வணிக வீதி

வாழ்க்கை துணைவிக்கு நிதி நிர்வாகத்தை கற்றுக் கொடுங்கள்!

செய்திப்பிரிவு

எம். ரமேஷ் 
ramesh.m@hindutamil.co.in

அந்தத் துயர சம்பவம் காயத்ரி வாழ்க்கையில் நிகழ்ந்திருக்க வேண்டாம். வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த கணவர் திடீரென மாரடைப்பில் காலமான சம்பவம் அவரது வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது. ஓய்வுபெற இன்னும் ஓராண்டுதான், அதற்குள்ளாகவா இப்படி?!

ஓய்வு பெற்ற பிறகு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்ட மகனை சென்று பார்க்கலாம் என்றிருந்த தம்பதிகளின் வாழ்க்கையில் இப்படி ஒரு சூறாவளி. இப்போது தனி மரமாக செய்வதறியாது தவிக்கிறார். தங்களுடன் வந்து தங்கி
விடுமாறு மகனும், மருமகளும் வற்புறுத்தினாலும் வெளிநாடு செல்ல காயத்ரிக்கு விருப்பமில்லை. இந்தியாவிலேயே தங்கிவிட விரும்பும் அவருக்கு அடுத்த நாளுக்கு என்ன தேவை என்பதே புரியவில்லை.

ஆம், இன்றைய நிலையில் பெரும்பாலான குடும்பங்களில் இதுதான் சூழல். காயத்ரி படித்தவர், ஆனால் வெளி உலக போக்குவரத்து கொஞ்சமும் இல்லாதவர். அனைத்து விஷயங்களையும் முழுக்க முழுக்க கவனித்தவர் அவர் கணவர்தான். வீட்டு நிர்வாகம் முழுக்க முழுக்க, வீட்டுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் பார்த்துப் பார்த்து செய்வார். மின் கட்டணம், வீட்டுக்கான சொத்து வரி இவை மட்டுமின்றி வீட்டுக்குத் தேவையான காய்கறி, மளிகை சாமான் வரை அனைத்துமே அவர் கணவர்தான். வீட்டுப் பணியாளர்களுக்கான சம்பள பட்டுவாடா முதல் பால்கார்டு வரை அனைத்துமே அவர்தான்.

கடைக்குச் சென்றால் கவுன்டரில் பணத்தை செலுத்துவது கடன் அட்டை அல்லது டெபிட் கார்டில் பணத்தை அளிப்பதும் காயத்ரியின் கணவர்தான். தன்னை நம்பி வந்த வாழ்க்கைத் துணையை கண்கலங்காமல் பாதுகாக்கிறேன் என்று பெரும்பாலான கணவர்கள் செய்யும் செயல் இது. ஆனால் அதுவே இன்று மிகப் பெரும் பாதிப்பாக அமைந்துவிட்டது. மார்க்கெட்டுக்கு செல்வது பணத்தைக் கையாள்வது என எல்லாமே அவருக்குப் புதிதாக
அமைந்துவிட்டது. கணவர் இறந்து போனதற்காக அழுவதா அல்லது இப்படி ஒன்றும் தெரியாமல் இருந்துவிட்டோமே, 30 ஆண்டுகளாக அவரையே சார்ந்து இருந்துவிட்டோமே எனப் புலம்புவதா என்று கலங்கிப் போய் நிற்கிறார்.
இது ஒரு சம்பவம். எங்கோ, எப்போதோ யாருக்கே நிகழ்ந்தது. ஆனால், இது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

எதிர்காலம் குறித்து நிதி திட்டமிடும் கணவன்மார்கள் முதலில் உங்கள் மனைவிக்கு பணத்தை சுதந்திரமாக கையாள கற்றுக் கொடுங்கள். நீங்கள் எந்தெந்த சேமிப்பில் முதலீடு செய்திருக்கிறீர்கள், அதில் உங்கள் மனைவியை நாமினியாக சேர்த்திருக்கிறீர்கள் என்ற விவரத்தை தெரிவியுங்கள். நீங்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும்
போது குடும்ப நிர்வாகத்தை மனைவியிடம் அளியுங்கள். எந்தெந்த பொருளை எங்கு வாங்கலாம் என்பதை கற்றுக் கொடுங்கள். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக் கூடாது என்பதைப் போல நீங்கள் 
மேற்கொள்ளும் எந்த நிதி சார்ந்த நடவடிக்கையும் மனைவிக்குத் தெரியாமல் மேற்கொள்ள வேண்டாம்.

வங்கிக் கணக்கைத் தொடங்கி, அவரை வங்கிக்கு சென்று பரிவர்த்தனை மேற்கொள்ள சொல்லுங்கள். கடன் அட்டை வாங்கித் தர வேண்டாம். ஆனால் அவரது சேமிப்புக் கணக்குக்காக அளிக்கப்படும் டெபிட் கார்டை செயல்படுத்த அறிவுறுத்துங்கள். அவருக்கான தேவைகளை அவரே சுதந்திரமாக மேற்கொள்ள அறிவுறுத்துங்கள்.
சொத்து வரி செலுத்துவதை சொல்லித் தாருங்கள்.

நீங்கள் எந்தெந்த நிதித் திட்டங்களில் முதலீடு செய்துள்ளீர்கள், யார் உங்கள் நிதி ஆலோசகர் என்பதை அவருக்குத் தெரிவியுங்கள். முடிந்தால் சமயம் கிடைக்கும்போதெல்லாம், முதலீட்டு அலுவலகத்துக்கு மனைவியையும் அழைத்துச் செல்லுங்கள். வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும் என்ற எல்ஐசி வாசகம் அனைவருக்கும் பொருந்தும். நீங்கள் வாழும்போது உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் பெறும் அனுபவங்களை சொல்லிக் கொடுங்கள். உங்கள் வாழ்க்கைக்குப் பிறகு அவரது வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக மாறும். உங்களை நம்பி வந்தவர் எப்போதும் உங்களை சார்ந்தே இருக்க வேண்டும் என்று நினைப்பது இன்றைய உலகில் சாத்தியமில்லாததே.

SCROLL FOR NEXT