ரோல்ஸ் ராய்ஸின் எஸ்யூவி மாடலான கல்லினன் பிளாக் எடிசனாக வர உள்ளது. 2018-ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் அதன் முதல் எஸ்யூவி மாடலாக கல்லினனை அறிமுகப்படுத்தியது. கல்லினன் சொகுசு கார்கள் பிரிவில் அதிக கவனத்தை ஈர்த்த மாடல்களில் ஒன்று. தற்போது பிளாக் எடிசனாக வெளிவர உள்ள கல்லினன், முந்தைய மாடலில் உள்ள முக்கிய அம்சங்கள் அனைத்தையும் கொண்டு இருக்கும்.
இதன் 6.75 லிட்டர் டிவின் டர்போ சார்ஜ் வி12 இன்ஜின், 600 பிஎஸ் பவரையும் 900 என்எம் டார்க்கையும் கொண்டிருக்கும். இது 8 ஸ்பீடு கியர்பாக்ஸைக் கொண்டு வெளிவர உள்ளது. அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் கல்லினன், அதன் பிளாக் எடிசனில் கூடுதல் வசீகரமாக இருக்கிறது. அதன் புறத்தோற்றம் அதி நேர்த்தியாகவும், கவர்ச்சியாகவும், உட்புறம் மிக நவீனமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கல்லினன் மாடலின் விலை ரூ.6.95 கோடி.
பிளாக் எடிசனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் முந்தைய மாடலைவிட 20 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.