வணிக வீதி

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு...மீண்டும் வருகிறது பஜாஜ் சேடக்

செய்திப்பிரிவு

சமீபத்திய காலங்களில் பஜாஜ் நிறுவனத்தின் அடையாளமாக பல்ஸர் இருந்து வருவது போல, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் சேடக் இருந்தது. 80, 90-களில் வெளியான படங்களில் இந்த ஸ்கூட்டரை அதிகம் பார்க்க முடியும். இருக்கைகள் அகலமாக, முகப்பு பக்கமும் விசாலமான தோற்றத்தில் இருக்கும். சேடக் இந்தியாவுக்கு வந்ததற்கு ஒரு வரலாறு உண்டு. உலக அளவில் ஸ்கூட்டர் மாடலில் புகழ்பெற்ற பிராண்ட் வெஸ்பா. இத்தாலி நிறுவனமான பியாஜியோ, வெஸ்பா ஸ்பிரிண்ட் என்ற மாடலை 1965-ம் ஆண்டு அறிமுகம் செய்கிறது. மிகப் பெரிய வரவேற்பு. அதற்கேற்றார் போல் விலையும் அதிகம்.

அந்த மாடலுக்கு கிடைத்த வரவேற்பினால் உந்தப்பட்ட பஜாஜ் நிறுவனம், இந்தியாவிலும் அதேபோல் ஒரு ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு, வெஸ்பா ஸ்பிரிண்ட் மாடலை இங்குநகல் செய்து வெளியிடுகிறது. அதுதான் சேடக். இந்தியச் சந்தையில் சேடக்குக்கு பெரும் வரவேற்பு.1972-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சேடக் 2006-ம் ஆண்டு வரையில் சந்தையில் புழக்கத்தில் இருந்தது. அதன்பிறகு பைக் மீதான மோகம் அதிகரித்த நிலையில், சேடக்குக்கான சந்தை இல்லாமல் போனது.

தற்போது காலம் மீண்டும் பின்னோக்கி சுழல்கிறது. தற்போது பைக்கை விட ஸ்கூட்டர்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அனைத்து விதத்திலும் எளிமையான பயன்பாட்டுக்கு வழிவகுப்பதால் ஸ்கூட்டர்களே பெரும்பாலோனர்களின் தேர்வாக மாறியுள்ளன. இந்தச் சூழ்நிலையில்தான் சேடக் மீண்டும் களம் இறங்குகிறது. ஆனால், இந்த முறை இன்னும் நவீனமாக, ஸ்டைலாக வந்திருக்கிறது சேடக்.

இதில் முன்பக்கத்தில் சிங்கிள் சைட் டிரெய்லிங் சஸ்பென்ஷனும், பின்பக்கத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் உள்ளன. முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க எல்இடி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் இண்டிகேட்டர்கள் உயர் ரக கார்களில் இருக்கும் ஸ்க்ராலிங் டைப்பில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சேடக் சாவியில்லாமல் ஸ்டார்ட் ஆகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது உலக நாடுகள் அனைத்தும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இந்திய அரசு பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த சூழ்நிலைக்கு தகவமைத்துக் கொள்ளும் வகையில் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக தயாராகி வருகிறது. இதன் உற்பத்தி கடந்த மாதம்தான் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக புணே, பெங்களூரு ஆகிய இரு நகரங்களில் ஜனவரி முதல் விற்பனைக்கு வர உள்ளது. அதன் தோற்ற வடிமைப்பு கிளாசிக் தன்மையை அளிக்கக் கூடியதாக உள்ளது. முகப்பு விளக்கு யமஹா ஃபேசினோவை போல உள்ளது. இதில் எகோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு விதமான பயணத் தேர்வுகள் உள்ளன.

முழுவதும் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியைக் கொண்டு, எகோ மோடில் 95 கிலோ மீட்டர் வரையிலும், ஸ்போர்ட் மோடில் 85 கிலோ மீட்டர் வரையிலும் பயணிக்க முடியும். இதன் 4 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம்ஆகும். வாகனத்தின் பாதுகாப்பு அம்சங்களிலும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் கிளாசிக் ஐவரி, பொன்னிறம் உட்பட ஆறு வண்ணங்களில் வெளிவர உள்ளது. தற்போதைய நிலையில் இதன் விலை ரூ.1.5லட்சத்துக்கு உள்ளே இருக்கும் தெரி விக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அரசின் ‘ஃபேம் 2’ திட்டத்தின்கீழ் மானியமும் கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்.

SCROLL FOR NEXT