சென்னையில் அண்ணா மேம்பாலம் அனைவருக்கும் பரிச்சயமானது. ஒரு புறம் அமெரிக்கத் தூதரகம், மறுபுறம் ராணிசீதை ஹால், இன்னுமொரு புறம் பசுமைப்பூங்கா என எல்லாம் அழகாக இருந்தாலும், எதிர்ப்புறம் ஒரு பலமாடிக் கட்டிடம் அழுக்கடைந்த கான்கீரீட் தூண்களும் பூசப்படாத சுவர்களுமாக பரிதாபமாக நிற்கும்!
திரைப்படங்களில் வில்லன்கள் கூடி சதித்திட்டம் தீட்டும் காட்சிகளைப் படம்பிடிக்க உதவக்கூடிய அமைப்பு அது! அக்கட்டிடம் முற்றுப்பெறாமல் நிற்கக் காரணம் எதுவாயினும், அதைப் பார்க்கும்போது மனதுக்கு வருத்தமாக இருக்கும். பாதியில் நிற்கும் பாலங்கள், சாலைகள், தொழிற்சாலைகள் எல்லாமே கண்களை உறுத்துபவை, மனவேதனை அளிப்பவை!
கொஞ்சம் கட்டப்பட்டு மீதம் முடிக்கப்படாமல் இருக்கும் மொட்டைக் கோபுரத்தைக் கூட நீங்கள் எங்கேனும் பார்த்து இருப்பீர்கள். தலையில்லா முண்டம் போல நிற்கும் அதை நினைக்கும் பொழுது அடாடா இப்படிப் பாதியில் நிற்கிறதே, அந்த இடம் கோபுரமே இல்லாமல் வெற்றிடமாக இருந்திருந்தால் கூடப் பரவாயில்லை எனத் தோன்றும். இவ்வளவு நல்ல வேலையைத் தொடங்கிவிட்டு ஏன் முடிக்கவில்லை, முடியாதென்றால் அதை ஏன் ஆரம்பித்தார்கள் எனவும் எண்ணம் வரும்.
எந்த ஒரு பெரிய முக்கியமான செயலையும் தொடங்கும்முன்பு சுய சோதனை அவசியமில்லையா? வெறும் ஆர்வம் வெற்றி தராது! அதற்கு ஆற்றல் வேண்டும்!! போரைத் தொடங்கி விட்டால் நடுவில் நிறுத்த முடியுமா?
பின்வாங்குவதும் இகழ்ச்சிக்குத்தான் ஆளாக்கும். அதைப் போலவே தொடங்கிய வேலை இடையில் நின்று போனாலும் அவப்பெயர்தான் வரும். திரைப்படத்துறையிலும் பல படங்களின் கதியும் இதுதானே! பாபநாசத்தை வெகுவாக ரசிக்கும் பொழுதும், பாகுபலி பார்த்து பிரமிக்கும் பொழுதும் மருதநாயகத்திற்கு ஏங்குகிறதே மனம்!
அகலக்கால் வைக்கலாமா?
தன்னம்பிக்கை வேறு, தகுதிக்குமீறிய ஆர்வம் வேறு! தேர்வில் தேறுவதற்கு விடாமுயற்சி வேண்டியதுதான், வியாபாரத்திலும் அது அவசியமே. ஆனால் இவையெல்லாம் ஒருவர் தனது தகுதியறிந்து செய்தால்தான் சரியாகும். இப்பொழுது நாம் உள்ள நிலையில் இதை ஆரம்பித்தால் நம்மால் முடிக்க முடியுமா என யோசித்துப் பின்னர்தான் தொடங்க வேண்டுமில்லையா? முதலில் குளத்தில் நீந்தி, ஆற்றில் நீந்தி பின்னர் அல்லவா கடலைக்கடக்க முயல வேண்டும். அஞ்சுவது அஞ்சாமை பேதமை தானே?
தாழ்வு மனப்பான்மை தவறு என்றால் உயர்வு மனப்பான்மையும், தலைக்கனமும் ஆபத்தானவை! வங்கிகளில் கூட பல வாராக் கடன்களுக்கும் காரணம் சில தொழில்முனைவோர் தங்களால் முடியாத விஷயத்தை செய்வதாகச் சொல்லி தொழிற்சாலைகளை ஆரம்பித்துவிட்டுப் பின்னர் முடியாமல் தடுமாறுவதுதான். இவ்வளவு ஏன், ஒரு சராசரி மாணவன் தபால்மூலம் படிக்கலாம் என இரண்டு மூன்று படிப்புகளில் சேர்ந்துவிட்டு, எதையும் முடிக்க முடியாமல் பாதியில் விட்டுவிடுவதையும் பார்க்கிறோம்.
தமது ஆற்றிலின் அளவை அறியாமல் மன எழுச்சியால் தம்மைவிட வல்லோருடன் மோதி தொடங்கிய செயலைப் பாதியில் விட்டுவிட்டோர் பலர் என்கிறது குறள். தொடங்கியதை முடித்து வைத்தால்தான் சிறப்பு, மதிப்பு. எனவே முடியாதென்றால் தொடங்கவே கூடாதல்லவா?
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்
somaiah.veerappan@gmail.com