வணிக வீதி

லாபத்தை உறுதி செய்யும் மல்டிகேப் முதலீடு

செய்திப்பிரிவு

எல்.அசோக், நிறுவனர்,
ராம் இன்வெஸ்ட்மென்ட்ஸ்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களிடையே பெருமளவிலான வரவேற்பை மல்டி கேப் ஃபண்டுகள் பெற்றுவருகின்றன. இந்த மல்டி கேப் ஃபண்டுகள் பங்குச் சந்தையில் ரூ.1.41 லட்சம் கோடி அளவிலான முதலீட்டைக் கொண்டுள்ளன.

இந்த மல்டி கேப் ஃபண்டுகள் லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் கலவையாக முதலீடு செய்யப்பட்டுவருகின்றன. இப்படி கலவையாக முதலீடு செய்யும் வாய்ப்புகள் இதில் அதிகமிருப்பதால் ஃபண்டு மேனேஜர்களுக்கு இவற்றில் செய்யப்படும் முதலீடுகளைக் கையாள் வதில் முழு சுதந்திரம் கிடைக்கிறது. இதனால் ஃபண்ட் மேனேஜர்களால் இந்த ஃபண்டுகளில் உள்ள சந்தை அபாயங்களைச் சரிசெய்து நல்ல வருமானத்தை ஈட்ட முடிகிறது.

இந்த மல்டிகேப் ஃபண்டுகளின் சிறப்பே எல்லா சூழ்நிலைகளிலும் சந்தை அபாயங்களைக் கட்டுப்படுத்தி லாபத்தை உறுதி செய்வதாகும். இவை பல்வேறு விதமான பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுவதால் எல்லா வகையான முதலீட்டாளர்களுக்கும் ஏற்ற ஃபண்டாக இது விளங்குகிறது.

இதனால் மியூச்சுவல் ஃபண்டு, பங்குச் சந்தை போன்றவற்றில் புதிதாக நுழைபவரும், அனுபவம் உள்ளவரும் என அனைவரும் இதில் தயங்காமல் முதலீடு மேற்கொண்டு லாபம் பார்க்கலாம். இவற்றில் உடனடி மற்றும் நீண்டகால முதலீடுகளும் செய்யலாம்.

மல்டிகேப் ஃபண்டுகள் எந்தவிதமான பங்குகளிலும், எந்தவிதமான துறைகளிலும் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டின் கட்டமைப்பில் எந்தவித சார்புத்தன்மையும் இல்லை. ஒரே நிபந்தனை இந்த ஃபண்டின் முதலீட்டு தொகையில் குறைந்தபட்சம் 65 சதவீதத்தை பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.

இந்த முதலீட்டு திட்டம் எளிமையாக இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு முடிவுகளை எடுப்பதில் உதவியாக இருக்கிறது. மேலும், ஃபண்டு மேனேஜர்களாலும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

திறமையாக கையாண்டால் மல்டிகேப் ஃபண்டுகள் சந்தை சுழற்சிகளுக்கு ஏற்ப நிலையான வருமானத்தைத் தரக்கூடியதாக விளங்கும். மல்டிகேப் ஃபண்டுகள் பெரும்பாலும் டைவர்சிஃபைடு பங்குகளைக் கொண்டதாகவே இருக்கும்.

இதனால் இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் அதிருப்தி கொள்வதற்கான வாய்ப்புகளே இருக்காது. மேலும் இது முழுக்க முழுக்க இலகுவான திட்டம் என்பதால், முதலீட்டாளர்களுக்கு எந்தப் பங்கை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமோ, எந்தப் பங்கு சரியானது என்ற குழப்பமோ வராது.

சந்தை அபாயங்கள் மற்றும் ஏற்ற இறக்கங்களை எந்த அளவுக்கு சமநிலை செய்திருக்கிறது என்பதைப் பொருத்து ஒரு சிறந்த மல்டிகேப் ஃபண்டை அடையாளம் காணலாம். கடந்த 10 ஆண்டுகளில் மல்டிகேப் ஃபண்டுகள் சராசரியாக 11.6 சதவீத வருமானத்தைக் கொடுத்துள்ளன.

இவற்றில் முன்னணி ஃபண்டுகள் 16-17 சதவீத அளவில் வருமானம் கொடுத்திருக்கின்றன. மல்டிகேப் ஃபண்டுகளில் 85 லட்சம் கணக்குகளை முதலீட்டாளர்கள் வைத்துள்ளனர். இந்த வகை ஃபண்டுகளுக்கான நம்பகத்தன்மைக்கு இதுவே ஆதாரம்.

ஸ்மால்கேப், மிட்கேப் மற்றும் லார்ஜ்கேப் பங்குகளை ஒன்றாக ஒரே போர்ட்ஃபோலியோவில் கொண்டிருப்பதன் மூலம் மல்டிகேப் ஃபண்டுகள் சிறந்த முதலீட்டு திட்டமாக உள்ளது. அதேசமயம், நிலையான வருமானத்தைத் தருவதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு முதலீடு மேற்கொள்வதில் பரிபூரண அனுபவத்தைத் தருகிறது.

சந்தை நன்றாக ஏற்றம் காணும்போது, மல்டிகேப் ஃபண்டுகளில் உள்ள மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள் நன்றாக ஏற்றம் அடையும், இதன் மூலம் முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் பங்குகள் இறக்கம் கண்டாலும், மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளில் தங்களின் முதலீட்டை மேற் கொள்ள முடியும்.

பெரும்பாலும் சந்தை நகர்வுகளுக்கு மாறாக, இந்த ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானத்தைத் தரும் வகையில் கையாளப்படுகின்றன. எனவே, மிதமான ரிஸ்க் எடுக்க தயாராக உள்ள முதலீட்டாளர்களுக்கு மிகவும் பொருத்தமான முதலீட்டு திட்டமாக மல்டி கேப் ஃபண்டுகள் உள்ளன.

SCROLL FOR NEXT