4 லட்சம். புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி இந்தப் புவியில் அவதரித்த குழந்தைகளின் எண்ணிக்கை. இந்திய மண்ணில் ஜனித்த குழந்தைகளின் எண்ணிக்கை 67,385. சந்தேகமில்லை முதலிடத்தில் இந்தியாதான் உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடத்தில் உள்ள சீனாவை நாம் மிஞ்சிவிடுவோம் என்பது நிரூபணமாகிவருகிறது. இரண்டாமிடத்தில் சீனா 46,299 புதிய சிசுக்களுடன் உள்ளது. குழந்தை பிறப்பை துல்லியமாக கணிக்க முடிந்த நம்மால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணிக்க முடியாதது ஏன்.
பிறப்பு சந்தோஷம். இறப்பு துக்கம். ஆனால் மனித வாழ்வில் இரண்டுமே மாறி மாறி வருபவை. இரண்டையும் யாராலும் கணிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருவதாக தெரிந்தாலும் கடந்த 10 ஆண்டுகளில் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.
ஒரு பெண்ணின் குழந்தைப்பேறு விகிதம் 2013 முதல் 2016 வரையான காலத்தில் 2.3 என்ற அளவில் இருந்தது. ஆனால் அது தற்போது 2.2 என்ற அளவில் குறைந்துள்ளது. இந்தியாவில் 12 மாநிலங்களில் குடும்பக்கட்டுப்பாடு இலக்கு எட்டப்பட்டுள்ளது. நகர்மயமாதல், கல்வி ஆகியன சிறு குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், குழந்தைப் பேறு குறையத் தொடங்கியுள்ளது. ஆரோக்கியமான, அறிவுள்ள குழந்தை ஒன்றை வளர்த்தால் போதும் என்ற மனப்போக்கு அதிகரித்துவருகிறது. இது வரவேற்கத்தக்க வளர்ச்சியே. ஆண்-பெண் பாலின விகிதம் குறைந்து வருகிறது.
இதுவும் மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணமாகி வருகிறது. 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் என்ற நிலைதான் தற்போது உள்ளது. இப்போது உள்ள மக்கள் தொகைக்கு தேவையான சுகாதாரம், கல்வி, தொழில் பயிற்சி உள்ளிட்டவற்றை அளிப்பதே அரசுக்கு உள்ள சவாலாகும். மக்கள் தொகை பெருக்கமானது கவலைப்படும் அளவுக்கு இல்லை என்ற சூழலில் மக்களின் வாழ்வியலுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டியது அரசியல்வாதிகள் வகுக்கும் கொள்கைகள்தான்.
இது ஒரு புறம் இருந்தாலும் இறப்பு குறித்த விவரங்களும் துல்லியமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எம்டிஎஸ் எனப்படும் (Million Death Study) கோட்பாட்டை பொருளாதார நோபல் அறிஞர் அன்குஸ் டீடோன் உள்ளிட்ட பலரும் வலியுறுத்துகின்றனர்.
நாடுகளில் மக்கள் எதனால் உயிரிழக்கிறார்கள் என்ற விவரம் தெரியும்போது சுகாதார சூழலை மேம்படுத்த இந்த தகவல் நிச்சயம் உதவும். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பொது சுகாதாரம் மேம்படாமல் இருப்பதற்கு எம்டிஎஸ் இல்லாததும் முக்கிய காரணமாகும். இந்தியாவில் தற்போது எம்டிஎஸ்-கான புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இது வரவேற்கத்தக்க விஷயமே.
ஏற்கெனவே இறப்பு குறித்த விவர பதிவேட்டில், மரணம் எதனால் நிகழ்ந்தது என்ற விவரம் கிடையாது. அதாவது எந்த வகையான நோய் தாக்கி சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்தார் என்ற விவரங்களை திரட்டியது கிடையாது. குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர், குறிப்பிட்ட வயதில் உயிரிழந்தார் என்பன போன்ற விவரங்
கள்தான் பதியப்பட்டிருந்தன.
இப்போது எம்டிஎஸ் பதிவேட்டில் இறப்புக்கான காரணம், அதாவது எந்த நோய், எத்தகைய பாதிப்பு, எந்த வயதில் மரணம் சம்பவித்தது போன்ற விவரங்கள் துல்லியமாக திரட்டப்படுகின்றன. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நோய் தாக்குதலுக்கு ஆளாகி பலர் இறந்திருப்பது தெரியவந்தால் அங்கு அந்த நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். இந்தியாவிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட உயிர்க்கொல்லி நோய்களான அம்மை, போலியோ போன்றவை மீண்டும் தோன்றாமல் தடுத்து ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வழியேற்படும்.
ஜனனமும், மரணமும் யாராலும் தீர்மானிக்க முடியாதது. ஆனால் அதுகுறித்த பதிவேட்டுக்கு உரிய தகவலை அளிப்பது ஆரோக்கியமான சமூகம் உருவாக வழியேற்படும். அதில் அனைவரது பங்களிப்பும் உள்ளதை உணர்வோம்.