காப்பீடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் காலமிது. இன்ஷூரன்ஸ் எடுப்பது குடும்பத்திற்கான பாதுகாப்பு, முதலீடு என பல வகைகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப காப்பீடும் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கிறது. ஆயுள் காப்பீடு தவிர மருத்துவம், பயணம் என பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ப காப்பீடு சேவை கிடைக்கிறது. காப்பீடு குறித்த மேலும் சில சுவராஸ்யமான விஷயங்கள்.
இந்தியாவில் காப்பீடு
இந்தியாவில் மொத்தம் 24 காப்பீடு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை ஐஆர்டிஏ என்கிற தன்னிச்சையான அரசு அமைப்பு கண்காணிக்கிறது. இந்தியாவின் முக்கிய காப்பீடு நிறுவனம் எல்ஐசி இந்த நிறுவனத்தில் 1.20 லட்சம் பேர் நேரடியாக பணிபுரிகின்றனர். சுமார் 12 லட்சம் பேர் முகவர்களாக உள்ளனர்.
டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்டு - பியர் கிரில், சர்வைவர் மேன் - லஸ் ஸ்டவுட் இவர்களுக்கு காப்பீடு எடுக்க அணுகியபோது நிறுவனங்கள் மறுத்து விட்டனவாம். காரணம் இவர்களது உயிருக்கு எப்போதும் ஆபத்து நேரலாம் என்பதால் தெரிந்தே காப்பீடு கொடுப்பதை தவிர்த்து விட்டன காப்பீடு நிறுவனங்கள்.
லண்டனைச் சேர்ந்த காப்பீடு நிறுவனமான லாய்ட்ஸ் ஆப் லண்டன் வித்தியாசமான காப்பீடுகளை வழங்குவதில் பிரபலமானது. வானத்தின் கீழ் உள்ள அனைத்துக்கும் காப்பீடு என்பதுதான் இதன் குறிக்கோள். தலைமுடி, மார்பகம், கால்கள் என எதுவும் விதிவிலக்கு கிடையாது. 1940 ஆம் ஆண்டிலேயே நடிகை பெட்டி கிராபில் (betty grable) கால்களுக்கு இந்த நிறுவனம் காப்பீடு கொடுத்துள்ளது. 350 ஆண்டுகளாக இந்த தொழிலில் உள்ளது. 5 கண்டங்களிலும் இயங்கி வரும் நிறுவனம்.
மினிஷா லம்பா
பாலிவுட் நடிகையான மினிஷா லம்பா தனது தொடை, கால் , முகம் என பல பாகங்களுக்கும் காப்பீடு எடுத்தாராம். இதுதான் என்னுடைய சொத்து என்றும் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது குறிப்பிட்டாராம்.
தற்போதைய நம்பர் 1 கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி 55 கோடி யூரோவுக்கு தனது இரண்டு கால்களையும் காப்பீடு செய்துள்ளார். இதற்காக இரண்டு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு சுமார் 5 கோடி ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார். மற்றொரு நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கால்களை 14.40 கோடி டாலருக்கு காப்பீடு செய்துள்ளார். டேவிட் பெக்காம் தனது கால்களை 7 கோடி டாலருக்கு காப்பீடு செய்திருந்தார்.
ஆங்கில இசையமைப்பாளரான கீத் ரிச்சர்ட்ச் தனது நடுவிரலை 1.6 மில்லியன் டாலருக்கு காப்பீடு எடுத்துள்ளார். கிடார் இசைக்க அந்த விரல்தான் முக்கியம் என்பதால் அதற்கு மட்டும் காப்பீடு.
டச்சு நாட்டைச் சேர்ந்த ஒயின் தயாரிப்பாளரான இல்ஜா கோர்ட் தனது மூக்கு மற்றும் நுகர்வு திறனை 3.9 மில்லியன் யூரோவுக்கு காப்பீடு செய்துள்ளார். 2003 ஆண்டில் மற்றொரு ஒயின் தயாரிப்பாளரான ஏஞ்சலா மவுண்ட் தனது நாக்கு மற்றும் சுவை உணரும் திறனை 10 மில்லியன் யூரோவுக்கு காப்பீடு செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மெர்வ் ஹியூஸ் 1985 1994 களில் விளையாடியவர். இவரது அடையாளமான பெரிய மீசையை 3,70,000 டாலருக்கு காப்பீடு செய்திருந்தார்.
தன்னுடைய இரண்டு கைகளின் கட்டை விரலையும் 13.3 மில்லியன் டாலருக்கு காப்பீடு செய்துள்ளார் பார்முலா ஒன் பந்தய வீரர் பெர்னாண்டோ அலோன்சா - போட்டியில் வெற்றி பெற்றதும் கட்டை விரலை உயர்த்திக் காட்டுவார். எனவே அதற்கு பாதிப்பு வரக்கூடாது என்று இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளாராம்.
புணேயில் உள்ள நூற்றாண்டுகளைக் கண்ட ஹல்வா கணபதி விநாயகர் கோவிலின் மூலவர் சிலை 1 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 1893 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பழமையான கோவிலில் விழாவில் கலந்து கொள்ளும் மக்களுக்கும் காப்பீடு எடுக்கின்றனர் விழாக் குழுவினர்.
ஹாலிவுட் நடிகையான பெராரா தனது பற்களை 1 கோடி டாலருக்கு காப்பீடு செய்துள்ளார். தனது புன்னகையை அடிப்படையாக வைத்து, பல் சம்பந்தமான பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களோடு ஒப்பந்தம் வைத்துள்ளதால் காப்பீடு எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
நடிகை ஹெய்தி க்ளும் தனது இரண்டு கால்களை 2.2 மில்லியன் டாலருக்கு காப்பீடு எடுத்துள்ளார். இதில் ஒரு காலுக்கு 1 மில்லியன் டாலரும், இன்னொரு காலுக்கு 1.2 மில்லியன் டாலரும் காப்பீடு செய்துள்ளார். ஒரு காலில் மச்சம் உள்ளதால் அதற்கு மட்டும் அதிக தொகைக்கு காப்பீடு எடுத்துள்ளார். மற்றொரு ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லவ் ஹவிட் தனது மார்பகங்களை 50 லட்சம் டாலருக்கு காப்பீடு செய்துள்ளார்.