வணிக வீதி

உன்னால் முடியும்: பிளாஸ்டிக் பைகளுக்கு எதிரான விழிப்புணர்வுதான் என் பலம்

நீரை மகேந்திரன்

சென்னை சூளைமேட்டில் வசிக்கிறார் கிருபாகரன். வயது.27. பிறந்த ஊர் செங்கல்பட்டு. தொழில் நிமித்தமாக பெற்றோர்கள் சென்னையில் செட்டிலாக சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்தவர். சணல் பைகள் தயாரிக்கும் ஒரு வட இந்திய நிறுவனத்தின் சென்னை விற்பனை மையத்தில் மாதம் ரூ.3,000 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தவர். இது சில வருடங்களுக்கு முந்தைய கதை. இன்று பத்து பணியாளர்களுக்கு வேலை கொடுக்கும் தொழில்முனைவராக வளர்ந்திருக்கிறார். அவரது தொழில் அனுபவத்தை இந்த வாரம் உன்னால் முடியும் பகுதிக்காக பகிர்ந்து கொண்டதிலிருந்து...

படிப்பு வரவில்லை, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பம் இந்த இரண்டு பின்புலங்களும் என்னை சிறு வயதிலேயே வேலைக்குச் செல்லத் துரத்தியது. சில வேலைகளுக்கு பிறகு சணல் பைகளை விற்பனை செய்யும் ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். தினசரி சம்பளம் 100 ரூபாய். அந்த நிறுவனம் கொல்கத்தாவில் சணல் பைகளை உற்பத்தி செய்து இங்கு அனுப்பிக் கொண்டிருந்தது. சில்லரை விற்பனை தவிர, இங்கு சணல் பைகள் தயாரிப்பவர்களுக்காக மூலப் பொருட்களையும் அனுப்பிவைக்கும்.

இந்த மூலப் பொருட்களை, இங்கு ஏற்கெனவே சிறிய அளவில் உற்பத்தி செய்பவர்களும், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் வாங்கிச் செல்வர். விற்பனை வேலையோடு மூலப்பொருட்களை இவர்களுக்கு அனுப்பும் வேலையையும் கவனித்துக் கொண்டிருந்தேன். எனவே இந்த தொழில் குறித்த பல்வேறு அனுபவங்களும் தானாகவே கிடைக்கத் தொடங்கின. ஆனால் சொந்த தொழில் தொடங்குவதற்கான எண்ணமெல்லாம் அப்போது கிடையாது. சம்பளம் அதிகமாகக் கொடுத்தாலே போதும் என்பதாகத்தான் இருந்தது.

இந்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கும்போதே திறந்தவழி கல்வியில் பிஏ பொது நிர்வாகம் படித்து பட்டம் பெற்றேன். மாத சம்பளத்தில் வீட்டுக்கு கொடுப்பது, கொஞ்சம் சேமிப்பு, கல்வி செலவு என திட்டமிட்டுக் கொண்டேன். மாதம் 500 ரூபாய் சேமிக்கும் பழக்கம் இருந்தது. ஆறு வருடங்கள் அந்த நிறுவனத்தில் வேலைபார்த்தும் மாதம் ரூ.6,000 தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். அதற்கு மேல் அந்த நிறுவனத்திலிருந்து சம்பள உயர்வு இருக்காது என்பதால் வேறு வேலை தேட வேண்டும் அல்லது சொந்தமாகத் தொழிலை தொடங்க வேண்டும் என இரண்டு வாய்ப்புகள்தான் இருந்தது. இருக்கிற சேமிப்பை வைத்து சொந்தமாகவே இறங்குவது என முடிவெடுத்தேன்.

இந்த தொழிலில் பெரிய போட்டிகள் கிடையாது. ஒரு ஆளாக இருந்து செய்து விடலாம், ஆனால் நீடித்து நிற்க முடியாது. தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான பணியாளர்கள் கிடைப் பது அரிது. மேலும் இந்த தொழிலுக்கு அரசு சலுகைகள் பெரிதாக கிடையாது என்பதால் மூலப்பொருட்கள் விலை அடிக்கடி உயரும். இதனால் விற்பனை விலையை ஒரே மாதிரியாக வைத்திருக்க முடியாது. இப்படி சில நெருக்கடிகள் இருந்தாலும், இந்த தொழிலுக்கு தனியாக விளம்பரங்கள் தேவையில்லை. பிளாஸ்டிக் பைகளுக்கு எதிரான விழிப்புணர்வுதான் முக்கிய பலம். எனவே இதற்கான சந்தை வாய்ப்புகள் எங்கு இருக்கிறது என தெரிந்து கொண்டால் போதும்.

எனவே முதற்கட்டமாக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு கொண்டவர்களை அணுகத் தொடங்கினேன். சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது நிகழ்ச்சிகள் அல்லது அன்பளிப்புகளுக்கு இந்த சணல் பைகளை வாங்குவார்கள். இந்த நிறுவனங்களை அணுகினேன். சிறிய வயதிலேயே, சொந்த தொழிலில் ஈடுபடுகிறேன் மற்றும் எனது அனுபவம் இவற்றைப் பார்த்து ஆர்டர்கள் கொடுத்தார்கள். சணல் வாரியத்தில் உற்பத்தியாளராக பதிவு செய்திருப்பதால் தேடி வந்தும் ஆர்டர் கொடுத்தனர். இதனால் முதல் வருடத்திலேயே தொழில் விரிவாக்கம் செய்யும் அளவுக்கு வளர்ச்சி கிடைத்தது.

தற்போது தொழில் தொடங்கி மூன்று ஆண்டுகளாகிறது. பத்து நபர்கள் வேலை செய்கின்றனர். இந்த தொழிலை செய்வதற்கான பணியாளர்கள் இங்கு குறைவு என்பதால் கொல்கத்தாவிலிருந்து மூன்று பேரை அழைத்து வந்துள்ளேன். வங்கிக்கடனுக்கு அணுகினால், பிணையமாக சொத்துக்களை காட்டச் சொல்கின்றனர். அதனால் ஆர்டர்களுக்கு கிடைக்கும் முன்பணத்தை வைத்தே இதுவரையில் தொழிலை நடத்திக் கொண்டிருக்கிறேன்.

சிறிய வயதுதானே நாம் சொல்வதை பிறர் கேட்பார்களா? பிசினஸ் பேச முடியுமா என்பதெல்லாம் எந்த தயக்கமும் கிடையாது. பணியாளர்களுக்கு தேவையானதை, சரியான நேரத்தில் செய்தால் எந்த தொழிலிலும் தொய்விருக்காது என்பது எனது அனுபவம். இதற்கு எனது அனுபவமும், ஆர்வமுமே கைகொடுத்தது என்றார். தொழில் முனைவோராக வளர படிப்பும், வயதும் தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் இந்த இளைஞர்.

maheswaran.p@thehindutamil.co.in

SCROLL FOR NEXT