சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com
அது என்ன, விளம்பரம் செய்வது உடனடி பலன் தராது என்று ஒரே போடாய் போட்டுவிட்டாயே என்றுபலர் ஆச்சரியமாய் கேட்கிறார்கள். முதலிலேயே ஒன்றை தெளிவாக்கிவிடுகிறேன். எனக்கும் விளம்பரத்துக்கும் எந்த முன்விரோதமும் இல்லை. விளம்பரம் பற்றி இல்லாததும் பொல்லாததுமாய் பலர் பலவற்றை கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள்.
அதன் சக்திக்கு மீறி விளம்பரத்தின் மீது ஓவராய் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். விளம்பரத்தை சர்வ ரோகநிவாரணியாய் நினைத்து விளம்பரம் செய்த மாத்திரம் விற்பனை வெடுக்கென்று கூடி படக்கென்று தங்கள் விற்பனை பிரச்சினை தீரும் என்று விபரீதமாய் கற்பனை செய்கிறார்கள். அப்படி நடக்காதபோது விளம்பரத்தின் மீது பழி போடுகிறார்கள்.
பலர் நினைப்பது போல் விளம்பரம் கேட்டதை கேட்ட மாத்திரம் தரும் கர்ப்பக விருட்சம் அல்ல என்பதை தெளிவாக்குவதே என் நோக்கம். பெரிய கம்பெனிகளிடம் நிறைய பணம் இருக்கும், விளம்பரத்தில் வாரி இரைத்து அது மெதுவாய் பலன் தந்தால் கூட போதும் என்று நினைப்பார்கள். அதைப் பார்த்து சூடு போட்டுக்கொள்ளும் ஸ்டார்ட் அப்பாய் இருக்காதீர்கள்.
பெரிய தொழிலதிபர்களால் தங்கள் விளம்பரங்களில் தாங்களே தோன்றுவதைப் போல் நாமும் செய்தால், அவர்களை போல் விரைவாய் வளர்வோம் என்று மனப்பால் குடிக்காதீர்கள். அவர்கள் பல காலமாய் விளம்பரம் செய்து வருபவர்கள். அவர்களை பிடிக்கிறதோ இல்லையோ அவர்கள் பிராண்டை மக்கள் வாங்கி பழகியிருப்பதால் தொடர்ந்து வாங்குகிறார்கள். நீங்கள்இப்பொழுதுதான் ஸ்டார்ட் அப்லெவலில் இருக்கிறீர்கள். விளம்பரம் பற்றி விவரமாய் உணர்ந்து செயல்படுவது உங்கள் வியாபாரத்திற்கும் உசிதம்.
விளம்பரம் ஒரு ஸ்லோ பாய்சன். மயிலிறகாய் மக்களை வருடி ஒரு நாள் இல்லை ஒரு நாள் கடைக்கு சென்று பிராண்டை வாங்க வைக்கும். கண்ட மாத்திரம் கழுத்தை பிடித்துத் கடைக்குத் தள்ளி வாங்க வைக்க விளம்பரத்துக்கு தெரியாது. அப்படி செய் என்று அதை போட்டு படுத்தாதீர்கள். பிறகெதற்கு விளம்பரம் செய்கிறதாம் என்று உங்களுக்குத் தோன்றும். விளம்பரம் நம்மை சட்டென்று வற்புறுத்தி வாங்கவைக்க அல்ல. பிராண்டை பற்றியநல்ல அம்சங்களை நம் மனதில் பதிய வைக்கத்தான் விளம்பரம். பிராண்ட்பூர்த்தி செய்யும் தீர்வின் தாக்கம் அதிகரிக்கும் போது பிராண்டை வாங்க தோன்றுகிறது. அவசர அடி ரங்காவாய் அடிதடியாய் விளம்பரத்துக்கு வேலை செய்யத் தெரியாது.
விளம்பரம் மக்கள் மனதில் சின்னமாற்றங்களை மட்டுமே உருவாக்கும். இன்றைய விளம்பர காட்டு இரைச்சலில் விளம்பரம் இதை செய்தாலேஎதேஷ்டம். இந்த சின்ன மாற்றங்கள்தான் கொஞ்சம் கொஞ்சமாய் மனதில் சேர்ந்து நாளடைவில் பெரிய மாற்றமாய் உருவாகிறது. இதனால்தான் விளம்பரத்தால் ஏற்படும் தாக்கம் நமக்கு சட்டென்று தெரிவதில்லை. குழந்தை தினம் வளர்வது எப்படி அதன் பெற்றோர்க்கு தெரியாமல் இருக்கிறதோ அதுபோல. அதனால் ஓரிரு விளம்பரம் மட்டும் செய்து கடையில் கூட்டம் சேர்ந்து கல்லா ஃபுல்லாகிறதா என்று பார்ப்பது பஞ்ச மாபாதகம்.
வாடிக்கையாளர் மனதில் விளம்பரத்தின் தாக்கம் இருந்ததா என்பதை சோதித்துப் பார்க்க ஒரு வழி உண்டு. வாடிக்கையாளர் மனதில் பிராண்ட் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பது. ஒரு பொருள் பிரிவில் பல பிராண்டுகள் இருந்தாலும் அனைத்தையும் வாடிக்கையாளர் தெரிந்து வைத்திருப்பதில்லை. அதிலுள்ள சில பல பிராண்டுகளின் பெயர்கள் மட்டுமே மனதில் நிற்கும். அதே போல் தெரிந்திருக்கும் அத்தனை பிராண்டுகளையும் அலசிப் பார்த்துத் தான் வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை, அது முடிவதுமில்லை.
ஒரு பொருளை வாங்க முடிவெடுக்கும் போது அந்த பிரிவில் ஒரு சில குறிப்பிட்ட பிராண்டுகளை மட்டுமே மனம் அலசிப் ஆராய்ந்து பார்த்து ஒன்றை வாங்க முடிவெடுக்கிறது. ஆக,பொருள் பிரிவில் பல பிராண்டுகள் இருந்தாலும், சில பிராண்டுகள் மட்டுமேநினைவில் நிற்க அதில் ஒரு சில குறிப்பிட்ட பிராண்டுகளை மட்டுமே மனம்ஷார்ட் லிஸ்ட் செய்கிறது. இந்த ஷார்ட் லிஸ்ட்டை ‘பரிசீலிப்பு தொகுப்பு’ (Consideration set) என்பார்கள். விளம்பரம் பிராண்டை இந்த பரிசீலிப்பு தொகுப்பில் கொண்டு சேர்த்தால் தன் வேலை ஒழுங்கு மரியாதையாய் செய்துவிட்டது என்று அர்த்தம். அதற்கு பிறகு ஈஸ்வரோ ரஷது!
அதனாலேயே விளம்பரத்தில் பிராண்டை பற்றி ஒரு விஷயத்தை ஆணித்தரமாய் சொல்லவேண்டும். அதைத் தான் மீண்டும் மீண்டும் கூறவேண்டும். ‘கறை நல்லது’ என்றுசொன்ன மாத்திரம் ‘சர்ஃப்’ பிராண்ட் நினைவுக்கு வருவது எதனால்? இந்தஒரு கருத்தை மட்டுமே பல பல ஆண்டுகளாய் சர்ஃப் தன் விளம்பரத்தில் கூறி வருவதால். ‘விதவிதமான ரகங்கள்’, ‘சூப்பர் கலெக்ஷன்ஸ்’ போன்றவற்றை கேட்டால் எந்தப் புடவை கடை ஞாபகத்துக்கு வருகிறது? ஒரு கடையும் ஞாபகத்துக்கு வராமல் போவது ஏன் என்று இப்பொழுது புரிந்திருக்கும்.
சகட்டுமேனிக்கு எல்லா புடவை கடை விளம்பரங்களும் இதையே கூறித் தொலைப்பதால். இதனாலேயே எந்த புடவை கடை விளம்பரம் என்று தெரிய விளம்பர இறுதியில் வரும் பெயரை படித்தால் தான் தெரிகிறது. புடவை கடை பிராண்டுகள் விளம்பரத்துக்கு ஏன் இத்தனை செலவழிக்கின்றன என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும். அவர்களிடம் இருக்கிறது, செலவழிக்கிறார்கள். ஸ்டார்ட் அப் அப்படி செய்தால் சீக்கிரமே பேக் அப் தான்!
விளம்பர எறும்பு ஊற ஊறத் தான் வாடிக்கையாளர் மனம் தேயும். அப்படி ஊறும் அளவிற்கு பணம் இல்லை என்றால் விளம்பர விளையாட்டு விளையாடாமல் இருப்பது நலம். அய்யோ, விளம்பரம் இல்லாமல் எப்படி என் ஸ்டார்ட் அப்பை வளர்க்கிறதாம் என்றுகேட்பவர்களுக்கு வழியும் விமோசனமும் உண்டு. அடுத்த வாரம் அவை அருளப்படும்!