‘எங்க ஏரியா உள்ள வராதே’ என்பது வெறும் பாட்டுக்காக மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுதான் உண்மை நிலவரம். சில தெருக்களில் பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி சாமானியர்களுக்கு அனுமதி கிடைக்காது.
ஆனால் சில தெருக்களில் வாழ்வது பற்றி சாமனியர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. பாரம்பரியம், நவீனம், வாழ்க்கை வசதிகள் அனைத்தும் கொண்ட முதல் தரமான தெருக்கள் இவை. இங்கு உலகின் பிரபலங்கள் வசிப்பதும் ஒரு காரணம். உலக அளவில் பணக்கார தெருக்களை பார்க்கலாம்.
இந்தியாவின் டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதி அலுவலகம் அமைப்பதற்கான அதிக செலவு கொண்ட பகுதியாக சமீபத்தில் ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. உலக அளவில் 4வது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒரு சதுர அடிக்கான வாடகை 162 டாலர்கள் என்கிறது அந்த ஆய்வு. சராசரியாக ஒரு சதுர அடிக்கான ஆண்டு வாடகை 10 ஆயிரம் ரூபாய்.
அவென்யு பிரின்சஸி கிரேஸ், மொனாக்கோ
உலகின் முக்கியமான கோடீஸ்வரர்கள் வசிக்கும் பகுதி இது. பார்முலா ஒன் கார் பந்தயம் இங்கு நடக்கும். கடலுக்கு எதிரேதான் ஒவ்வொரு தெருவும் உள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் நாயகன் ரோஜர் மூர், ஆண்ட்ரே போசெல்லி, லெவிஸ் ஹேமில்டன், ஹெலினா கிரிஸ்டென்சன் போன்ற உலகின் பிரபலங்கள் இங்கு வசிக்கின்றனர்.
சராசரியாக பத்து சதுர அடியின் விலை 86,000 டாலர்கள்.
ரொமாஸினோ ஹில், சர்டினியா
உலக கோடீஸ்வரர்கள் வசிக்கும் பகுதி. இத்தாலியைச் சேர்ந்த தொழிலதிபர் கார்லோ டி பெனிடிட்டி தனது ஒரு வில்லாவை 14.8 கோடி டாலருக்கு விற்பனை செய்தார். சவுதி அரேபியாவின் அரசியல்வாதி அகமத் ஸாக்கி யமானிக்கு இங்கு வீடு உள்ளது. கத்தார் அரச குடும்பம் இங்கு வசிக்கிறது.
இங்கு இடம் வாங்குவது என்றால் ஒரு சதுர அடிக்கு இந்திய மதிப்பில் ரூ.2 லட்சம் ஆகும்.
கென்ஸிங்டன் பிளேஸ் கார்டன்ஸ், லண்டன்
லண்டனில் மத்திய பகுதியில் உள்ளது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் முக்கிய இடம் பெற்றது.
பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் இங்கு உள்ளன. தவிர இந்த ஏரியாவுக்கு கோடீஸ்வரர்கள் வீதி என்கிற பெயரும் உள்ளது. இங்கு பத்து சதுர அடியின் விலை 1,20,000 டாலர்கள்.
அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வசிக்கின்றனர்.
பிப்த் அவென்யூ, நியூயார்க்
ஷாப்பிங் செய்பவர்களின் சொர்க்கம். நியூயார்க் சென்ட்ரல் பார்க் எதிரில் அமைந்துள்ளது இந்த தெரு. எம்பயர் ஸ்டேட் பில்டிங், ராக் ஃபெல்லர் சென்டர் போன்றவை இந்த ஏரியாவில் உள்ளன. உலகப்புகழ் பெற்ற ஹோட்டல் தி நியூ ப்ளாசா இங்குதான் உள்ளது.
இந்த ஏரியாவில் ஒரு சதுர மீட்டர் 28,000 டாலர்கள்.
இந்திய மதிப்பில் பத்து சதுர அடி விலை தோராயமாக ரூ.17 லட்சம்தான்.
கேப் பிராட், பிரான்ஸ்
பிரான்ஸின் மற்றுமொரு விலை உயர்ந்த ஏரியா. கடற்கரை நகரம். பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலி, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் இங்கு வசிக்கின்றனர். சார்லி சாப்ளின் இங்கு வசித்தார்.
பத்து சதுர அடி இடத்தின் விலை சராசரியாக 79,000 டாலர்கள்.
பொல்லாக் பாத், ஹாங்காங்
கடற்கரையில், மலைமீது அமைந்துள்ள பாரம்பரிய முக்கியத்துவம் கொண்ட வீதி.
தற்போதைய சராசரி விலை 1,20,000 டாலர்களுக்கும் அதிகம்.
ஹெச்எஸ்பிசி வங்கியின் தலைமையகம் இங்கு உள்ளது. நடிகர் ஸ்டீபன் சோ இங்கு வசிக்கிறார்.