வணிக வீதி

அலசல்: பொருளாதார வளர்ச்சி மட்டும் வளர்ச்சி அல்ல!

செய்திப்பிரிவு

உலக அளவில் பசியால் வாடும் குழந்தைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. மொத்தம் 117 நாடுகள் பட்டியலில் உள்ளன. இந்தியா அவற்றில் 102-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 20 சதவீதம் குழந்தைகளுக்கு போதிய சத்தான உணவு கிடைப்பதில்லை. இதனால் அவர்களின் வயதுக்கு ஏற்ப வளர்ச்சி அமைவதில்லை. விளைவாக, இளம் வயதிலேயே இறப்பும், தீவிரமான நோய்களுக்கு உள்ளாவதும் தொடர்ச்சியாக நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

2008-2012 காலகட்டத்தில் போதிய உணவின்மையால் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை 16.5 சதவீதமாக இருந்தது. அது தற்போது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியக் குழந்தைகளின் ஆரோக்கியம் கேள்விக் குறியாக இருப்பதை இந்த புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

நாம் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், மியான்மர் ஆகியவை நம்மை விட பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளாக இருந்தாலும், அவை நம் அளவுக்கு தன் குடிமக்களை கைவிடவில்லை. இந்தப் பட்டியலில் இலங்கை (66), மியான்மர் (69), நேபாளம் (73), வங்கதேசம் (88), பாகிஸ்தான் (94) என்ற இடங்களில் உள்ளன.

சாலை ஓரங்களில் தன் அடுத்த உணவுக்காக கையேந்தி நிற்கும் அந்த குழுந்தைகளுக்கு நம்மிடம் என்ன திட்டமிருக்கிறது. அப்படிக் கொண்டுவரப்படும் திட்டங்களும் அடையாளம் நிமித்தமாகவே நடைமுறைப்படுகின்றன. இந்த சமூக யதார்தத்துக்கு முகம் கொடுக்காமல், இந்தியா தொடர்ந்து போலிப் பெருமிதங்களை முன் வைத்து வருகிறது.

சுகாதார ரீதியாவும் இந்தியா மிக பின்தங்கி இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் சுகாதாரத்தையும், வறுமையையும் புள்ளி விவரங்கள் மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும் என்ற அவசியம் இல்லை. நமது சாலைகளிலும், பொது இடங்களிலும் உள்ள காட்சிகளே இந்தியாவின் நிலையை சொல்லப் போதுமானது. சுகாதாரமின்மை என்பது இந்தியாவின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது.

இந்தியா கழிப்பிட வசதியை மிக துச்சமாகக் கருதுகிறது. இன்னும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலையிலேயே தன் மக்களை இந்திய அரசு வைத்து இருக்கிறது. அவ்வளவு ஏன், நம்முடைய பேருந்து நிலையங்கள், ரயில்களில் உள்ள கழிவறைகள் பயன்படுத்தும் தன்மையிலா இருக்கின்றன? சுகாதாரத்துக்கும் வறுமைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

அவற்றில் ஒன்று மோசமடைந்து இருக்கிறது என்றால் மற்றொன்றும் மோசமான நிலையில்தான் இருக்கிறது என்றே பொருள். ஒட்டுமொத்தமாக கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளில் இந்தியா பின்தங்கி இருக்கிறது.

இந்தியாவில் பெண்களின் நிலை குறித்து பல்வேறு ஆய்வுகள் அச்சம் தெரிவிக்கின்றன. இதனால், மிக மோசமான வாழ்க்கைத் தரத்தை கொண்டிருக்கும் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. ஆனால் நம் அரசு இவை எதையும் பேச விரும்புவதில்லை. இனி வரும் காலங்களிலாவது சமாளிப்புக் காரணங்களை சொல்லிக் கொண்டிராமல், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் அரசு இறங்கட்டும். பொருளாதார ரீதியாக வளர்வது மட்டும் வளர்ச்சியில்லை என்பதை அரசு உணரட்டும்.

SCROLL FOR NEXT