மஹிந்திரா நிறுவனம் இருசக்கர வாகனத்தில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை என்றாலும், மஹிந்திராவின் மோஜோவுக்கு இளைஞர்களிடையே வரவேற்பு நன்றாகவே இருந்தது. எனவே மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் என்ற பெயரில் தற்போது மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறது.
முந்தைய எக்ஸ்டி 300, யுடி 300 மோஜோக்களிலிருந்து சில அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மோஜோ 300 ஏபிஎஸ் விலை ரூ.1.88 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ் டி 300 மாடலைவிட ரூ.4,000 மட்டுமே அதிகம். இந்த 300 ஏபிஎஸ் மோஜோவில் எக்ஸ் டி 300 மாடலில் உள்ள எரிபொருள் இன்ஜெக்டட் 294.77 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.
ஆனாலும் எக்ஸ் டி 300-ஐக்காட்டிலும் குறைவான பவரையே வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. எக்ஸ் டி 300 27.17 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் நிலையில், 300 ஏபிஎஸ் 26.29 ஹெச்பி பவரையே வெளிப்படுத்துகிறது. டார்க்கும் குறைவாக உள்ளது. ஆனால் ஆர்பிஎம் அதே 5500 என்ற அளவில் உள்ளது. ஹார்டுவேரை பொருத்தவரை யுடி 300 மாடலில் உள்ள டெலஸ்கோபிக் ஃபோர்க், மோனோஷாக் ஆகியவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் பைரெஸி ஏஞ்செல் சிடி டயர்கள் வழங்கப்படுகின்றன. இதில் எக்ஸ்டி 300-ல் உள்ள 21 லிட்டர் எரிபொருள் டேங்க் பயன்படுத்தப்பட்டுள்ளது. டூரிங் ரைடுக்கு உத்தரவாதம் தரும் வகையில் சீட்டின் உயரம் 815 மிமீட்டாராக உள்ளது.
ஆனாலும் எக்ஸ் டி 300 மோஜோவை ரசிக்க வைத்த ஒரு அம்சம் இந்தப் புதிய மோஜோ ஏபிஎஸ் 300-ல் இல்லை. அது ட்வின் எக்சாஸ்ட். இதில் யுடி 300-ல் உள்ள சிங்கிள் பேரல் எக்சாஸ்ட் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இதில் எல்இடி டிஆர்எல் விளக்குகளும் இல்லை.