எனது நண்பர் ஒருவர் வங்கியில் பதவி உயர்வு பெற்று ஓர் கிளையில் மேலாளராகச் சேர்ந்தார். கிளைக்குச் செல்லும் முன்பு கோட்ட அலுவலகத்தில் அவருக்கு வாழ்த்துச் சொல்லிய பலரும் அவரைக் கொஞ்சம் கவலையாகவும் ஏளனமாகவும் பார்த்து உள்ளனர்!
முதலில் பொறாமைப்படுகிறார்கள் போலும் என நினைத்த அவர், மெதுவாக விசாரித்ததில் அக்கிளையில் எழுத்தராக வேலை செய்யும் குப்புசாமி என்பவர் (ஆமாம், பெயரை மாற்றித்தானே எழுத வேண்டும்!) மிகவும் வம்பானவர் என்று சொல்லியிருக்கிறார்கள். குப்புசாமி தனது முந்தைய கிளையில் தனது மேலாளருடன் வாக்குவாதம் செய்ததுடன் அவரது கன்னத்தில் ஓங்கி பளார் பளாரென அறை விட்டவராம்!
நாமோ வெளியூரிலிருந்து வந்திருக்கிறோம். நமக்கேன் வம்பு, என்று எண்ணியவர் குப்புசாமியைத் தனியாக அழைத்து, தனக்கு யார் மேலும் விருப்புவெறுப்பு இல்லையென்றும், அனைவரையும் சமமாக நடத்துவேன் என்றும் சொல்லிவிட்டார்.
ஆனால் குப்புசாமி நாற்காலியில் உட்கார்ந்திருந்த விதமே எரிச்சலூட்டியதாம்! படுத்திருப்பது போல சாய்ந்து உட்கார்ந்திருந்தவர் கேட்டதற்கு முதுகுவலி என்று சொல்லியிருக்கிறார். எந்தப் பேச்சை எடுத்தாலும் எடக்கான பதில்! இந்த வங்கி சரியில்லை; இதில் அதிகாரிகளும் சரியில்லை தொழிற்சங்கமும் இவர்களுக்கு உறுதுணை என்கிற ரீதியில்தான் அவர் பேச்செல்லாம்!
‘பழசையெல்லாம் மறப்போம், நான் உன்னை மதிப்புடன் நடத்துகிறேன்”. என்றெல்லாம் அவரைச் சரிசெய்து சேமிப்புக்கணக்குக் கவுண்டரில் உட்கார வைத்துள்ளார். ஆனால் மறுநாளே வாடிக்கையாளருடன் வாக்குவாதம்! கேட்டால் எனது குரலே அப்படித்தான் என்று பதில். நண்பர் நமது வியாபாரமே படுத்துவிடும் எனப்பயந்து, வாடிக்கையாளர் தொடர்பே இல்லாத டேபுக் எனும் கணக்குப்பிரிவுக்கு குப்புசாமியை மாற்றினார்.
ஆனால் அங்கும் தகராறு குறையவில்லை! அலுவலகத்திலுள்ள அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் வேலை குறித்து குறைகுறையாய்ச் சொல்லிச் சண்டை! அவர் எழுதிய கணக்குகளைப் பார்த்த பொழுது நண்பருக்கு தலை சுற்றியுள்ளது. “2” எழுத வேண்டிய இடத்தில் எல்லாம் அது கண்ணாடியில் இடது வலமாகி தோற்றமளிக்குமே அது போல s என்று எழுதி இருந்ததாம். கேட்டால் கடந்த 30 வருடங்களாக அப்படித்தான் எழுதி வருவதாகவும் எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றும் விளக்கம்!
அடிக்கடி மற்றவர் மேல் புகார் எழுதிக் கொடுப்பதும் இவர் வழக்கம். ஒரு நாள் மேலாளர் வாடிக்கையாளருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரது அறைக்கதவை வேகமாகக் காலால் உதைத்து விட்டு உள்ளே வந்து உடனே ஒரு மனுவை பெற்றுக்கொள்ள வேண்டுமென கத்தியிருக்கிறார்.
நமது நண்பரின் தன்மானம் அப்பொழுது தான் வேலை செய்தது! பொறுக்கமுடியாமல் பொங்கி எழுந்தார்!! மேலதிகாரிகளைக் கேட்டுவிட்டு, குப்புசாமியை பணியிடை நீக்கம் செய்தார். வங்கியில் அமைதி திரும்பியது. அவரை வீட்டுக்கே அனுப்பியது பின்கதை!
சற்றே சிந்திப்போம். குப்புசாமி போன்றவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதற்கு அவர்களை யாரும் தொடக்கத்திலிருந்தே கண்டிக்காததும் தண்டிக்காததுமே காரணமில்லையா? எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கெட்டவனுக்கும் நல்லவனாக இருப்பது சரியல்லவே! தகுதி இல்லாதவர்க்கு நல்லது செய்வதும் தவறுதான் என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார்!
நன்றாற்றல் உள்ளுந் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை
somaiah.veerappan@gmail.com