2012-ல் வெளியான நண்பன் திரைப் படத்தைப் பார்த்து ரசித்து இருப்பீர்கள். விஜய்க்கு பொறியியல் கல்லூரியில் ஜீவாவும், ஸ்ரீகாந்தும் நண்பர்கள். விஜய் அதிபுத்திசாலி, யதார்த்தவாதி. வெறும் மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்து முதலிடம் பெறுபவர். ஒரு நாள் மது அருந்திவிட்டு மூவரும் தத்துவம் பேசும் காட்சி.
தன்னால் அதிக மதிப்பெண் பெறமுடியாதது ஏன் என ஸ்ரீகாந்த் கேட்பார். அதற்கு விஜய் “நீ வேண்டாவெறுப்பாகத்தான் படிக்கிறாய். வனவிலங்கு புகைப்படக் கலைஞனாக வரவேண்டுமென்பதே உனது சிறுவயது கனவாக இருந்தது. ஆனால் பெற்றோர் வலியுறுத்தியதால் இங்கு வந்து மாட்டிக் கொண்டாய்” என்பார்.
இதைப்போன்ற நிலையில்தான் நம்மில் பலரும் சிக்கிக் கொள்கிறோம். நமக்கு இது பொருந்துமா என்பதைப் பார்ப்பதில்லை, அல்லது அதைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுவதில்லை! தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியவற்றையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயற்சி செய்கிறவர்களுக்கு முடியாதது ஒன்றும் இல்லை என்கிறது குறள்!
நண்பன் திரைப்படத்தின் கதை (இந்தியில் 3 இடியட்ஸ்) சேத்தன் பகத்தின் 5 Point Something நாவலை தழுவியது. அந்நாவலே சேத்தன் பகத்தின் நிஜ வாழ்க்கையைச் சார்ந்து எழுதப்பெற்றது என்பார்கள்! நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பகத்திற்கு தான் ஒரு எழுத்தாளனாக, படைப்பாளியாக வரவேண்டுமென்பது ஆசை. ஆனால் அவர் மாட்டிக்கொண்டதோ IIT, IIM நிறுவனங்களில் இருந்தும் அவர் இவைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு இன்று உலகம் போற்றும் எழுத்தாளனாக மிளிர்கிறார்!
எனவே குறள் சொல்வது போல, வெற்றிக்கு முதல்படி நாம் தொடங்கும் செயல் நமக்கு விருப்பமானதா பொருத்தமானதா எனத் தெரிந்து செய்வதுதான்! பின் என்ன? கீ போர்டில் விளையாடிய ரஹ்மானை கிரிக்கெட் விளையாடக் கட்டாயப்படுத்தியிருந்தாலோ, நூறுமுறை நூறு ரன் எடுத்த சச்சினை இசையமைக்கச் சொல்லியிருந்தாலோ உலகம் இரு பெரும் சாதனையாளர்களையும் இழந்திருக்குமே!
வெற்றிபெற குறள் சொல்லும் இரண்டாவது வழி அல்லது விதி, எடுத்துக்கொண்ட செயலில் தொடர்முயற்சி வேண்டுமென்பது. சிந்தனை, சொல், செயல் எனும் மூன்றிலும் அச்செயல் நீங்காதிருக்க வேண்டும்! உதாரணத்திற்கு உண்மையான வெண்மைப்புரட்சி செய்த நம்ம ஊர் ஆரோக்யா பால் புகழ் சந்திரமோகனை எடுத்துக்கொள்ளுங்கள். கடந்த 30 ஆண்டுகளில் அவரது ஹட்சன் அக்ரோ இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் பால்பண்ணையாக வளர்ந்துள்ளது.
பாலுடன் நின்றுவிடாமல், பசுவின் பஞ்சகவ்யம் போல தயிர், வெண்ணெய், நெய்யுடன் பன்னீர் மற்றும் ஐஸ்க்ரீம்கள் என விரிந்துள்ளது. இன்னுமொரு வெண்மைப் புரட்சியாளர் ராம்ராஜ் காட்டனின் நாகராஜன். இவர் SSLC படித்தவர் என்று விக்கிபீடியா சொல்லும். ஆனால் MBA கல்லூரிகளில் இவரே ஒரு பாடம். 2,500 வகையான வேஷ்டிகளின் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் இவர். Brand-ன் அவசியத்தை உணர்ந்தவர், உபயோகப்படுத்தியவர், வெற்றிக்கொடி நாட்டியவர்.
ஐயா, யாருக்கும் வெல்வது சாத்தியமே வள்ளுவர் சொல்வது போல மனதுக்குப் பிடித்ததை விடாமல் பிடித்துக் கொண்டுவிட்டால்!
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கி
செல்வார்க்குச் செல்லாதது இல்
somaiah.veerappan@gmail.com