காப்பீடு என்றாலே பலருக்கு கசாயம் போல கசக்கிறது. ஏனெனில், காப்பீடு பாலிசிகளை விற்கும் ஏஜெண்டுகளின் நச்சரிப்பு மட்டுமல்லாமல், காப்பீட்டின் பலனைப் பெறுவதில் உள்ள குளறுபடிகளும், அலைச்சல்களும் காப்பீடு குறித்த பாசிட்டிவான பார்வையை மக்களிடையே விதைக்கவில்லை என்பதுதான் காரணம்.
கூடவே சரியான காப்பீட்டைத் தேர்ந்தெடுக்காமல் நாம் செய்யும் தவறையும் ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். காப்பீட்டு ஆவணங்களை முழுமையாகப் படித்த பிறகு தேர்ந்தெடுங்கள் என்று எத்தனையோ முறை எத்தனையோ வழிகளில் கூறினாலும், கடைசி நேரத்தில் அவசர அவசரமாக காப்பீடு வாங்குவதுதான் பெரும்பாலானோரின் நிலை. இதனாலேயே எடுத்த காப்பீடு அவசியமான நேரத்தில் பலன் தராமல் போய்விடும்.
இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தொடர்ந்து தீர்வுகளைக் காண முயற்சித்து வருகிறது காப்பீட்டு துறை ஒழுங்குமுறை அமைப்பான ஐஆர்டிஏஐ. காப்பீட்டு நிறுவனங்கள் விற்கும் அனைத்து பாலிசிகளும், உள்ளது உள்ளபடி தெளிவாக இருக்க வேண்டும் எனக் கடந்த வாரம் ஐஆர்டிஏஐ காப்பீடு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதாவது காப்பீடு பாலிசிகளின் பலாபலன் என்ன என்பதை வெளிப்படையாக விளக்கப்படம் மூலம் பாலிசிதாரருக்கு வழங்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியிருக்கிறது.
சும்மா வளவளவென்று ஆங்கிலத்தில் இருக்கும் நிபந்தனைகள், விதிமுறைகள் கொடுப்பதெல்லாம் போதாது, குறிப்பிட்ட பாலிசியில் என்னென்ன பலன் கிடைக்கும், என்னென்ன பலன் கிடைக்காது என்பதை படம் வரைந்து பாகம் குறித்து விளக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இது டிசம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது. மிகவும் வரவேற்கத்தக்க இந்த உத்தரவை காப்பீடு நிறுவனங்கள் எந்த சமரசமும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும். காப்பீடுகளின் மீதான மக்களின் நம்பிக்கையை அதுமட்டுமே மேம்படுத்தும். இனி ஏஜெண்டுகள் ஏதோ ஒரு காப்பீட்டை தலையில் கட்டுவது குறையும். மக்களும் தாங்கள் விரும்பிய காப்பீடைப் பெற்றுக்கொள்ள முடியும்.