சமீபத்தில் மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகைகள் வாகனத்தின் விலையை விட அதிகமாக இருக்கின்றன என்ற விமர்சனங்கள் பரவலாக மக்களிடையே எழுந்தன. ஆனால், எந்த விமர்சனங்களும் அரசின் முடிவை அசைக்கவில்லை. சொன்னபடி திட்டமிட்ட நாளிலிருந்து அபராத வசூல் வேட்டை இனிதே தொடங்கியது.
விதிகளை மீறுவதால் நிகழும் விபத்துகள் மரணங்களின்போது இது போன்ற கடுமையான சட்டங்கள், அபராதங்கள் அவசியம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், மக்கள் பாதுகாப்புடன் பயணிக்க அறிவுறுத்துவதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுகிறது எனில், சாலையில் பயணிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சாலைகள் இருக்கின்றனவா என்பது குறித்தும் அரசு கவலைப்பட்டிருக்க வேண்டும்.
சாலைப் பாதுகாப்பு தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பார்த்தால், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் இந்தியாதான் முன்னிலையில் இருக்கிறது. இதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால்தான் விபத்துகளைக் குறைக்க அபராதத் தொகையை அதிகப்படுத்தியிருக்கிறோம் என்றார். சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய அபராதத்தை மட்டும் உயர்த்தினால் போதுமா?
கடந்த சில ஆண்டுகளில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. ஆனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையவில்லை. மேலும், இந்திய சாலைகளில் நடக்கும் விபத்துகளில் அதிவேகமாக ஓட்டுவதால் நடக்கும் விபத்துகள்தான் அதிகமாக உள்ளன. அதேசமயம் சாலை விபத்துகள், உயிரிழப்புகளில் சாலைகளின் தரம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தரமான சாலைகள், சரியான சாலை விதிகளின் குறியீடுகள், சரியான வழிகாட்டல்கள் ஆகியவைதான் சாலைப் பாதுகாப்பில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
இவற்றை உறுதி செய்வதில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் தான் உயிர்பலி வாங்கும் மோசமான சாலைகள் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு அடுத்த இடங்களில் ஹரியானா, பிஹார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. தரமான சாலைகள் இல்லாததால் உயிரிழப்புகள் மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலும் பல இழப்புகள் ஏற்படுகின்றன.
தரமான சாலைகள் அமையும்பட்சத்தில் பல வகைகளிலும் பலன்கள் கிடைப்பதாக உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. தரமான சாலைகள் ஜிடிபியில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதோடு மட்டுமல்லாமல், பெண்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பு அடையவும் உதவியாக அமையும் என்றும் உலக வங்கி தெரிவிக்கிறது. தரமான சாலைகள் அமைக்கப்படாமல், தலைக்கவசம் அணிந்துகொள்வதாலோ, காப்பீடு எடுத்துக்கொள்வதாலோ மட்டும் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தவிர்த்துவிட முடியாது. எனவே அரசு அபராதத்துக்கு அப்பால் சாலைகளையும் கொஞ்சம் கவனித்தல் அவசியம்.