மோரிஸ் கராஜ் நிறுவனம் இந்தியாவில் ஹெக்டர் மாடலுடன் களம் இறங்கியது. எம்ஜி ஹெக்டருக்கு கார் பிரியர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து தனது இரண்டாவது மாடலை வரும் 2020 ஜனவரியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
வெளியீட்டுக்கு முன்பே கார் பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது. முழுவதும் எலெக்ட்ரிக் மாடலான இது எம்ஜி ZS EV எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது வெளிநாடுகளில் விற்பனையாகும் எம்ஜி ZS மாடலின் எலெக்ட்ரிக் வெர்சனாகும். இந்த வெர்சன் இந்தியாவுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது.
4314 மி.மீ நீளமுள்ள இது ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உள்ளது. ஹுண்டாய் கோனாவுக்கு போட்டியாக இதை எம்ஜி அறிமுகப்படுத்த உள்ளது. இதை எலெக்ட்ரிக் மோட்டார் 143 ஹெச்பி திறனையும், 353 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியதாகும். மேலும் இது 8.5 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டக்கூடியதாகவும் உள்ளது. இதன் பேட்டரி ஒரு மீட்டர் ஆழம் வரை வாட்டர் ரெசிஸ்டன்ட்டாக உள்ளது.
50 கிலோவாட் டிசி சார்ஜிங் மூலம் 50 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஆகும் திறனுடன் உள்ளது. இந்த எலெக்ட்ரிக் எம்ஜி ஆரம்பக்கட்டமாக டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகிய ஐந்து நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.22 லட்சமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.