மத்திய அரசு, நலத்திட்டங்களுக்கு ஒதுக்கியுள்ள நிதியை குறைக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதாவது, அரசு நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது; எனவே, நலத்திட்டங்களுக்கான செலவினங்களை குறைப்பதன் மூலம், பற்றாக்குறை விகிதத்தை ஈடுகட்ட திட்டமிட்டுள்ளது.
2019-20-ம் நிதி ஆண்டு செலவினங்களுக்காக மத்திய அரசு ரூ.27.86 லட்சம் கோடியை ஒதுக்கியது. நாட்டின் உட்கட்டமைப்புத் திட்டங்கள், கல்வி, மருத்துவம், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் அடிப்படை வளர்ச்சிக்கான செலவினங்கள் இந்த நிதியில் இருந்தே மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிதியில் பெரும்பகுதி வரி வருவாய் மூலமே அரசுக்கு கிடைக்கிறது. தற்போது வரி வருவாய் அரசு நிர்ணயித்திருந்த இலக்கைவிட குறைந்துள்ளது. இதனால் அரசுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த தொகையில் ரூ.2 லட்சம் கோடியை குறைக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு அரசு தனது செலவினங்களைக் குறைத்தால் நாடு இன்னும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படும்; மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைத் தரமும் நெருக்கடிக்கு உள்ளாகும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த ஓராண்டு முதலாகவே இந்தியா கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 4.5 சதவீதமாகவும் சரிந்துஉள்ளது. இவை கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவுகள் ஆகும். மக்களின் நுகர்வு திறன் குறைந்து இருப்பதே தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. மக்களிடம் செலவு செய்ய போதிய பணம் இல்லாதபட்சத்தில் அவர்கள் தங்கள் செலவினங்களைக் குறைத்துக்கொள்கின்றனர்.
இதன் விளைவாகவே நிறுவனங்களும் அதன் உற்பத்தியைக் குறைத்துக்கொள்கின்றன. இந்தச் சூழலில், பொருளாதாரத்தை மீட்க வேண்டுமென்றால் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு நிறுவனங்களுக்கான நிறுவன வரியை 10 சதவீதம் அளவில் குறைத்தது. இதனால் நிறுவனங்கள் மூலம் கிடைக்கக்கூடிய வரியில் ரூ.1.45 லட்சம் கோடி அரசுக்கு இழப்பாக மாறியது.
தவிரவும், ஜிஎஸ்டி, பிற நேரடி வருவாய்களும் தற்போதையை பொருளாதாரச் சூழலில் குறைவாகவே வசூலாகிறது. இதனால் அரசுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவில் வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில்தான் அரசு மக்களுக்கான செலவினத்தில் கைவைக்கிறது.
2019-20-ம் நிதி ஆண்டில் பள்ளிக்கல்வி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.56,536 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது அதில் ரூ.3,000 கோடியை குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு மக்கள்சார் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் குறைய குறைய நாட்டின் வாழ்க்கைத் தரம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். அரசு, மக்கள் சார்ந்து சிந்திக்காமல் நிறுவனங்களுக்கே அனைத்து சலுகைகளையும் அள்ளித்தருவதாக தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுகின்றன.
அதாவது, தற்போதைய பிரச்சினை மக்களிடம் போதியப் பணப்புழக்கம் இல்லை என்பதே. அதை சரி செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் நிறுவனங்களுக்கான வரியை குறைத்து இருப்பது பொருத்தமான நடவடிக்கை இல்லை என்று முக்கிய பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அரசு முறையான திட்டமிடல் இன்றி மேற்கொள்ளும் செயல்பாடுகளினால் இறுதியாக மக்களே பாதிக்கப்படுகின்றனர். கல்வி உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் சார்ந்த செலவினங்கள் குறைக்கப்படும்போது அது நாட்டின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்யும் என்பதை அரசு உணர வேண்டும்.