கடலூரைச் சேர்ந்தவர் எஸ். குமார். பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல பொறுப்பான வேலையில் இருந்தவர். ஆனால் அந்த வேலையில் தொடர்ந்து நீடிக்க மனமில்லாமல் தனியாக தொழிலில் இறங்கியவர்.
குடிநீர் மற்றும் குளிர்பானங்களை அடைக்கும் பெட் பாட்டில் உற்பத்திதான் இவர் தேர்ந்தெடுத்த தொழில். தனது சேமிப்பு, மனைவியின் நகைகள்தான் ஆரம்ப முயற்சிக்கு உதவியாக இருந்தது.
தொழிலில் இறங்குவதற்கு முன்பே அந்த தொழில் குறித்து தெளிவாக திட்டமிட்டிருந்ததால் தோல்வி அடைவேன் என்கிற பயமே இல்லை என்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் எம்எஸ்சி கெமிஸ்ட்ரியில் கோல்டு மெடல் வாங்கியர். இவரது தொழில் அனுபவம் இந்த வார பகுதியில் இடம் பெறுகிறது.
ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்திலேயே, அவ்வப்போது சிலருக்கு தொழில் ஆலோசனைகள் கொடுப்பேன். அப்படிதான் பேக்கேஜிங் மினரல் வாட்டர் நிறுவனங்கள் சிலவற்றுக்கு ஆலோசகராக இருந்தேன்.
அந்த காலகட்டங்களில் மினரல் வாட்டர் உற்பத்தி துறையின் தேவைகள் என்ன என்பதை அறிந்தேன். குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு குடிநீரை அடைக்கும் பாட்டிலுக்குத் தட்டுப்பாடு இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.
இதனால் இந்த தொழில் குறித்து மேலும் தெரிந்து கொண்டு இயந்திரங்களை வாங்கினேன். நவீன இயந்திரங்கள் பயன் படுத்தும்போது தொழிலை விரைவாகவும், நவீனமாகவும் மேற்கொள்ள முடியும் என்கிற யோசனை இருந்தது. எனவே ஆரம்பத்திலேயே நவீன இயந்திரம் மற்றும் தரமான மூலப்பொருள் பயன்படுத்துவது என்பதில் தெளிவாக இருந்தேன்.
சந்தையில் தேவை அதிகமாக இருப்பதால் முதல் யூனிட்டுக்கு பிறகு அடுத்தடுத்த சில இடங்களில் சிறு சிறு யூனிட்டுகளாக தொடங்கினேன். ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு வேலை கொடுத்தேன். தற்போது ஐந்து இடங்களில் உற்பத்தி யூனிட்டுகள் உள்ளன. மேலும் மாவட்ட தொழில் மையங்கள் மூலம் சில ஊர்களில் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் இடம் கிடைத்துள்ளது. எனவே அடுத்த கட்டமாக தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியிலும் உள்ளேன்.
தற்போது நானும் எனது மனைவியுமே தொழிலை கவனித்து வருகிறோம். ஐம்பது பணியாளர்கள் வரை பணியாற்றி வருகின்றனர். சென்னை மற்றும் பாண்டிச்சேரி என ஒரு சில இடங்களில் மட்டுமே உற்பத்தியாளர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று பல உற்பத்தியாளர்கள் பெருகியுள்ளனர். போட்டி அதிகரித்துள்ளது. சந்தையை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனில் தரம் மற்றும் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டும் என்பது என் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டது.
இந்த போட்டிக்கு ஏற்ப நாங்கள் தயாராகிக் கொண்டோம். வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் பல டிசைன்கள் கொடுக்கிறோம். டிசைன்களுக்காக உழைக்கிறோம்.
மேலும் எங்களது ஊழியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள் கொடுக்கிறோம். அவ்வப்போது நடக்கும் பயிற்சி முகாம்களுக்கு அனுப்புகிறோம். உடன் நாங்களும் கற்றுக் கொண்டே வருகிறோம். தொழில்முனைவோராக வளர புதிய புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து இருக்கிறேன்.
எங்களது ஒவ்வொரு தயாரிப்பு யூனிட்டுகளையும் இணைப்பதுபோல சிஸ்டமேட்டிக்காக செயல்படுகிறோம். நேரடி உற்பத்தி தவிர ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்து கொடுக்கும் இரண்டு நிறுவனங்களும் உள்ளது. 2020 ம் ஆண்டில் 20 இடங்களில் உற்பத்தி மையங்கள் அமைக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளேன். அதாவது 20:20 என்பதுதான் இலக்கு.
அடிப்படையில் எங்கள் குடும்பம் விவசாய பின்புலத்தைக் கொண்டது. அப்பா ஆசிரியராக பணியாற்றினார். அவர் சொல்லி வளர்ந்த விதம்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்திருக்கிறது. “ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்து சம்பாதிக்கலாம். சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் ஜாப் கிரியேட்டராக இருந்தால் அதுதான் பயனுள்ள வாழ்க்கை” என்பார். உன்னால் இரண்டு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். அதில் சந்தோஷப்படு என்பார்.
கோடைக்காலத்தில் விவசாய வேலை இருக்காது. ஆனால் மராமத்து வேலை களுக்கு ஆள் அமர்த்துவார். கேட்டால் விவசாய வேலையிலும் கோடைகாலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பார். அந்த உத்வேகம்தான் என்னை 20:20 இலக்கை நோக்கி ஓடவைத்துக் கொண்டிருக்கிறது என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் இந்த கோல்டு மெடல் பட்டதாரி.
- maheswaran.p@thehindutamil.co.in