வணிக வீதி

பெட்ரோலில் வருகிறது விட்டாரா பிரெஸ்ஸா

செய்திப்பிரிவு

மாருதி சுசூகியின் சமீபத்திய வரவுகளில் அனைவரையும் கவர்ந்த மாடல் விட்டாரா பிரெஸ்ஸா. 2016-ல் இந்தியச் சந்தையில் அறிமுகமாகி விற்பனை நன்றாகவே இருந்துவருகிறது. ஆனால், இதில் டீசல் வேரியன்ட் மட்டுமே கிடைத்தது ஒரு குறையாகவே இருந்தது. மேலும் விட்டாரா பிரெஸ்ஸாவின் போட்டி கார்களான ஹுண்டாய் வென்யு, மஹிந்திரா எக்ஸ்யுவி 300 ஆகியவற்றில் பெட்ரோல் ஆப்ஷனும் வழங்கப்பட்டுவந்தது. பிரெஸ்ஸாவில் பெட்ரோல் வேரியன்ட் எப்போது வரும் என பல வாடிக்கையாளர்கள் காத்திருந்த நிலையில் அதுகுறித்த தகவலை மாருதி சுசூகி சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

பெட்ரோல் வேரியன்ட்டில் விட்டாரா பிரெஸ்ஸா தயாராகிக்கொண்டிருக்கிறது. பிப்ரவரி 2020-ல் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள டீசல் வேரியன்ட் சிங்கிள் சிலிண்டர் இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

பெட்ரோல் வேரியன்ட்டில் பிஎஸ் 6 தரத்துடனான கே15பி 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது. இது கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட சியாஸ் மாடலில் உள்ள இன்ஜினாகும். தற்போது எர்டிகாவிலும், விரைவில் அறிமுகமாக உள்ள எக்ஸ் எல் 6 மாடலிலும் இந்த இன்ஜின்தான் உள்ளது. இந்த இன்ஜின் 105 ஹெச்பி பவரையும் 138 என் எம் டார்க் இழுவிசையையும் தரக்கூடியது.

ஆரம்பத்தில் 5 மேனுவல் ஸ்பீடு கியர்கள் மட்டுமே வர உள்ளதாகவும், பின்னர் இதே திறனை வெளிப்படுத்தும் வகையில் 4 ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட வெர்சனும் வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் வேரியன்ட் பிரெஸ்ஸா மாருதியின் ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டத்துடனும் வருவது கூடுதல் தகவல். 2020-ல் அறிமுகமாகும்போது நான்கு வருட மாடலாக விட்டாரா பிரெஸ்ஸா இருக்கும் என்பதால் புதிதாக அறிமுகப்படுத்தும் வேரியன்ட்டில் வடிவமைப்பில் மாற்றங்கள் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT