மருத்துவர்கள் மீதும் மருத்துவமனை சிகிச்சைகள் மீதும் மக்களுக்கு இருக்கிற நம்பிக்கை முற்றிலும் குறைந்து
வருகிற தற்போதைய சூழலில், அவற்றுக்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக செய்தியொன்று கடந்த வாரம் வெளியானது. இந்தியாவின் முன்னணி மருந்து விற்பனை நிறுவனங்கள் சில, விற்பனையை அதிகரிப்பதற்காக மருத்துவர்களுக்கு லஞ்சம் வழங்குகின்றன என்ற அந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மருந்து நிறுவனங்கள், அதன் புதிய தயாரிப்புகளை மருத்துவர்களை சந்தித்து அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த மருந்து முக்கியமான ஒன்றாக இருக்கும்பட்சத்தில், மருத்துவர் தன் நோயாளிகளுக்கு அதை பரிந்துரை செய்வார். இது வழக்கமான ஒன்று. ஆனால், தற்போது சூழல் அத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை.மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் லாபம் ஈட்டும் நோக்கில் புதிய மருந்துப் பொருட்களை தயாரிக்கின்றன. இவற்றை சந்தைப்படுத்தி விற்பனையை அதிகரிப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்கின்றன. மருத்துவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி அவர்கள் மூலம் மருந்து விற்பனையை அதிகரிக்கச் செய்வது அவற்றில் ஒன்று.
எவ்வளவு அதிகம் மருந்துகள் விற்பனை ஆகிறதோ அதற்கேற்ப கமிஷன் வழங்கப்படும் என்று மருத்துவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு உடன்படும் மருத்துவர்கள், தங்கள் நோயாளிகளுக்கு தேவைக்கும் அதிகமான அளவில் மருந்துகளைப் பரிந்துரை செய்கின்றனர். அவற்றில் ஆன்டிபயாடிக் மருந்துகளே பெரும்பான்மையாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிறுவனங்கள் பெரும்பாலும் போலி மருத்துவர்களையே குறி வைக்கின்றன. அவர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்வதற்காக நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு உடன்படுகின்றனர். விளைவாக, தேவைக்கும் அதிகமாக ஆன்டிபயாடிக் மருந்துகள் நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றன. உலக அளவில் அதிகமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை நுகரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறி இருக்கிறது.
நாட்டிலேயே மருந்துகள் அதிகம் தயாரிக்கப்படும் நகரங்களில் ஒன்று ஹைதராபாத். அங்குள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதன் உற்பத்திக் கழிவுகளை முறையாக கையாளுவதில்லை என்ற குற்றச்சாட்டு சில ஆண்டுகளுக்கு முன் எழுந்தது. அதாவது அந்நிறுவனங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களை சோதித்தபோது, அவற்றில் மருந்துப் பொருட்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் என்ன பிரச்சினையென்றால், பாக்டீரியாக்களை தடுப்பதற்காகத்தான் ஆன்டிபயாடிக் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றை அதிக அளவில் பயன்படுத்தும் போது, மருந்தின் வீரியத்தை எதிர்கொள்ளும் வகையில், பாக்டீரியாவும் தன்னை தகவமைத்துக் கொள்ளத் தொடங்கும்.
இதனால் மீண்டும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் வீரியத்தை அதிகரிக்க வேண்டியதாகிறது. அதிக வீரியமிக்க ஆன்டிபயாடிக் மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளும்போது மனிதனின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையத் தொடங்குகிறது. விற்பனையை அதிகரிப்பதற்கு ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், மொபைல் போன்கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் அல்ல மருந்துப் பொருட்கள். மருந்து தயாரிப்புகள் மற்றும் அதன் விற்பனை செயல்பாடுகள், பரிந்துரை முறைகள் ஆகிய அனைத்திலும் அரசு தீவிர கண்காணிப்பையும் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால், இதுவரை அரசு இதன் ஆபத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை.