வணிக வீதி

மாருதியின் புதிய ஹேட்ச்பேக் ‘எஸ்-ப்ரஸ்ஸோ’ 

செய்திப்பிரிவு

பெரும்பாலான வாகன நிறுவனங்கள் சமீப காலங்களில் எஸ்யுவி மாடல்களையே அதிகம் அறிமுகப்படுத்திவருகின்றன. இந்நிலையில் மாருதி சுசூகி தனது புதிய ஹேட்ச்பேக் தயாரிப்பான எஸ்-ப்ரஸ்ஸோ மாடலை செப்படம்பர் மாதம் 30-ம் தேதி அன்று அறிமுகம் செய்ய உள்ளது. எஸ்-ப்ரஸ்ஸோவின் புறத்தோற்றம், பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கிலப் படங்களில் சேஸிங் காட்சிகளில் வரும் காரைப் போன்று தோற்றம் தரும் என்று தெரிகிறது. இதை ஒரு மைக்ரோ எஸ்யூவி என்றே கூறுகிறார்கள் வாகனப் பிரியர்கள். அந்த அளவுக்கு இதன் வடிவமைப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. ரெனால்ட் க்விட்டுக்கு போட்டியாக இது விளங்கும் என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விற்பனையாகும் அனைத்து வாகனங்களும் பிஎஸ்6 விதிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், மாருதி சுசூகி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான எஸ்-ப்ரஸ்ஸோவை பிஎஸ்6 தொழில் நுட்பத்தின்படி உருவாக்கியுள்ளது. இது மேனுவல் கியரைக் கொண்டிருக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 1195 சிசி திறனை கொண்டதாக உள்ளது. இந்த வாகனம் லிட்டருக்கு 24 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது. இதன் விலை ரூ.4 லட்சம் முதல் ஆரம்பமாகும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT