வணிக வீதி

விலை குறைப்பில் ஹுண்டாய் கோனாவ்

செய்திப்பிரிவு

மின்சார வாகனங்களுக்கான சந்தை இந்தியாவில் உருவாகாதபட்சத்திலும் அதிரடியாக தனது முதல் மின்சார எஸ்யுவி மாடலை அறிமுகப்படுத்தியது ஹுண்டாய் நிறுவனம். கோனா எனப் பெயரிடப்பட்ட இந்தக் கார்தான் சமீபகாலமாக வாகனச் சந்தையில் ஹாட் டாப்பிக். காரணம் தற்போது அதன் விலை ரூ.1.59 லட்சம் குறைக்கப்பட்டிருப்பதுதான். அதுவும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே மாதத்தில் இந்த விலைக் குறைப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரூ.25.30 லட்சமாக அறிமுகப்படுத்தப்பட்ட இதன் விலை தற்போது 1.59 லட்சம் குறைக்கப்பட்டு ரூ.23.71 லட்சமாக உள்ளது. ஏற்கெனவே கோனாவை ஆர்டர் செய்தவர்களுக்கும் இந்த விலைக் குறைப்பு சலுகை உண்டு எனவும் கூறியுள்ளது. இந்த விலைக் குறைப்புக்கு காரணம் மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அரசு குறைத்தது. இந்த வரி குறைப்பு மூலம் கோனாவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. ஹுண்டாய் 11 நகரங்களில் 15 டீலர்ஷிப்களுடன் கோனாவின் விற்பனையை தொடங்கியுள்ளது.

ஒரு மாதத்தில் 130 வாகனங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.  கோனா காருக்கு மூன்று வருட அன்லிமிடட் வாரன்ட்டியும் பேட்டரிக்கு 8 வருடம் /1.6 லட்சம் கிலோமீட்டர் வாரன்ட்டியும் கொடுக்கிறது. இதில் உள்ள 100 கிலோவாட் மோட்டார் 131 பிஹெச்பி பவரையும் 395 என்எம் டார்க் இழுவிசையையும் வழங்கும் செயல்திறன் கொண்டது. இது 9.7 விநாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும்.

இதனால் கோனா பெயரில் மட்டுமல்லாமல் டிரைவிங் செயல் திறனிலும் எஸ்யுவி என்பதை நிரூபிக்கிறது. இதில் 39.2 கிலோவாட் லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ஹுண்டாயின் ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 52 நிமிடத்தில் 80 சதவீத அளவுக்கு சார்ஜ் செய்துகொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஈக்கோ, ஈக்கோ பிளஸ், கம்ஃபோர்ட், ஸ்போர்ட் உள்ளிட்ட நான்கு டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT