ரிசர்வ் வங்கிக்கும் மத்திய நிதி அமைச்சகத்துக்கும் ஏழாம் பொருத்தம். மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கும் டெல்லி நார்த் பிளாக் அலுவலகத்துக்கும் எப்போதும் அக்கப்போர்தான். காரணம் ஆர்பிஐ கவர்னருக்கும், நிதி அமைச்சகம் வகுக்கும் கொள்கைகளுக்கும் எப்போதும் முரண்பாடுதான். கடைசியாக உர்ஜித்படேல் 2018-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ததும் உரசலின் உச்சகட்ட வெளிப்பாட்டின் ஒரு பகுதியே.
படேல் ராஜினாமா செய்த 24 மணி நேரத்தில் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்படுவதாக அறிவித்தார் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. பொதுவாக அரசு அதிகாரிகள்ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பை ஏற்கும்போது வங்கித்துறை வட்டாரத்தில் இது எவ்வளவு காலம் நீடிக்கும். அடுத்த புதிய நபர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்ற சிந்தனையே நிலவும். இந்த சிந்தனை போக்கை பொய்த்துப் போகச் செய்து தனது ஓராண்டை வெற்றிகரமாக பூர்த்தி செய்துவிட்டார் தமிழக ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த சக்திகாந்த தாஸ்.
ஓராண்டாக நிதி அமைச்சகத்துக்கும் ரிசர்வ் வங்கிக்குமான எவ்வித சர்ச்சைகளோ, உரசல் போக்கோ இல்லை. வங்கியாளர்கள் மட்டுமல்ல ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மத்தியிலும் மிகச் சிறந்த தலைவராக பரிணமித்து வருகிறார் தாஸ். ரிசர்வ் வங்கி கவர்னர் என்ற அந்தஸ்து பேதமின்றி ஊழியர்களுடன் கேன்டீனில் சாப்பிடுவது, செல்ஃபி எடுத்துக்கொள்ள அனுமதிப்பது ஆகியன தங்களாலும் கவர்னரை அணுக முடியும் என்ற நம்பிக்கையை ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தியது இவரது வித்தியாசமான அணுகுமுறை.
ஊழியர்களின் நெடுநாள் பிரச்சினையான ஓய்வூதிய விவகாரத்தை `உத்கர்ஷ்’ திட்டம் மூலம் தீர்த்து ஊழியர்களின் நம்பிக்கையைப் பெற்றவராகிவிட்டார். ரிசர்வ் வங்கியில் கண்காணிப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள தனித் தனி அதிகாரிகளை உருவாக்கி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு துறையை உருவாக்கினார்.
அடுத்து மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்குமான மோதலில் முக்கிய பிரச்சினையே ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியை அரசுக்கு அளிப்பதில்தான். இதற்கென உடனடியாக ஜலான் தலைமையில் குழுவை அமைத்து, அக்குழுவின் பரிந்துரைப்படி அரசுக்கு ரூ. 1.23 லட்சம் கோடியை விடுவித்ததன் மூலம் நிதி அமைச்சகத்துடன் நட்புக் கரம் கோர்த்தார் தாஸ்.
திவால் நடவடிக்கை தொடர்பாக ரிசர்வ் வங்கி பிறப்பித்த பிப்ரவரி 12 உத்தரவை உச்ச நீதிமன்றம் செல்லாது என அறிவித்த சூழலில், அதற்கு மாற்றாக ஜூன் 7-ல் புதிய கொள்கையை வகுத்து வங்கிகளையே நடவடிக்கை எடுக்க வைத்த பெருமை தாஸையே சாரும். ஓராண்டில் 5 முறை நடைபெற்ற நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு பண வீக்கத்தை கட்டுக்குள் வைத்துள்ளார்.
ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் வட்டிக் குறைப்பு நடவடிக்கைகளின் பலன் பொதுமக்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தியவர். வங்கிகள் அனைத்தும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு (என்பிஎப்சி) அதிகக் கடன் அளிக்க வலியுறுத்தியுள்ளார். அதேசமயம் என்பிஎப்சி-க்கள் முன்னுரிமை துறைகளுக்கு மட்டுமே கடன் வழங்குவதை கடன் வழங்கும் வங்கிகள் மூலம் உறுதி செய்துள்ளார். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன கடன்களை மறு சீரமைப்பு செய்வதற்கும் அனுமதி வழங்கியுள்ளார். திரும்பாக் கடனுக்கு வங்கிகள் தங்கள் லாபத்தில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நிதி நெருக்கடியில் திவாலான டிஹெச்எஃப்எல் நிறுவனத்தில் உடனடியாக திவால் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியதும் இவரது நடவடிக்கைகளில் முக்கியமானவை. பிஎம்சி வங்கியில் நிகழ்ந்த மோசடியின் பாதிப்பு பிற வங்கிகளுக்கும் பரவாமல் தடுத்தது மிக முக்கியமான நடவடிக்கையாகும். வங்கிகள் தங்களது கடன் வழங்கு அளவுமற்றும் வாராக் கடன் உள்ளிட்டவற்றை கட்டுக்குள் வைப்பதற்கான பிசிஏ நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கவைத்தது தாஸின் நிதானமான, உறுதியான நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாகும்.
தாஸ் பொறுப்பேற்றபோது அரசுடனான மோதல் போக்கு மட்டுமல்ல சிறு, குறுந்தொழில்கள் சரிவை சந்தித்து வந்த காலமாகும். பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட வேண்டும் அதேசமயம் பண வீக்கத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. அதை மிகத் திறம்பட கையாண்டுள்ளார்.
இரு துருவங்களாக இருந்த ஆர்பிஐ-நிதி அமைச்சகம் இப்போது ஒரே திசையில் ஒருங்கிணைந்து பயணிப்பதற்கு தாஸிடம் உள்ள நிர்வாகத்திறன் என்ற ``காந்த’’ சக்தியே காரணம் என்பதை சொல்லவும் வேண்டுமா?.