுநர்கள்/முதலீட்டாளர்கள் காசா விகிதத்தை கவனிப்பார்கள். காசா விகிதம் குறையும்போது அதிக வட்டி முதலீடுகளை ஈர்த்தாக வேண்டும். இதனை பெரிய பிரச்சினையாக வங்கிகள் கருதுகின்றன.

காசா விகிதம் குறைவாக இருப்பதால் யெஸ் வங்கி, கோடக் வங்கி ஆகியவை சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி கொடுக்கின்றன. தவிர பரிவர்த்தனை கட்டணம் மூலமே பேமெண்ட் வங்கிகள் செயல்பட முடியும். இதனால் தங்களுக்கு வர வேண்டிய கட்டணங்கள் குறையும் என கருத வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு வங்கிகளின் இதர வருமானம், கிட்டத்தட்ட நிகர லாபத்துக்கு இணையாக இருக்கிறது.

தற்போது வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்காக பேமெண்ட் வங்கிகள் தொடங்கப்படவில்லை. வங்கி அமைப்புக்குள் வாராமல் இருக்கும் எண்ணிலடங்கா சிறிய முதலீட்டாளர்களுக்காகத் தொடங்கப்பட உள்ளது. பேமெண்ட் வங்கிகளுக்கு வருபவர்கள் முற்றிலும் புதிய வாடிக்கையாளர்கள், அதனால் வங்கிகள் கவலைப்படத்தேவையில்லை என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

செப்டம்பர் மாதத்தில் சிறிய வங்கிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்திருக்கிறார். சிறிய வங்கிகள் கடன் கொடுக்க முடியும் என்பதால் அப்போது போட்டி இன்னும் அதிகரிக்கும்.

SCROLL FOR NEXT