வணிக வீதி

என்னதான் நடக்கிறது டெலிகாம் துறையில்?

செய்திப்பிரிவு

மொபைல் இல்லையென்றால் எதுவுமே இல்லை என்ற நிலைமைக்கு இன்றைய நவீன உலகம் வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி முழுக்க முழுக்க டெலிகாம் துறைக்குத்தான் பணம் கொழிக்கும் வாய்ப்புகளை அள்ளித் தரப்போகிறது. அதுவும் இந்தியா போன்ற மிகப்பெரிய நுகர்வு சந்தையில் டெலிகாம் துறை நிறுவனங்களின் வளர்ச்சி இன்னும் சில வருடங்களில் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கலாம். முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின்கீழ் இயங்கிவந்த ஜியோ நெட்வொர்க்கை தனி நிறுவனமாக உருவாக்க முடிவெடுக்க காரணம், அதற்கு அப்படியொரு எதிர்கால வாய்ப்பு
இருப்பதினால்தான்.

ஆனால், இந்திய டெலிகாம் துறையில் சமீப காலமாக சண்டை சச்சரவுகள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. சந்தையைப் பிடிப்பதில் உள்ள போட்டி நாளடைவில் பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பிவருகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் வருகையால் இந்திய டெலிகாம் துறையே தலைகீழாக மாறியது. ஜியோவின் அசுர வளர்ச்சியால் ஏர்செல் உள்ளிட்ட நிறுவனங்கள் காணாமல் போயின. ஐடியாதனியே நிலைத்து நிற்க முடியாததால் வோடபோனுடன் இணைந்தது. டாடா டொகொமோவும் ஏர்டெல்லுடன் இணைந்தது. ஜியோ சந்தைக்குள் நுழைந்ததிலிருந்தே ஜியோ ஒரு பக்கமும் பிற நிறுவனங்கள் ஒரு பக்கமும் என்ற நிலையில்தான் பிரச்சினைகள் உருவெடுத்துக்
கொண்டிருக்கின்றன.

ஜியோவின் அழைப்புகளை இணைப்பதில் பிற நிறுவனங்கள் பாராமுகம் காட்டுகின்றன என்ற பிரச்சினை எழுந்து ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டிராய் எச்சரிக்கை விடுத்தது. அதையடுத்து அலைக்கற்றை ஒதுக்குவதிலும் பிரச்சினை தொடர்ந்தது. ஜியோ 5ஜி அலைக்கற்றை ஏலத்தை நடத்த கேட்கிறது. ஆனால், பிற நிறுவனங்கள் இப்போது தங்களிடம் பணமில்லை, அதனால் இப்போது அலைக்கற்றை ஏலத்தை நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தன.

இப்படி ஒவ்வொரு பிரச்சினையாகத் தொடர்ந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த டெலிகாம் துறையும் அரசிடம் சில சலுகைகளை எதிர்பார்த்து கோரிக்கை வைத்துள்ளன. ஆனால், அதே துறையை சேர்ந்த ஜியோ மட்டும் எந்த சலுகையையும் அரசு வழங்கத் தேவையில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு ரிலையன்ஸ் ஜியோ கடிதமும் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில் டெலிகாம் நிறுவனங்களிடம் செலவுகளுக்கான போதிய பணம் இருக்கிறது. எனவே அவற்றுக்கு அரசு தரப்பிலிருந்து எந்தச் சலுகையும் தர வேண்டியதில்லை என்று கூறியுள்ளது. மேலும் நிறுவனங்களின் லாப நஷ்டத்துக்கு அந்தந்த நிறுவனங்களே பொறுப்பாக முடியும். சரியான தொழில் நிர்வாகம், நிதி மேலாண்மை இருந்தால் எந்த நிறுவனமும் லாபத்துடன் செயல்பட முடியும். அதைத் தாண்டிய தோல்விகளுக்கு அந்தந்த நிறுவனங்களே பொறுப்பு. நஷ்டமடைந்த நிறுவனங்களுக்கு அரசு சலுகைகளைத் தர வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்றும் வாதிட்டிருக்கிறது.

உண்மையில் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பிறகுதான் டெலிகாம் துறை நிறுவனங்களின் கட்டணங்கள், திட்டங்கள் அனைத்திலுமே மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பெரும்பான்மை மக்கள் இணையத்தைப் பயன்படுத்த முன்வந்தார்கள். இன்று அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது என்றால் அதற்கு இணையப் பயன்பாட்டுக்கான செலவு குறைவாக இருப்பதினால்தான். எனவே சந்தையில் நிறுவனங்களுக்கிடையே ஏற்படும் போட்டி நுகர்வோருக்குப் பயன் தரக்கூடியதாக அமைவது என்பது இயல்பானதே. வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள ஒவ்வொரு நிறுவனமும் என்ன மாதிரியான உத்திகளைக் கையாள்கின்றன என்பதிலிருந்தே அவர்களுடைய தொழில் வளர்ச்சியும் இருக்கும்.

அதிக கட்டணம் வசூலித்து லாபம் பார்த்துக் கொண்டிருந்த நிறுவனங்கள், புயல் வந்து தாக்கியது போல ஜியோவின் வருகையால் தற்போது பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்தப் பாதிப்புகளுக்கு இழப்பீடு அரசிடமிருந்தோ மக்களிடமிருந்தோ நிறுவனங்கள் எதிர்பார்க்க முடியாது என்பதே ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாதம். ஜியோ புயலில் பாதிக்கப்பட்டவற்றில் அரசு நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்லும் அடங்கும்.

அவற்றை நஷ்டத்திலிருந்து மீட்கவே அரசு போராடிக்கொண்டிருக்கிறது. இதில் தனியார் நிறுவனங்களுக்கு எங்கிருந்து சலுகைகளை வழங்கும் என்ற கேள்வியும் எழாமலில்லை. அரசு தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்குவதாகத் தெரிவித்திருக்கிறது. பார்க்கலாம், டெலிகாம் துறையில் என்னதான் நடக்கிறதென்று? மக்களைப் பொறுத்தவரை டேட்டா செலவு எகிறாமல் இருந்தால் சரி.

SCROLL FOR NEXT