வணிக வீதி

வாகன உலகத்தின் அடுத்த கோலாகலம்: லாஸ் ஏஞ்சல்ஸ் வாகனக் கண்காட்சி

செய்திப்பிரிவு

வாகன உலகம் அடுத்த கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டது. இருமாதங்களுக்கு முன் பிராங்க்ஃபர்ட் வாகனக் கண்காட்சி நடந்தது. தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் வாகனக் கண்காட்சி ஆரம்பமாக உள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் மிக முக்கியமானவை. தங்களது புதிய தயாரிப்புகளை இவ்வகையான கண்காட்சிகளிலேயே வாகன நிறுவனங்கள் காட்சிப்படுத்துகின்றன. அந்த வகையில் லாஸ் ஏஞ்சல்ஸ் கண்காட்சி கவனத்தை ஈர்க்கக் கூடியதாக மாறி உள்ளது. 2019-ம் ஆண்டுக்கான கண்காட்சி நவம்பர் 22 முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெற உள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் கண்காட்சி 1907-ல் முதல்முதலாக நடத்தப்பட்டது. முதல் கண்காட்சியில் 99 வாகனங்கள் பங்கேற்றன. தற்போது அது பத்து மடங்கு உயர்ந்து உள்ளது. இந்த ஆண்டு கண்காட்சியில் 1000 வாகனங்கள் பங்கேற்க உள்ளன. இந்தக் கண்காட்சி பல்வேறு சோதனை காலகட்டத்தை கடந்தே இத்தனை தூரம் பயணித்து வந்துள்ளது. 1929-ம் ஆண்டு கண்காட்சி நடந்து கொண்டிருக்கும்போது மிகப் பெரும் விபத்து ஏற்பட்டது.

காட்சிப்படுத்தப்படுவதற்காக நிறுத்தப்பட்டு இருந்த விமானம் ஒன்றில் மின்கசிவு ஏற்பட்டு அது பெரிய அளவில் சேதத்தை உண்டு பண்ணியது. கிட்டத்தட்ட இன்றைய மதிப்பில் ரூ.100 கோடிக்கு மேல் பொருட்சேதம் ஏற்பட்டது. அடுத்த வருடமே அந்த இழப்பில் இருந்து மீண்டது. அடுத்தடுத்த வருடங்களில் கண்காட்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 1940-ம் ஆண்டு வந்தது மற்றொரு சோதனை. இந்தக் கண்காட்சிக்கு மட்டுமில்லை, வாகன தயாரிப்பு துறை சார்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் பெரும் சோதனையான காலகட்டம் அது. ஏனென்றால் அப்போதுதான் இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானது. வாகனத் தயாரிப்பு ஆலைகள், ராணுவப் பயன்பாட்டுக்கான ஆலைகளாக மாற்றப்பட்டன. போரில் பல ஆலைகள் தாக்குதலுக்கு உள்ளாகின.

வாகனங்களுக்கே வழியில்லை; இதில் எங்கு கண்காட்சி நடத்துவது என்ற நிலையில், இந்தக் கால இடைவெளியில் லாஸ் ஏஞ்சல்ஸ் கண்காட்சி நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து, போர்ச் சூழல் ஓய்ந்து, உலகம் அமைதியை நோக்கி திரும்பிய நிலையில் 1952-ம் ஆண்டு மீண்டும் மேடையேறியது லாஸ் ஏஞ்சல்ஸ் வாகனக் கண்காட்சி. நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடத்தப்பட்ட அந்தக் கண்காட்சியில் 152 வாகனங்கள் பங்கேற்றன. ஒவ்வொரு வருடமும் 10 நாட்கள் இந்தக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. 2006-ம் ஆண்டு வரை பெரும்பாலும் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு நவம்பர்-டிசம்பர் மாதங்களுக்கு மாற்றப்பட்டது. அதனுடைய 100-வது கண்காட்சி நிகழ்வு 2007-ம் ஆண்டு அரங்கேறியது.

இந்த ஆண்டுக்கான கண்காட்சியில் கார், டிரக் என பலதரப்பிலான 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்க உள்ளன. ஆடி, பிஎம்டபிள்யூ, ஆல்ஃபா ரோமியோ, ஃபோக்ஸ்வேகன், மினி கூப்பர், கர்மா, டொயோட்டா ஹோண்டா, ஹூண்டாய் ஆகிய முன்னணி நிறுவனங்கள் தங்கள் புதிய மாடல்களை இந்தக் கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளன. வாகனப் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT