2015-ல் ரெனால்ட் நிறுவனம் க்விட் என்ற ஹேட்ச்பேக் மாடலை அறிமுகப்படுத்தியது. இதன் எஸ்யுவி மாதிரியான டிசைன், சரியான விலை போன்ற காரணங்களால் ரெனால்ட்டில் அதிகம் விற்பனையான காராக க்விட் விளங்குகிறது. ஏற்கெனவே பல முறை இதில் மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் சில மாற்றங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தோற்றத்தைப் பொருத்தவரை இதன் கிரில், பம்பர் மற்றும் ஸ்பிளிட் ஹெட்லைட் போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பம்பரில் செய்த மாற்றத்தினால் இதன் நீளம் 52மிமீ அதிகரித்துள்ளது. அகலமும், வீல்பேஸும் மாற்றமில்லை. ரூஃப் லைனில் மாற்றங்கள் செய்திருப்பதால் உயரம் சற்று குறைக்கப்பட்டிருக்கிறது. இதில் 14 அங்குல வீல் வழங்கப்பட்டுள்ளது.
184மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. இதில் 0.8 லிட்டர், 1.0 லிட்டர் என இரு இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இதன் 3 சிலிண்டர் 799 சிசி இன்ஜின் 54 ஹெச்பி பவரையும் 72 என் எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதன் விலை ரூ. 2.83 லட்சம் முதல் ரூ. 4.84 லட்சம் வரை என்ற வரம்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.