* கியா மோட்டார்ஸ் இந்தியாவில் அதன் இரண்டாவது தயாரிப்பை அறிமுகம் செய்ய தயாராகிவிட்டது. கியா மோட்டார்ஸ் இந்தியச் சந்தையில் அதன் முதல் தயாரிப்பாக செல்டோஸ் எஸ்யூவி-யை 2019 ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இரண்டாவது தயாரிப்பாக கார்னிவல் எம்பிவி-ஐ வரும் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. பிப்ரவரி மாதம் டெல்லியில் வாகனக் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில், இந்தப் புதிய மாடலை அறிமுகம் செய்ய கியா திட்டமிட்டுள்ளது.
* ஆறு பேர் அமர்வதற்கான இருக்கை வசதி கொண்டதாக இது இருக்கும். கியாவின் அடையாளமான புலியின் மூக்குப் போன்ற கிரில் இதிலும் உண்டு. எலக்ட்ரிக் ஸ்லைடிங் ரியர் டோர்ஸ், பனாரோமிக் சன் ரூஃப், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டிருக்கும். 5115 மிமீ நீளம், 1985 மிமீ அகலம், 1755 மிமீ உயரம், வீல் ஃபேஸ் 3060 மிமீ என்ற வடிவ அளவில் இந்த எம்பிவி மாடல் இருக்கும்.
* இதன் 2199 சிசி டீசல் இன்ஜின் 202 பவரை 440 என்எம் டார்க்கில் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. பிஎஸ்6- தயாரிப்பில் வெளிவரும் இதன் விலை ரூ.27 லட்சம் முதல் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* இது தவிர கியா இந்த வருடத்தில் அதன் மற்றொரு புதிய எஸ்யூவி மாடலையும் அறிமுகம் செய்ய உள்ளது. செல்டோஸைத் தொடர்ந்து இரண்டாவது எஸ்யூவி மாடலாக க்யூஒய்1-ஐ நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் அம்சங்கள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும் ஹூண்டாய் வென்யூ மாடலின் அம்சங்களை ஒத்ததாக க்யூஒய்1 இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் விலை ரூ.7 லட்சம் முதல் ரூ.11.5 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* ஹூண்டாய் வென்யூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈகோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யூவி300, அறிமுகமாக இருக்கும் ரெனால்ட் ஹெச்பிசி ஆகியவற்றுக்கு போட்டியாக திகழும் என்று கூறப்படுகிறது.